c யூத் பக்கங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யூத் பக்கங்கள்


சமூகத்துக்கும் கல்விக்கும் உள்ள சம்பந்தம்?


ஆண்டெல்லாம்  நம் மாணவர்கள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். கணந்தோறும் படிக்கிறார்கள். சரி, அப்படி கற்று முடித்துச் செல்கிறவர்கள் அக்கல்வியின் மூலம் இந்தச் சமூகத்தையும் வாழ்க்கை முறையையும் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள். புரிந்துகொள்ள முடிகிறதா? கற்ற கல்வி சமூகத்தோடு எந்தளவிற்குப் பொருந்திப் போகிறது. ஆகிய கேள்விகளோடு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தோம்.
அவர்களின் அக்கறையான
பதில்கள் இதோ...

சமூகப் புரிதல் இல்லை!

த. தாமரைச்செல்வன் (முனைவர் பட்ட ஆய்வாளர்)
நம் பெற்றோர்கள் மாணவர்களிடத்தில் எதிர்காலம், எதிர்காலம் என்று சொல்லி சிறுவயது முதலே முடுக்கிவிடுகிறார்கள். அவர்களும் ஏதோ பொதி சுமக்கும் விலங்குகளைப் போன்று புத்தகப் பைகளைச் சுமந்து செல்கிறார்கள். பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரிகளுக்குச் செல்லும் அவர்கள் மிக விரைவிலேயே பொருளீட்டக்கூடிய பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். பட்டம் பெறுகிறார்கள். பணிக்கும் செல்கிறார்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வெற்றி பெறச் செய்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.
எந்த சித்தாந்தத்தையும் புரிதலையும் உள்வாங்காத மாணவர்களிடத்தில் மனிதம், சமூகம், அரசியல் பற்றிய அடிப்படை புரிதலை எப்படி எதிர்பார்க்க முடியும்.

சமூகத்துடன் பொருந்தமுடியாது!
ந. பிரகாஷ்
(முனைவர் பட்ட ஆய்வாளர்)

இன்றையச் சூழ்நிலையில் கற்ற கல்வியின் பயனை யாரும் எட்டுவதில்லை. அதற்குக் காரணம் கற்பிக்கப்படுவதும், கற்றலினை பெறுவதும் ஆகும். முழுமையான புரிதல் திறன் கிடையாது. இன்றைய மாணவர்கள் படிக்கின்ற படிப்பு அவர்களின் வாழ்க்கைக்கு உகந்த படிப்பு என்று யாரும் எண்ணுவது இல்லை, வெறும் மதிப்பெண்களுக்காகவும், சான்றிதழ்களுக்காகவும் மட்டுமே. உண்மை என்னவென்றால் யாரும் மனதில் உள்வாங்கிப் படிப்பதில்லை.
மாணவர்கள் அயராமல் படித்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் அதன் பயன் எதுவும் இல்லை. முழுமையாகச் சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமலும், இன்றைய காலச் சூழல்களுக்கு ஏற்ப தன்னைப் பொருத்தப்பாடு உள்ளவனாக மாற்றிக்கொள்ள முடியாமலும் தடுமாறும் நிலை உள்ளது. மாணவர்கள் படித்த படிப்பு ஒன்று, பணி செய்வது மற்றொன்று. படித்தப் படிப்பிற்கும் பணிக்கும் தொடர்பு இல்லை.

அறிவை மட்டும் வளர்ப்பதா கல்வி!
கோ.ப. குணவதி  (முனைவர் பட்ட ஆய்வாளர் )
இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கும், கல்விக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. மக்களின் இன்றைய பண்பாட்டிற்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப இப்போதுள்ள கல்விமுறை அமையவில்லை. கலை, அறிவியல் துறையைத் தேர்வு செய்யும் மாணவர்களால் அக்கல்வியின் வாயிலாக இந்தச் சமூகத்தையும், வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. கற்ற கல்வி சமூகத்தோடு பொருந்திப் போவதாகவும் இல்லை. அறிவை மட்டும் வளர்ப்பது கல்வி அல்ல. “ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது” என்பது போல் இன்றைய கல்விமுறை உள்ளது. சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளைக் களையாத கல்வியாக உள்ளது.

கல்வியிலேயே பாகுபாடு!
து. ரேணுகாதேவி,
(முனைவர் பட்ட ஆய்வாளர்)

“படித்தவன் பாடம் நடத்துகிறான் படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்”
இன்று படித்தவர்களின் நிலை இதுதான். பெரும்பாலும், மனனம் செய்வதால் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்
கள். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியவன் சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல், எழ முடியாது வீழ்ந்துக் கிடக்கும் நிலையை காணமுடிகிறது.  உலகில், அதிக குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கற்றவர்களே. அதற்கு காரணம் நமது கல்விமுறையே.
ஏழைப் பணக்காரர்களுக்கு ஏற்ப கல்வியைத் தேர்வுசெய்யும் ஒரு நிலையே இருக்கின்றது. ஏற்றத் தாழ்வுகளை இன்றைய கல்வி குழந்தைகளுக்கு முளையிலேயே கற்பித்துவிடுகின்றது. மருத்துவம், பொறியியல் கற்கும் மாணவர்களின் கல்வி சமூகத்திற்குச் சிறிது பயன்பட்டாலும்,   அவர்களில் பெரும்பாலா னோரின் கல்வி பணம் திரட்டும் நோக்கிலேயே செல்கிறது. இன்றைய கல்விமுறை சமூகத்தையும், வாழ்க்கை முறையையும் மாணவர்களுக்கு எதிர்கொள்ள கற்றுத் தருவதில்லை.


நல்ல மாணவர்களை உருவாக்குவது நமது கடமை!
செ. மாலதி
(முனைவர் பட்ட ஆய்வாளர்)

மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவும், ஆய்ந்தறியும் பகுத்தறிவுள்ள வனாகவும் மாற்றுவதே கல்வியாகும். இக்கல்வியைக் கற்றவனே மனிதனாகக் கருதப்படுவான். என்றும் அழியாதது நம் கல்விச்செல்வம். பிறருக்குக் கொடுக்க கொடுக்க வளரும் தன்மையுடையது. மற்ற பொருட்செல்வங்கள் அப்படி அல்ல, அது அழியக் கூடியது.
ஆக, இச்சமூகம் வளர்ச்சியடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருபவர்கள் கல்வி உலகத்தில் உள்ளவர்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களும்  மாணவர்களும் இச்சமூகத்திற்கு முதன்மையாளர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து செயல்புரிய வேண்டும் என்பது இவர்களின் தலையாய நோக்கமாகக் கருத வேண்டும்.
ஆனால் இன்று கல்வி கற்றவர்களின் பெரும்பாலோர் கபடான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறார்கள். கல்வியை ஒரு வியாபாரச் சந்தையாகவே மாற்றிவிட்டார்கள். மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதைவிட, பணத்தின் மீதே அக்கறையை செலுத்துகிறார்கள்.
கல்வியினால் இச்சமூகம் பயனடையும் வகையில் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions