c மண்ணும் மக்களும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணும் மக்களும்

வழவழப்பு!

செங்கான் கார்முகில்

“நாராய்ணா...’’
வீதியில் நின்று கத்தினார் தங்களான்.
கிராமப்புறங்களில் நல்லது கெட்டதுகளை தண்டூரா போட்டு சொல்வது, கோயில் விஷேசங்களில் கடை கன்னிக்கு ஓடுவது, பஞ்சாயத்து காலங்களில் கூப்பிட்ட குரலுக்கு வரவும் ஓடவும் இருக்கிற ஓடும்பிள்ளைதான் தங்களான்.
தங்களானின் குரலைக் கேட்டதும் நாராயணனின் பொஞ்சாதி அலமேலுக்கு பயம் கப்பியது. தங்களான் ஒருவரை தேடினால் கிராமத்து விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட விசயம் இருக்கிறதென்று அர்த்தம்.
வீட்டிலிருந்து வெளிப்பட்ட நாராயணனிடம், “முத்துக்கருப்பு  கூப்ட்டாரச் சொன்னது. வா, கையோட கூட்டியாரச் சொன்னிச்சி’’ என்றார் அவர்.
‘பொக்’கென்று ஆகிவிட்டது நாராயணனின் மனதும் முகமும். நடை அவ்வளவாக எவ்வவில்லை. நேரப்போகிற அவமானத்தை எண்ணி தளர்ந்துகொண்டிருந்தது மனசு. கூட நடந்துகொண்டிருந்த தங்களானிடம் கூட என்ன ஏதென்று கேட்கவில்லை.
காரணம் இதுதான்! கடந்த இருவது நாட்களாக தனது சவரத் தொழிலைச் சரிவர செய்யவில்லை நாராயணன். சரிவர என்ன சரிவர, சுத்தமாகவே செய்யவில்லை.
ஊருக்கு மேற்குக்கோடியில் ஒதுக்குப் புறமாயுள்ள தனது வீட்டிற்குப் பின்னால் சிறிய கீற்றுக்கொட்டை அமைத்து தொழில் செய்து வந்தார். ஊரிலுள்ளோர் யாவரும் இந்த கொட்டகையில் வந்து முடிதிருத்தம், சவரம் செய்துகொள்வார்கள். ஊர் காரியதரிசிகளுக்கும் பெரிய கைகளுக்கும் மட்டும் வீட்டுக்கே போய் செய்துவிடுவார். ஒருநாளும் கடமை தவறியதில்லை. எந்தெந்த வீட்டாருக்கு எப்போது முடிதிருத்தம் செய்தோம், அடுத்த திருத்தம் எத்தனை நாளைக்கப்புறம் வரும், என மனதிலேயே குறித்துக்கொண்டு ஆள்விட்டு அழைக்கும் முன்பே ‘டான்’னு ஆஜராகிவிடுவார். வாயில் புகையிலையை உருட்டிக்கொண்டே அவர் வேலை பார்க்கும் அழகே பாந்தமாயிருக்கும். பெருந்தனக்காரர் அல்லது முக்கிய காரியதரிசிகள் வீட்டுக்குப் போனால் கொஞ்சம் தாமதமாகவே வெளியே வருவார். இப்படி கழுத்தை வளைத்துப் பார்ப்பதும், புறங்கையால் முகத்தில் எங்காவது முடிக்கட்டை விடுபட்டுள்ளதா என அப்படித் தடவிப் பார்ப்பதுமாக நேர்த்தியை நிரூபித்துக்கொண்டிருப்பார். முடித்துவிட்டு வரும்போது ‘இந்தா’வென மீந்த தின்பண்டங்களையும், சோறுகுழம்பையும் கொடுத்தனுப்புவார்கள். இதற்காக சமயங்களில் ஏனத்தோடே போய்விடுவதுமுண்டு.
மாசத்துக்கு ‘முப்பது படி’ தானியம்தான் கூலி. இது ஊருக்கு. அரிசனக்காரர்களுக்கு வேலை செய்வது தனி. இது அதில் சேர்த்தியில்லை. ஊருக்கு சேதிக்குப் போகணும் வரணும் என்றால் சேரிக்கு செய்கிற வேலையில் கிடைக்கிற வருமானத்தைக்கொண்டு ஓட்ட வேண்டியதுதான். ஆக, பெரிய வருமானம் ஒண்ணுமில்லைதான். ஆனாலும் தொழிலில் ரொம்ப நேர்மையும், தூய்மையும் உள்ள ஆள்தான் நம்ம நாராயணன்.
அப்படியெல்லாம் இருந்தும் இந்த இருபது நாட்களாக ஊரில் ஒருத்தருக்குக்கூட சவரமோ, முடித் திருத்தமோ செய்யவில்லை. உடம்பு சரியில்லை, நாளைக்கு வரேன், கத்தியை சொனப்புக்கு கொடுத்திருக்கேன் என்று ஏதாவது சொல்லி தப்பிச்சுக்கிட்டே வந்துட்டார். ஒருநாள், ரெண்டுநாள் ஓடியது. அப்புறம்  ஆள் வருவது கண்டால் சத்தமில்லாமல் நழுவி காணாமல் போய்விடுவார். பெருந்தனக்காரர்களும் முக்கியஸ்தர்களும் ஆள் அனுப்பி அனுப்பி அசந்துவிட்டார்கள்.
பிரச்சனையெல்லாம் ஒண்ணுமில்லை. நாராய ணனின் சவரக் கத்தியையும் கத்தரிக்கோலையும் காணவில்லை. தேடாத இடமில்லை. பழைய கத்தியைத் தீட்டித் தீட்டிக் கொஞ்ச நாட்கள் ஒப்பேற்றினார். அப்புறம் சரிப்பட்டு வரவில்லை. பிறகுதான் இந்த ‘ஜகா’ வாங்கல்.
கையிலிருந்த காசு பணத்தையெல்லாம் சேர்த்து, பத்தும் பத்தாததுக்கு மிச்ச மீதியிருந்த தானியத்தையும் வித்து சின்ன மகள் பிரசவத்துக்கு கொடுத்துவிட்டதால் உடனே புது கத்தி வாங்க முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாமல் துளிர்விட்டு, உழைப்புக் கருவிகளும் தொலைந்து போனதால் விஸ்வரூபமெடுத்து ‘டீ’க்கே தாளம்போட வைத்துவிட்டது வறுமை. ஊருக்கு இது தெரியுமா? என்ன ஏதென்று கேட்கத்தான் தங்களானை அனுப்பியிருக்கிறார்கள்.
ஊரின் கிழக்கு எல்லை முடிகிற இடத்தில் பெருங்குட்டை போன்ற குளக்கரையில் நிற்கிற இலுப்பை மரத்தடியில் குந்தியிருந்தார் முத்துக்கருப்பு. அவருக்கு இந்தாண்டையும் அந்தாண்டையும் ஒரு மூணு நாலு பேர், முன்னால் ஒரு ரெண்டு மூணு பேர் நின்றார்கள்.
பல்லுக்குத்த உதவாத பிரச்சனையைக்கூட பெருச்சாளி யாக்கும் நெல்லுநாய்க்கரும் இருந்ததை தூரத்தில் வரும்போதே பார்த்தார் நாராயணன்.
‘வரான்’ என்று முனகினார் சொக்கலிங்கஞ் சேர்வை, மரவட்டைக் கால்கள் மாதிரி பழுப்பேறிய மீசையை இருபுறமும் நீவியபடி. இலுப்பை மரத்தை நெருங்கியதும் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டே வந்து ‘சாமி கூப்ட்டிங்களாம்’ என விழுந்து கும்பிட்டு முன்புறமாக உடல் கவிழ்ந்து நின்றார். யாரும் எதுவும் சொல்லாமல் கம்முன்னே இருந்தார்கள்.
அரக்கப் பரக்க ஓடிவந்து சேர்ந்தாள் அலமேலு. நாராயணனை யாரும் எதுவும் செய்யத் தோணாது, முந்தாணையால் உடல்பொத்தி பாவமாக ஒடுங்கி அவள் நிற்பதைப் பார்த்தால்.
“என்னடா. கூப்டாங்களாம். ஒம்பாட்டுக்கு போறியாம். ஒம்பாட்டுக்கு வாரியாம். அவனவன் ஆள் அனுப்பி அசந்து போச்சுங்கறான். நல்லது கெட்டதுக்கு போவேணாமா. தாடியும் தம்பட்டையுமா பரதேசி மாதிரியா போமுடியும். ஒழுங்கா வேல பாக்கமாட்டியா. பேசுடா’’ன்னார் செஞ்சேரித் தம்பு.
கம்முன்னே நின்னார் நாராயணன். ‘அழுத்தத்தப் பாத்தீங்களா’ என்றபடி முத்துக்கருப்புவைப் பார்த்தார் முத்து உடையார். புரிந்துகொள்ளமுடியாத விகாரமான மௌனத்தில் இருந்தது முத்துக்கருப்பு. அங்கிருந்த எல்லோரையும்விட தன்மேல் அதிகம் கோபத்தில் இருப்பவர் முத்துக் கருப்புதான் என்று நினைத்தார் நாராயணன். அந்த வழியாக காடுகரைக்கு போகிறவர்கள், வருகிறவர்கள் நின்று வேடிக்கைப் பார்த்தது கூடுதல் ‘அவமானத்தைத்’ தந்தது.
“பேசேன்டோ, ஊமக்கோட்டானாட்டம் நிக்கிறவன், பொழப்பில்ல எங்களுக்கு. ஏழு நாழி நேரம் நிப்பாங்களா ஒனக்காவ’’ என்றார் நெல்லுநாய்க்கர்.
முத்துக்கருப்புவின் மௌனம் வேறு படபடப்பை உண்டாக்க ‘சாமீ மன்னிச்சிடுங்க, கத்தியவும் கத்திரிக்கோலயும் யாரோ தூக்கிக்கிட்டுப் போய்ட்டாங்க சாமீ ’ என்றார் நைந்த குரலில் நாராயணன்.
‘சொல்றாம் பாரு, சோலியத்தப் பய. தூக்கிக்கிட்டுப் பூட்டாங்களாம். அது பெரிய இது. அதை எடுத்துக்கிட்டுப் போய் வித்து மொதலாக்கப் போறாங்க. போடாப் போடா...ங்க’ என்றார் செஞ்சேரித்தம்பு. ‘தொலச்சிப்புட்டேங்கன்னா வாங்கித் தந்துட்டுப்போறம்’ அக்கறையுடன் சொன்னார் எப்பவும் நியாயத்தின் பக்கம் நிற்கிற மாணிக்க மூப்பனார்.
‘அய்யோ சாமீ! தொலக்கிலீங்க’ என்ற நாராயணனை குறுக்கிட்டு ‘பின்ன சொல்லேன்டா, இன்ன ஆள்தான் தூக்கிக்கிட்டுப் பூட்டான்னு’ என்றார் மாணிக்க மூப்பு, ‘என்னான்னுதான் கேப்பமே’ என்று மத்தவங்க வாயையும் அடைத்துவிட்டு.
நாராயணனால் சொல்ல முடியவில்லை. சொல்லத் தைரியமில்லை. உச்சி வெயில் வேறு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது. புழுக்கம் இம்சித்தது.
பூனை முடி மாதிரி இருக்கிற அரும்பு மீசையை ஒதுக்கிவிடுவது, எப்பப் பார்த்தாலும் அதை மேலுதடு நோக்கி இழுத்து வருடுவது, அதை சவரம் செய்து நிறைய மீசை முடிகள் கத்தையாக வரவேண்டுமென நினைப்பது போன்ற பருவ வயது சில்மிஷக் குறும்புகள் முத்துக்கருப்பு தம்பி மகன் சின்னவனுக்கு வந்திருந்த சமயம் அது.
ஒரு நாள்! வெளுத்த துணிமூட்டையோடு கீழைக்காட்டு வழியே வந்து கொண்டிருந்தார் வண்ணார். ஊருக்கு ஒரு பாவ தூரம் இருக்க வந்தபோது பாதை ஓட்டிப்போகிற ஓடையில் சின்னதாகக் கேட்ட சலசலப்பைப் பார்த்தார். ஹே...ன்னு இளிச்சுக்கிட்டு எழுந்து நிற்கிறான் முத்துக்கருப்பு தம்பி மகன் சின்னவன். கைகளைப் பின்புறம் கொண்டுபோனபோது சவரக்கத்தியையும் கத்திரிக்கோலையும் காட்டிக் கொடுத்தது சூரிய ஒளி. வண்ணாருக்கு  விசயம் விளங்கிற்று.  ‘வயசுப் புள்ளிவளுக்கு சர்வாங்க சவர’ ஆசை வருவது சகஜம்தானுட்டு வந்துட்டார். அவர் சொன்னாரோ, அவனே யாரிடமும் சொன்னானோ நாராயணன் காதுக்கும் வந்துவிட்டது இது.
‘எம் பொருளை எடுத்தது ஒங்க தம்பியாரு மவந்தாங்க’ன்னு எப்படிச் சொல்லமுடியும் நாராயண னால். போதாக்குறைக்கு, நாராயணன்மேல் பழைய கோவம் ஒண்ணு இருக்கு முத்துக்கருப்புக்கு.
முகத்துக்கு தண்ணீர் பதம் தடவிவிட்டு கத்தியை சரிசெய்து வேலையைத் தொடங்கினார். முத்துக்கருப்பு ஒரு சர்வாங்க சவரப்பிரியர். புருவம், மீசை தவிர சகல திரேகமும் பளிங்குமாதிரி இருக்கும். மண்டையின் தரை தெரிகிறமாதிரி கிராப்பு இருக்கும்.
முடிதிருத்தம் செய்து, சவரம் முடித்து அந்தரங்க சவரத்தில் முன்பாதி முடித்து பின்பாதி வந்தார் நாராயணன்.  ஏதோ சில்லிட்டதைத் தொட்டு முகர்ந்தார் முத்துக்கருப்பு.
‘நாராயணா என்னடா இது. சொரை (ரத்தம்) வருதாட்டக்கேடா’
‘தெரியாம பட்ருச்சு சாமி. ஒண்ணும் பண்ணாதுங்க. பட்டுப் போயிரும்’.
‘பாத்துப் பண்ணக்கூடாதா’
‘ஒண்ணுமில்லிங்க. சின்னப் பண்ணை வீட்ல ஊருக்குப் போறாங்களாம். சோறு கொழம்புலாம் வீணாப்பூடும்னு கூப்புட்டுத் தந்துட்டுப் போனாங்க. தயிர் நெய்யெல்லாம் இருந்ததுங்க. நல்ல மணமா இருக்கவும், ரெண்டு நாளா தயிர் நெய் சேர்த்து சாப்புட்டுப் புட்டேங்க. அது என்னடான்னா எப்பப் பார்த்தாலும் வழவழன்னுக்கிட்டே இருக்கு, கை வாயெல்லாம். அதாங்க கத்தி கொஞ்சம் பிசகிட்டுது’ கவடத்துப் போய் உண்மையைச் சொன்னார்.
அதுவரை கம்முன்னு இருந்த முத்துக்கருப்புவை இது  கடுப்பேத்திடுச்சு. ‘மண்ணுல கையைத் தேச்சிக் கழுவிக்கிட்டு வருவியா, அதை உட்டுட்டு என்னடா கத்தி பட்டுடுச்சின்னா, வழவழப்புங்கிறவன், ஏப்பம் விட்டுக்காட்டறவன். பயமத்துப் போச்சுடா, பயமத்துப் போச்சு. வழவழப்பை வாங்கிட்டா எல்லாஞ் சரியாப் போவும்’ என்று சிடைத்துவிட்டார்.
இந்த கோபம் வேற முத்துக்கருப்புக்கு. இப்படியிருக்க, தம்பி மகனை சம்பந்தப்படுத்தி கத்தி விசயத்தை எப்படி சொல்வதென நாராயணன் மனசு தவித்தது. ஆனாலும் சொல்லித்தானே ஆகணும். சொன்னார்.
‘குத்தமா சொல்லலீங்க சாமி. பொருளை வாங்கித் தந்தா போதும். நாம் பாட்டுக்கு பொழப்பப் பாப்பென். நம்ம சின்னய்யா மகன் சின்னவருதான்...’என்று தருவித்தருவித் தொடங்கி கேள்விப்பட்டதையெல்லாம் சொல்லி ‘தப்புருந்தா மன்னிச்சுடுங்க’ன்னு கும்புட்டு எழுந்தார்.
இப்பவும் முத்துக்கருப்பு எதுவும் சொல்லவில்லை. ‘யாரப் பார்த்து என்ன வார்த்தை... நாதாரிப் பயலே!’ என்று தொடங்கி அங்கிருந்த யாவரும் மனம்போல திட்டித் தீர்த்தார்கள். நெல்லுநாய்க்கர் ஓங்கிக்கொண்டு ஓடினார் அறைவதற்கு.
‘அன்னைக்கு என்னடான்னா. வழவழப்புங்கறான், அப்புறம் ஊருலயும் கண்ணுலயும் படாம இருக்கான். கேட்டா கத்திங்கிறான், திருடுங்கிறான். இவனுக்கெல்லாம் எப்படி வருது இப்புடி பேசற தெறம். இது சரிப்படாது, வழவழப்பை எடுத்துடவேண்டியதுதான்’ என நினைத் தாரோ என்னவோ, ‘இந்தாப்பா சும்மா தொணதொணன் னுக்கிட்டு இருக்காத. வேலை செய்யாம ஒளிஞ்சிக்கிட்டு ஏமாத்துனதால பத்து நாள் படி கிடையாது உனக்கு போ’ என்று ரெண்டே வார்த்தையில் முடிச்சுக்கிட்டார் முத்துக்கருப்பு. எப்பவும் அவர் இப்படித்தான். பேசமாட்டார். பேசிவிட்டால் மறுபடி குந்தியிருக்கமாட்டார். துண்டை உதறி தோளில் போட்டு எழுந்தார்.
‘வேலவெட்டி இல்லாம ரொம்ப இம்சைப்படறேஞ் சாமி. படிய நிறுத்துனா எத்தன நாளைக்கிங்க பட்டினி கெடப்பேன். தப்புன்னா மன்னிச்சுடமாட்டீங்களா’ என்று தழுதழுத்தார் நாராயணன். சத்தமில்லாமல் முந்தானை நனைத்தபடி மூக்கு உறிஞ்சிக்கொண்டு நின்றாள் அலமேலு! இருக்காதா!
ஒன்றும் ஆகவில்லை. எல்லோரும் எழுந்து நடக்கத் தொடங்கினார்கள்.
வெய்யில் மின்னலாய் தகித்தது. அலமேலு முத்துக் கருப்பு காலில் விழ ஓடினாள். நாராயணன் மனம் முள்ளில் விழுந்த மழையாய் உடைந்தது. கபகபவென காந்துவதுபோல் இருந்தது வயிறு. கண்களை கப்பி நின்ற கண்ணீர் உகுந்து வழிய அண்ணாந்து பார்த்தபடி, ‘ப்ப்...பகவானே, ஏன் என்ன இப்புடி சோதிக்கிற, எரக்கமேயில்லியா’ என்றார் தனக்கு மட்டுமே கேட்கிறமாதிரி. கண்ணிலிருந்து உகுந்த வேதனை அவர் கன்னத்தைக்கூட தொடவில்லை. மடமடவென ஒரு பெருஞ் சத்தம். பெரிய மதில்சுவர் இடிந்துவிழுவது போன்ற ஓசை.
‘அய்யோ’ என்றது ஒரு குரல். ‘அம்மா’ என்றது ஒரு குரல். ‘கை போச்சே’ன்னது ஒண்ணு. ‘கால் போச்சே’ன்னது இன்னொண்ணு. சிறிது நேரத்திற்குப் பிறகுதான் எல்லாம் புரிந்தது. யானைக் கால்சோட்டு பச்சைக் கிளையொன்று இலுப்பை மரத்திலிருந்து முறிந்து விழுந்திருந்தது. நாயவாதி மாணிக்க மூப்பனார், அலமேலு, நாராயணன் தவிர யாவருக்கும் பலமாகவே அடிபட்டிருந்தது! தூக்கிக்கொண்டு  ஓடினார்கள்.
நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் உண்மையாக நடந்ததாகச் சொல்லப்படும் இச்சம்பவத்திற்குப் பிறகு நாராயணன் விசயத்தை அப்படியே விட்டுவிட்டார்கள், மறந்துபோனது மாதிரி. பிற்பாடு சொத்துபத்தெல்லாம் போய் ரொம்ப தும்பம்பட்டுச் சீரழிந்ததாம் முத்துக்கருப்புவும் அவரது வம்சமும்.
ஆனால் காலம் நிலைநிறுத்த வேண்டியதை நிறுவுவதற்காக சம்பவங்களையும் படிப்பினைகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. ஊரில் சத்தியம், நீதி தவறாக கடைப்பிடிக்கப்படும்பொதெல்லாம் ‘ரொம்ப ஆடாதிங்கப்பா, முத்துக்கருப்பு கதையா ஆயிடப்போவுது’ என  நினைவூட்டிக்கொண்டும் இருக்கிறது.
- மண் மணக்கும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions