c கண்டதைச் சொல்கிறோம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கண்டதைச் சொல்கிறோம்

அரசுப் பேருந்து நிலையங்கள்
எந்தவொரு பயணிக்கும் ஒரு பேருந்து நிலையத்தில் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளில் முக்கியமான நான்கு விசயங்கள், ஓரளவுக்கு நல்ல கேண்டீன், சுத்தமான குடிநீர், இயற்கை உபாதைகளைக் கழிக்க சுகாதாரமான கழிப்பறை, வெயிலுக்கும், மழைக்கும் பாதுகாத்துக் கொள்ள பழுதற்ற கூரை.
இவை எல்லாம் நேர்த்தியாகவோ அல்லது அரைகுறையாகவோ உள்ள பேருந்து நிலையத்தைக் கண்டதாகச் சொல்ல முடியுமா? கோயம்பேடு போன்ற பிரதானமான அரசுப் பேருந்து நிலையங்கள் தவிர்த்து வேறெந்த பேருந்து நிறுத்தங்களிலும் இவற்றை நாம் பார்க்க இயலாது. உணவிற்கும் குடிநீருக்கும் அருகிலுள்ள பெட்டிக் கடையோ, சிறுகடைகளையோ தான் நாட வேண்டியுள்ளது. சரி போகட்டும். கழிப்பறைகள், பெரும்பாலும் இல்லவே இல்லை. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களேகூட பேருந்து நிறுத்தத்தின் ஒரு பகுதியை ஒதுக்கிக்கொள்கிறார்கள்.
பல நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லாததால் கைக் குழந்தைகளுடன் அம்மாக்களும், வயதான முதியவர்களும் இம்சையுடன் நிற்பதைச் சென்னையின் அநேக இடங்களில் பார்க்கலாம்.
நிழற்குடைகள் இல்லாததும் ஒரு வகையில் சரிதான். ஏனெனில் பேருந்துகள் நிறுத்தங்களில் தான் நிற்க வேண்டும் என்கிற ஒழுங்குகளை மறந்துவிட்டனவே. பத்து அல்லது இருபது அடிகள் தள்ளி நிறுத்துவார்கள். மக்கள் ஓட்டப் பந்தயத்தில் போய் பிடிப்பார்கள். கூட்டம் சுமாராக இருந்தாலே சில ஓட்டுநர்கள் நிறுத்துவது மாதிரி வந்து வேகத் தைக் கூட்டி  நிறுத்தாமல் சென்றுவிடுகிறவர்களும் உண்டு. (இப்பேருந்து நிறுத்தங்களால் இன்னொரு லாபம், பிச்சைக்காரர்கள் படுத்துக்கொள்கிறார்கள்).
இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு விசயம், காலநேரம். சில நேரங்களில் ஒரே தடம் எண் கொண்ட பேருந்துகள் நான்கைந்து தொடர்ந்து வரும். பிறகு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு வண்டியும் வராது. நின்று நின்று பார்த்துவிட்டு வெறுத்துப்போய் ஷேர் ஆட்டோவைத் தேடினால் பணம் பத்தாது. எல்லோரும் ஷேர் ஆட்டோவில் போகுமளவிற்கு இன்னும் நம்ம ஊர் வளரவில்லையே சார்!
பேருந்து நிறுத்தங்களின் சுத்தம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், பல பேருந்து நிறுத்தங்கள் மூத்திரக் குப்பிக் கிடங்குகளாகவே உள்ளன. மக்களைக் குறை சொல்ல முடியாது. கழிவறை இல்லாதபோது அவர்களுக்கு மறைவிடம் தேவைதான். பெண்கள் வீடுவரை சித்திரவதையை அடக்கிக்கொண்டுதான் போகிறார்கள், வருகிறார்கள். இதனால்தான் மக்கள் பேருந்து நிலையங்களில் காத்திருப்பதில்லை. வண்டியும் மக்கள் நிற்குமிடத்திற்கே வருகிறது. விளைவாக இட நெருக்கடி, டிராஃபிக் ஏற்படுகிறது. எத்தனை எத்தனை சைடு எபெக்ட்டுகள் பார்த்தீரா?! சில பேருந்து நிறுத்தங்களில் சிறுநீர் கழிப்பிடம் அமைத்தார்கள். நல்லது. அதையுந்தான் நாறடித்துவிட்டார்களே. உள்ளே போகவே முடியவில்லையே. ‘‘சிறுநீர் கழிப்பிடம் கட்டினால் போதுமா, தண்ணீர் வசதி செய்ய வேண்டாமா பாஸ்! அப்புறம் நாடு நாறாமல் என்ன ஆகுமாம்!! மக்களைத் திருத்தவே முடியாது சார்’’ என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமே இல்லை.
இப்போது வெளியூர் பேருந்து நிலையத்திற்கு வருவோம்!
மிகவும் சுலபமாகவும் வெளிப்படையாகவும் தெரியும் ஒன்று, பயணக் கட்டணம்!
நமது நண்பர் ஒருவர் சொன்ன அனுபவம் இது! அவர் பெரம்பலூர் போக வேண்டும். “சார் பெரம்ப...லூர்... ஏறிக்கவா” என்று கேட்க, “சார், திருச்சி டிக்கெட்டுதான், எங்கவேண்ணா எறங்கிக்கங்க” என்றாராம் கண்டக்டர். நண்பர் சமீபத்திய ஆகாய சுனாமி மழையில் பலவற்றையும் இழந்து கவலையுடன் செல்பவர். கையில் பெரிய காசும் இல்லை. வேறுவழியின்றி சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு குழந்தை குட்டிகளோடு பசியுடனேயே ஏறிக்கொண்டார். நான்கு பேர். பெரம்பலூருக்கு 150 ரூபாய்தான். திருச்சிக்கு 200 ரூபாய். நான்கு பேருக்கு 200 ரூபாய் தெண்டம் என்றால் ‘அது எவன் அப்பன் வீட்டு காசு’ என்று பொருமித் தள்ளினார் நண்பர்.
திருச்சி டிக்கெட் கணக்கு காட்ட வேண்டும் என்கிறார்களாம். சரி அப்படியென்றால் பெரம்பலூருக்கு என்று தனி பேருந்து விடவேண்டுமல்லவா? அதுவும் இல்லை. ‘ஏறுனா ஏறு இல்லன்னா அடுத்த வண்டியப் பாரு’ என்று ரொம்பவும் மரியாதையாகச் சொல்கிறார்கள் நடத்துனர் நாட்டாமைகள். அதிகாரிகளிடம் புகார் சொன்னால், ‘சொன்னா யாருப்பா கேக்கறா’ என்ற மலுப்பல்களே பதிலாக வருகின்றன.
தீபாவளி, பொங்கல் மாதிரி பண்டிகை தினமென்றால் சொல்லவே வேண்டாம். அனைத்து வண்டிகளும் எக்ஸ்பிரஸ் கட்டணங்களையே வசூலிக்கின்றன. அங்கே போய் டோக்கன் வாங்குங்கள், இங்கே போய் நில்லுங்கள் என ரிசர்வ் செய்யாதவர்கள் துரத்தப்படுகிறார்கள். ரிசர்வ் செய்தவர்கள் நிலையோ ரொம்ப கஷ்டம். ஒரு நாளும் அவர்களுக்கு சரியான நேரத்திற்கு சரியான பேருந்து கிடைத்ததாக சான்றுகள் இல்லை. ஏதேனுமொரு பேருந்து வரும். சாக்பீஸால் 11.10 என எழுதப்பட்டிருக்கும். தடம் எண் வேறுதான். ஒரு நடத்துனரோ, அல்லது சிறிய லெவல் ஆபீஸரோ ‘11.10 மதுரை எல்லாம் இதுல ஏறுங்க’ என கூவுவார். அடித்துப் பிடித்துக்கொண்டு மக்கள் ஓடுவார்கள். ரிசர்வ் செய்தவர்களே மிகவும் அவதிக்குள்ளாகிறவர்களாக இருக்கிறார்கள். பண்டிகைகளில் எல்லா வண்டிகளுமே பாயிண்ட் டூ பாயிண்ட்தான். இடைப்பட்ட ஊர் டிக்கெட்டுகளை ஏற்ற மாட்டார்கள். “சார்... சார்... ஒரு டிக்கெட்டு சார்” என நாய் மாதிரி நடத்துநர் பின்னால் ஓட வேண்டும். அவர் ‘இல்லை’ என்ற பதிலைக்கூட தர நேரமில்லாமல் போவார். கடைசியில் போனால் போகிறதென்று ஸ்டேண்டிங்கில் ஏறச் சொல்வார். அதுவும்கூட வண்டி நகரும்போதுதான். கூட்டம் அலைமோதும்.
மக்களை வரிசைப்படுத்த எந்த ஏற்பாடும் இருக்காது. ஒரு பேருந்து வரும். சுமார் இருநூறு பேர் பலாப்பழ ஈக்கள் மாதிரி அதை மொய்ப்பார்கள். பெண்களும் குழந்தைகளும் அய்யோ பாவம், தேவாங்கு மாதிரி நிற்பார்கள். இரவு சுருங்கிக்கொண்டே வரும். பண்டிகைக்குப் போக முடியுமா என்ற சந்தேகக் கவலை மக்கள் முகங்களில் தவழும்.
மக்கள், ஒரு கட்டம் வரை எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குமேல் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். மிகச் சுலபமாக யாவற்றையும் சரி செய்கிறார்கள்.
படைபோல திரண்டு அலுவலகம், வழித்தடம், அதிகாரிகள் என சகல மட்டத்திலும் போர்க்குரலை எழுப்புகிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார். அழுகிறார்கள். புலம்புகிறார்கள். பெண்கள் முகம் அதிகாரிகளுக்குப் பாவத்தை வழங்குகிறது. அதுவரை வராத போலீஸ் உடனே வருகிறது. அதிகாரிகள் பிரஷ்ஷாக கீழே இறங்குகிறார்கள். போன் கால்கள் பறக்கின்றன. பேருந்துகள் திடீரென வரிசை கட்டி நிற்கின்றன. காவல்துறை மக்களை வரிசைப்படுத்துகிறது. இரட்டை கட்டணங்களும், நடத்துநர் நாட்டாமைகளும் குரலை தாழ்த்துகின்றன. மக்கள் குரலை உயர்த்தி ‘ஜம்பமாக’ பயணிக்கிறார்கள்.
எல்லாம் சரியானது!
பிரைவேட் பேருந்து நிறுத்தங்களும், நிறுவனங் களும் எப்படியோ இயங்கட்டும். அவற்றுக்கு இந்த விதிமுறை மீறல்களெல்லாம் மிகவும் சகஜமானது. ஆகாய சுனாமியான இம்மழையில் தப்பிப் பிழைத்தோடிய மக்களிடம் ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்த கதை இன்னும் சூடுகூட ஆறவில்லை. ஆனால் மக்களே மக்களுக்கான அரசுப் பேருந்துகளும், பேருந்து நிலையங்களும், அதிகாரிகளும் இப்படி இருப்பது எவ்விதத்தில் நியாயமாகும்!
மக்களின் ஆற்றாமைக்கும் உச்சக்கட்ட எதிர்ப்பு களுக்கும் பிறகு எல்லாம் கனப்பொழுதில் சரியாகிற தென்றால் அதை ஏன் முன்பே செய்திருக்க கூடாது! இம்மனநிலை எவ்வளவு அருவருப்பானது!!
காரணம் ஒன்றுதான், இவர்கள் கடமையைக் கடமையாகச் செய்கிறார்கள், அக்கறையாகச் செய்வதில்லை!!!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions