c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

அடுத்த மழைக்கு முன்னால்...
மழை ஒரு வழியாக ஓய்ந்துவிட்டது. சென்னையின் பல இடங்களிலும், பல வாழிடங்களிலும், தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வற்றிக் காய்ந்துவிடவில்லை. உலர்ந்த தமிழனை மருந்திற்கும் காண முடியவில்லை என்று பாரதி சொன்னது போல உலர்ந்த இடம் இன்னும் காணக் கிடைக்கவில்லை.
மழை கூடுதலாகப் பெய்தால் அதைப் பேய்மழை என்று வசைபாட நாம் தவறுவதே இல்லை. மழை எப்போது பேயாக மாறியது? மழை எப்போதும் மழையாகவே இருந்து வந்திருக்கிறது. மண்ணிலும் விண்ணிலும் ஏற்படும் பல தட்ப வெப்பச் சூழலில், பருவ மழையின் அளவு கூடுகிறது, குறைகிறது. ஆனால் மழை எப்போதும் பெய்துகொண்டுதான் இருக்கிறது.
சென்னை அடையாற்றில் மட்டும் அண்மைக் காலங்களில் வந்து கொட்டிய மழை (1985, 2005ஆம் ஆண்டுகளில்) அனுபவங்களை அநேகமாக நாம் மறந்துவிட்டிருப்போம். கடந்த 50 ஆண்டுகளில், சுமார் ஒன்பதுக்கும் மேற்பட்ட சமயங்களில் பெருமழை பெய்து, இயல்பு வாழ்க்கையைக் கலைத்துப் போட்டது. ஆனாலும் அந்த அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றோமா என்றால் இல்லை. கற்றோம். அதாவது மயான வைராக்கியம் மாதிரி. மயானம் வரைக்கும், எரிக்கும் வரைக்கும் நமக்கு ஏற்படும் தத்துவ உணர்வு எத்தனை மணி நீடிக்குமோ அது மாதிரிதான் வெள்ள அவலமும்.
பழைய அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வது இல்லை. அந்தத் துயர நேரங்களில் நாம் அதிர்ந்து கையற்று நிற்கிறோம். அப்புறம் மறந்துபோகிறோம். துன்பங்களிலிருந்து நிரந்தர விடுதலை பெற துன்பம் தருவதாக நாம் நம்பும் மழையே தப்புகிற வழிகளையும் கற்றுத் தருகிறது. ஆனாலும் நாம் திருந்துவதாக இல்லை.
இன்று நேற்றல்ல. உலகம் தோன்றி, மனிதகுலம் தோன்றி, விவசாயம் என்கிற ஆரம்ப விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மனிதர்கள் மழையை ஆராதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மனித வாழ்க்கை, மழையை ஆதாரமாகக் கொண்டது என்பதை கவிஞர்களும் ஞானிகளும் சமூகத்திற்குச் சொல்லியபடியே இருக்கிறார்கள்.
வள்ளுவர், கடவுளுக்கு அடுத்தபடியாக மழையை வைக்கிறார். ஆக்கும் சக்தி அது என்று கூறும் அவர், மனிதகுலம் அஜாக்கிரதையாக இருந்தால் அழிக்கும் சக்தியும்கூட அதுதான் என்று பாடம் நடத்துகிறார். மழையை அலட்சியம் செய்கிற மனிதன் மண்ணின் மேல் புல்லின் முகத்தையும் காண முடியாது என்கிறார். எல்லாவற்றையும் கற்றோம். மறந்து போனோம்.
மன்னர்கள் காலத்தில், ஏரி, குளங்களை உருவாக்கிக் காப்பாற்ற என்றே அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மழைக் காலங்களில், மழை நீருடன் நடந்து, அது எங்கு எந்த இயற்கைப் பள்ளத்தில் போய்ச் சேருகிறதோ அந்த இடத்தைக் குளமாக வெட்டி ஆழப்படுத்தினார்கள். நீர் கொள்ளும் இடம் ‘குளம்’. பெரிய நீர்ப்பிடிப்புக்கு ‘ஏரி’ என்று பெயர். ஏரிகள் விவசாயத்திற்கு உரியவை. ‘ஏர்’ என்ற விவசாயத்துக்கு உதவிய ஏரின் பெயரே ‘ஏரி’ என்று ஆயிற்று. குளத்தையும் விடச் சிறியது ‘குட்டை’. இம்மூன்றையும் சிதைவு நேராத வண்ணம் காப்பது ஊர் மக்கள் கடமை. இன்னும் கிராமங்களில் நீர் நிலைகளுக்குச் சேதமோ, அசுத்தமோ செய்வதை மக்கள் அனுமதிப்பதில்லை. ஆறுகள், இயற்கை தரும் பெரும் பேறு. மக்கள் அதை கரை கட்டி, சமயங்களில் தூர் எடுத்து, பாதுகாத்து வைத்துக்கொள்வது அவர்களின் வாழ்க்கைக் கடமை.
உலக நாகரிகம் ஆற்றங்கரையில் தோன்றியது. ஊர்கள், குடும்பங்கள், மனித உறவுகள், கலைகள், அரசு என்பவை அனைத்தும் ஆறுகளை அடிப்படையாகக்கொண்டே எழுந்தவை. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்கிறது ஒரு பழமொழி. தாய் மன்னிப்பாள். தண்ணீர் மன்னிக்காது. தாயின் மன்னிப்பு, தனி ஒருத்தியின் பிரச்சனை. தண்ணீர் என்பது உலகப் பிரச்சனை. அது, கோபம் கொண்டால், இப்போது செய்ததைப்போல ஊரை அழிக்கும்.
ஊர் அழிக்கப்படக்கூடிய சகல வாய்ப்புகளையும் உருவாக்கி வைத்துக்கொண்டு, அழிபடக் காத்தி ருக்கிறோம் நாம். நீர்நிலைகளின் கரைகளை ஆக்கிரமித்து வீடு கட்டிக்கொள்கிறோம். (அரசு அத்தகு வசிப்பிடங்களுக்கு மின்சாரம் தருவது உலக ஆச்சர்யம்). நீர்ப் பெருக்கு ஏற்படும் (சென்ற மாதம் ஏற்பட்டது போல) சமயங்களில் நீரைக் குளங்கள் வாங்கிக்கொள்ளும். நம் ஊர்களில் லேக் ஏரியா என்றும், டேங்க் ரோடு என்றும் பல இடங்களுக்குப் பெயர் உண்டு. ஆனால் லேக்குகளும் இல்லை. டேங்குகளும் இல்லை. அவற்றின்மேல் பல்லடுக்கு மாடி வீடுகள் நிற்கின்றன. தண்ணீர் எங்கு போய் நிற்கும்? தமிழகத்தின் பல பேருந்து நிலையங்கள், வறண்ட ஏரிகளின் மேல் கட்டப்பட்டன என்பது பெரும்பாலும் பொய் இல்லை. எல்லா நீர்நிலைகளின் மேலும் கட்டிடங்களைக் கட்டிக்கொண்டால், மழை வெள்ள நீர் எங்குதான் போகும்? நீரை உள்ளிழுத்துத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது மணல். அம் மண¬லைச் சுரண்டி ஆற்றைக் கட்டாந்தரையாக்கும் ‘பாவம்‘ நம் தலைமுறையின் சாபங்களில் ஒன்று. இதன் மத்தியில், ‘நீரைப் பங்குதர மாட்டேன்’ என்ற குரல் வேறு. இயற்கை மனிதகுலத்திற்குத் தரும் நீரைத் தம் ‘அலமாரிக்குள்’ வைத்துப் பூட்டிக்கொள்ள ஆசைப்படும் அரசுகள்.
ஒரு நாட்டிற்கு, பிரதேசத்திற்கு, ஊருக்கு மனிதர் வாழ வீடுகள், தொழிற்சாலைகள், எந்த அளவுக்கு முக்கியமானவையோ, அதைவிடவும் முக்கியமானவை நீர் வாழும் இடங்கள். நீர் இல்லாமல் மனித குலம் இல்லை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ நாம் கற்றுக்கொள்ளாவிட்டால், மனிதகுலம் நசியும். இதுதான் நவம்பர் - டிசம்பர் வெள்ளப்பெருக்கு நமக்குக் கற்றுத் தரும் பாடம்.
மக்கள் உழைத்துப் பிழைக்கும், கௌரவம் கொண்டவர்கள். அந்த மக்கள், உணவிற்கும், நீருக்கும் கை நீட்டிய காட்சிகள் மாபெரும் துக்கம் தருபவை. இக்காட்சி மீண்டும் அரங்கேறக் கூடாது. மனித வாழ்க்கைக்கு மீண்டும் ‘வடுவை’ நாம் ஏற்படுத்திவிடக் கூடாது. அப்படியென்றால், நாம் கற்ற மழைப் பாடத்தை மறந்துவிடக் கூடாது. அடுத்துச் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, மக்கள் தங்களுக்கும், இயற்கை வெள்ளத்திற்கும் முறையான இடம் கொடுத்து, சேதங்களைத் தவிர்த்துக்கொண்டார்கள் என்று நாளைய வரலாறு எழுதப்பட்டால்தான் நாம் சிறந்த குடிமக்கள் என்ற பெருமையை அடைவோம்.
மழைக்காலம் வரும். வெள்ளமும் வரும். நகரம் மிதக்கும். மக்கள் துன்பங்களில் மிதப்பார்கள் என்பது தொடர்ந்தால், வரலாறு நம்மை மதிக்காது. காலம் நமக்கு, ‘மறதி மன்னர்கள்’ என்ற பட்டம் தந்து நகர்ந்து போகும். நாம் கழுத்தளவு வெள்ளத்தில் மிதப்போம்.
ஒன்றை அனைவரும் மறந்து விட்டோம்!
பத்தாண்டுகளுக்கு முன்னால், மழைநீர் சேகரிப்பு என்று ஒரு திட்டம் அமலுக்கு வந்ததே. அது என்னவாயிற்று?!

 

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions