c ஒரு பாட்டுப் பயணம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு பாட்டுப் பயணம்

புதிய தொடர்
தோணியாவது கீதம்

பழநிபாரதி

“இங்குள்ள ஜந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக்குந்தான் பாடத்தெரியும். மற்ற மிருகங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்பதால், அவற்றின் மனநிலை சங்கீதத்திற்கு இசைகின்றது போலும்! மனிதன் உடம்பினாலே பறக்காவிட்டாலும் உள்ளத்தைத் திசைவெளியிலே பறக்கும்படி செய்கிறான். அப்போது இயற்கையிலே பாட்டு தோன்றுகிறது.’’
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் வரிகள் இவை. இதைவிட பாட்டின் ஆன்மாவைத் தொட்டு யாரும் பேசிவிட முடியாது.
“காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்”

தூரத்தில் எங்கிருந்தோ எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் தேவதைக் குரல் என்னைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது. நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் பாடல்களைக் குறித்து மனம் அசைபோடுகிறது.
காற்று பாடிக்கொண்டே இருக்கிறது. மரங்கள் ஆடிக்கொண்டே இருக்கின்றன. காற்றை யாரும் பாடச் சொல்லவுமில்லை, மரங்களை யாரும் ஆடச் சொல்லவுமில்லை. இயங்குவதுதான் வாழ்க்கை. இந்த உயிரியக்கம் நின்றுவிட்டால் எல்லாமும் முடிந்துவிடும். அதனால்தான் நமது கடவுளும் ‘ஆடவல் லானா’க இருக்கிறான். அவனை ஒவ்வொரு நாளும் பாடிப் பாடியே நாம் பள்ளியெழ வைக்கிறோம்.
“ஆடிப்பாடி வேலை செஞ்சா                                      அலுப்பிருக்காது - அதில்                                         ஆணும் பெண்ணும்                             சேராவிட்டால் அழகிருக்காது”
என்று ஒரு கவிஞன் பாடுகிறான். ஆடலும் பாடலும் உழைக்கும் மக்களின் கலை.
இயற்கைதான் அவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆடல் அவர்களின் உடல்மொழி. பாடல் அவர்களின் உயிர்மொழி.
அவர்களில் முதற்பாடலை யார் பாடியி ருப்பார்கள்?
யாருக்காகப் பாடியிருப்பார்கள்?
எந்த மனநிலையில் அந்தப் பாட்டு பிறந்திருக்கும்?
எழுதப் படிக்கத் தெரியாத, - உழைக்க மட்டுமே தெரிந்த அந்த முன்னோர்களின் முகங்களை மனம் வரைந்து வரைந்து தேடுகிறது. தங்கள் காதலை, குறும்பான பாலியல் உரையாடலை, அழுகை, கோபம், சந்தோஷம், துக்கம், தனிமை, மரணம், இழப்பு என்று மனிதவாழ்வின் சகல உணர்ச்சிகளையும் மகாகவிகளை மிஞ்சும் கற்பனையழகோடு நாட்டுப்புறப் பாடல்களில் கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
பாரதி, ‘காதல் காதல் காதல் / காதல் போயிற் காதல் போயிற் / சாதல் சாதல் சாதல்’ என்று பாடினான். ஆனால் முகம் தெரியாத நாட்டுப்புறப் பெண்ணொருத்தி,
“ஆசை வச்சேன் உம்மேல
அரளிவச்சேன் கொல்லையில”

என்று அவனையும் தாண்டிய அழகான கற்பனையில் தனது உயிர் ததும்பும் உணர்வுகளைப் பாட்டு வரிகளில் பதியமிட்டுப் போயிருக்கிறாள்.
“மோகனசுந்தரி,வசந்தவல்லி, பத்மாவதி, காந்தருவதத்தை என்ற பெயர்களைக் கேட்கும் போதே நமக்கு நாவலும் காவியமும் நினைவுக்கு வருகின்றன. காதல் நிகழ்ச்சி களும் சிங்கார ரசமும் நிரம்பிய கதையின் நாயகிகளாகத்தக்க கௌரவம் அந்தப் பெயருடைய நாரீமணிகளுக்குத்தான் இருக்கிறதென்று நிச்சயம் செய்துவிட்டோம். ஆனால் ராமாயி, கருப்பாயி, வீராயி என்ற பெயர்களைச் சொல்லும் போதே காதல் கீதல் ஒன்றும் ஞாபகத்துக்கு வருவதில்லை. சுண்ணாம்பு குத்துவதும் வீடு மெழுகுவதும் பாத்திரம் விளக்குவதுமே இந்த ‘ஆயி’களின் தொழில்கள் என்று வைத்துவிட்டோம்.
முத்துவீராயி என்றால் காதல் புரியத் தெரியாதா? அவளுக்கு அழகில்லையா? பெண்மை இல்லையா? இன்பம் இல்லையா? அவளை நாயகியாக வைத்துப் பாடும் பாட்டில் சுவையில்லையா?’’ என்று கேட்கிறார் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன்.
“ஓடுகிற தண்ணியிலே
ஒரசிவிட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே”

என்று பாடிய அந்த நாட்டுப்புறத்துக் காதலி யாரென்று தெரியாது. அவள் உரசிவிட்ட சந்தனத்தின் வாசம் இன்னும் வீசிக்கொண்டே இருக்கிறது.
“ஆத்துக்கு அக்கரையில் - எனக்கு
அத்தை மகன் ஒருவனுண்டு - அவன்
வாய்திறந்து பாடிவிட்டான் - அந்த
வாடை பட்டுச் சூலானேன்”

என்று ஒரு பாட்டைக் கேட்டு அந்த வார்த்தைகளின் கதகதப்பிலேயே கர்ப்பமான பெண் யாரென்று தெரியாது. ஆனால் அவள் காதல் இன்னமும் காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.
ஒரு பெண் தனது பிஞ்சுக் குழந்தையைப் பக்கத்தில் எங்கேயோ விட்டுவிட்டு வந்திருக் கிறாள். மார்பில் பால் சுரக்கவில்லை. யுத்தத் தினாலும் பஞ்சத்தினாலுமான வறுமையில் சித்தாளு வேலைக்கு வந்திருக்கிறாள். சீக்கிரம் போய் குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற தாய்மையின் அவஸ்தை யோடு
“தண்ணி கறுத்திருச்சு
தவளைச் சத்தம் கேட்டிருச்சு
புள்ளையும் அழுதிருச்சு
புண்ணியரே வேலைவிடும்”

என்று கொத்தனாரைக் கெஞ்சுகிறாள். காதல், கர்ப்பம், கண்ணீர், புன்னகை எல்லாமும் பாடல்கள்தான்.
முத்துப் பாட்டன் என்றொரு பிராமணன். பொம்மக்கா, திம்மக்கா என இரண்டு தலித் பெண்களை மணந்துகொள்கிறான். அதற்காகத் தனது அந்தஸ்து, சொத்து, சுகம் அனைத்தையும் இழக்கிறான். உழைக்கும் மக்களைக் காப்பதற்காக, பொதிமாட்டு வியாபாரிகளுடைய வணிகத்தைப் பாது காப்பதற்காக கள்வர்களை எதிர்த்துப் போராடி இறந்துவிடுகிறான். மனைவியர் இருவரும் அவனோடு உடன்கட்டை ஏறி உயிர் விடுகிறார்கள். இந்தச் சம்பவம் முத்துப்பாட்டன் வில்லுப்பாட்டு என்கிற கதைப்பாடலில் வருகிறது.
சின்னத்தம்பி என்கிற தலித் சிறுவன், வேளாண்மைக்கு இடையூறு புரியும் வனவிலங்குகளைக் கொன்று விவசாயி களுக்கு உதவுகிறான். அவன் புகழடைவதை விரும்பாத மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனைப் பலி கொடுக்கி றார்கள். இது சின்னத்தம்பி வில்லுப்பாட்டு.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டுப்புறப் பாடல்கள் வழக்கத்தில் இருக்கின்றன. கம்பர், இளங்கோ, மாணிக்கவாசகர், ஆழ்வார்கள், நாயன் மார்கள், பாரதியார் பலரும் அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இன்றைய திரையிசைப் பாடல்களுக்கு நாட்டுப்புறப் பாடல்களும் அந்தக் கலைஞர் களின் குரல்களும் தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டன. நம் ஒவ்வொரு இதயத்தின் துடிப்பிலும் இரத்தத்திலும் நாட்டுப்புறப் பாடல்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ‘கானா பாடல்கள்’ என்பதும் நமது நகர்ப்புறத்தின் நாட்டுப் பாடல்கள்தான். நாட்டுப்புறப் பாடல்களின் தொடர்ச்சிதான் இன்றைய திரையிசைப் பாடல்கள்.
“பாடல்கள் நிரம்பிய வாழ்க்கையை  யாரால் நிராகரிக்க முடியும்?’’
- பயணம் தொடரும்...

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions