c குறுந்தொடர் - 3
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

குறுந்தொடர் - 3

இந்தளம்
இசைஆய்வாளர் நா.மம்மது
தேவாரத்திலும், ஆழ்வார் பாசுரங்களிலும் பெருவழக்குப் பெற்ற பண் இந்தளம். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் பாடப்பட்டுவரும் பண். தற்காலம் இப்பண் ‘இந்தோளம்’ என்று பெயர் பெற்றுள்ளது. இப்பண்ணுக்கு காலந்தோறும் வெவ்வேறு பெயர்கள் வழங்கி வந்துள்ளன.
இப்பண்ணின் வேறு பெயர்கள் - மருள், தடவு, நெய்தற்பாணி, செவ்வழிப் பாணி, நோதிறம், துக்கராகம், வடுகு, பண்நீர், கானல் பாணி, நெய்தல்குழல், கைக்கிளைப் பாணி, மருள் இந்தளம், இந்தளம், இந்தோளம். ஆக பதினான்கு பெயர்கள்.
மருள் என்றால் நாகதாளி. மருள் என்ற சொல் மரல் (கற்றாழை) ஆகியுள்ளது.
“கலிமயில் அகவும் மருள் இன்னிசை” என சங்க இலக்கியமான நெடுநல்வாடை (அடி 99) குறிப்பிடுகின்றது. இது மாலை நேரப் பண். எனவே ‘மருள்மாலை’ என சிலப்பதிகாரம், கானல்வரி பாடல்கள் (40, 41, 42, 50, 51) இப்பண் பற்றிக் குறிப்பிடுகின்றன. “மருள்பாடுதல் மெய்ம்மை கொலோ?” என சூடிக்கொடுத்த நாச்சியார் தம் திருமொழியில் (9:8/594) இப்பண் பாடுவதைக் கூறுகின்றார். “குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து’’ என்பார் திருமங்கையாழ்வார்.  தமது பெரியதிருமொழியில் (2:1:2/1049) திருமங்கையின் இப்பாடலுக்கு பெரியவாச்சான் பிள்ளை தரும் மெல்லுரை (வியாக்ஞானம்):
“குறப் பெண்டிரோடே வண்டுகளானவை குறிஞ்சி இந்தளம் என்னும் பண்ணைப் பாடா நின்ற திருமாலை”
“நட்டபாடை மருள் குறிஞ்சியாழ்த்திறம்
”- (பிங்கலம் 1382).
மருள் - குறிஞ்சியாழின் திறன்”- (பிங்கலம் 3934).
எனவே பழங்காலத்தில் இந்தோளப் பண்ணானது, நட பயிரவியில் பிறந்ததாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இக்கருத்தை வலுப்படுத்துவதாக திவாகர, சூடாமணி நிகண்டுச் செய்திகள் அமைந்துள்ளன.
நிறைந்திடும் மருள் குறிஞ்சி என்ப”-சூடாமணி 10:33
“மருள் என்ப குறிஞ்சியாழின் திறத்தொடு’’- சூடாமணி 11:28
“மருள் குறிஞ்சியாழ்த்திறனே” - திவாகரம் 1876
“இந்தளம், மருள் இந்தளமே ஆகும்’’- திவாகரம் 1893
பெரிய திருமொழி 107ஆம் பாடலில் வரும் (1054), “மருட்கள் வண்டுகள் பாடும்” என்ற கூற்றுக்கு, பெரியவாச்சான் பிள்ளை தரும் “மருள் இந்தளம் என்கிற பண்ணை வண்டுகள் பாடாநின்ற” என்ற விளக்கத்தின் மூலம் ‘மருள்’ என்பது இந்தளப் பண்ணே என்று உறுதிப்படுகின்றது.
இந்தளம், தடவு, தூபமூட்டி என்பன நெருப்பு (கனப்பு) எரிக்கப் பயன்படும் மரக்கட்டைகள். மாலையில் இந்நெருப்புக் கணப்பின் அருகில் அமர்ந்து, குளிர் காய்ந்தபொழுது பாடப்பட்ட பண்ணிற்கு இந்தளம் மற்றும் தடவு என்று பெயர்கள் சூட்டப்பட்டிருக்கலாம்.
“மடரவன் மகளிர் தடவு நெருப்பமர்ந்து”- சிலம்பு. 14:99
பண் தடவு சொல்லின் மலை வல்வி
உமைபங்கன் எமையாளும் இறைவன்
” என்று சம்பந்தர் தேவாரம் (3:74:3/3594) இப்பண்ணின் பெயர் ‘தடவு’ என்று குறிப்பிடுகின்றது.
நெய்தல் நிலத்திற்குரிய சிறுபண் (திறம்) நெய்தற்பாணி என்று பெயர் பெறும்.
பண் செவ்வழி என்ற தாய்ப் பண்ணில் பிறந்ததால் செவ்வழிப்பாணி. இப்பண்ணிற்கு ‘துக்கராகம்’ என்றொரு பெயர்.
“துக்கராகம் -  நோகிறமாகும்”- திவாகரம் 13
பரிபாடலில் ஐந்து பாடல்கள் (13 முதல் 17 முடிய) பண் நோதிறத்தில் (பண்ணோதிறம்) இசைப்படுத்தப்பட்டவை.
“இந்தளம், வடுகு எனல்” - பிங்கலம் 1397
“நவிர், வடுகு, வஞ்சி, மருதயாழ்க்கு வரும் திறனாகும்” - பிங்கலம் 1378
“மருதயாழோர் குலம் இந்தளமும் வடுகே”- பிங்கலம் 4020
மேற்குறிப்பிட்ட நிகண்டுச் செய்திகள் இந்தளமும், வடுகும் ஒன்றெனக் கூறுகின்றன. ஆயினும் இதன் தாய்ப் பண், மருதம் (கரகரப்பிரியா) என்று கூறப்படுவதால் வடுகு என்பது ‘வரமு’ என்ற பண்ணாகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
பண்ணீர் வண்டு பரிந்தினைந்து ஏங்கி
கண்ணீர் கொண்டு காலுற நடுங்க
”- சிலம்பு: 13:187-188
பண்ணீர் - பண் + நீர். நீர்ப்பண் - நீர் நிலைப் பண். எனவே நோதிறம் என்ற இந்தப் பண்ணிற்கு, பண்நீர் (பண்ணீர்) என்றொரு பெயர் வழங்கியுள்ளது.
பண் நீர்மையன்றிப் பண்ணீர் என்றமையால் திறம் பன்னிரண்டனுள் நோதிறம் எனவுமாம்” என்று இப்பண் நோதிறம் என்றே அடியார்க்கு நல்லார் தெரிவுபடுத்துகின்றார். கடல்நீர் சூழ்ந்த கடற்கரை (நெய்தல்) பண்ணான இந்தளமானது ‘பண் நீர்’ எனப் பெயர்பெற்றது சிறப்புக்குரியது.
கேரள கதகளியில் இந்தளம் பாடப்படுகின்றது. எனவே மேற்கண்ட செய்திகளால் பக்திப் பனுவல்களில் குறிப்பிடப்படும் ‘இந்தளம்’ என்ற பண் இக்காலத்தில் நாம் பாடிவரும் பண் ‘இந்தோளம்’ என்று உறுதிப்படுகின்றது.
செவ்விழி, தோடி, பவப்பிரியா, நடபயிரவி, சண்முகப் பிரியா ஆகிய தாய்ப் பண்ணில் பண் இந்தளமானது பிறப்புப் பெற ஏது உள்ளது.
ஐந்தன்முறை, கிளை முறை (மத்திமபாவம்,  ளிக்ஷீபீமீக்ஷீ 4tலீ) எனப்படும் முறையில்,
நான்கு சுழற்சியில் -ச ம1, ம1நி1, நி1க1, க1த1
- ச1 க1 ம1 த1 நி1
என்று இந்தளப் பண் கிடைக்கிறது.
ஐந்து சுழற்சியில் - சுத்ததோடியும், ஆறு சுழற்சியில் செவ்வழிப் பண்ணும் கிடைக்கிறது.
ஐந்து சுழற்சி - ச ம1, ம1நி1, நி1க1, க1த1, ச1ரி1 -
- ச1 ரி1 க1 ம1 த1 நி1- சுத்ததோடி
ஆறுசுழற்சி- ச ம1, ம1நி1, நி1க1, க1த1, த1ரி1, ரி1ம2 -
-ச ரி1 க1 ம1 ம2 த1 நி1 - செவ்வழிப்பாலை (செவ்வழிப்பண்)
எனவே இந்தளப் பண், செவ்வழி என்ற தாய்ப் பண்ணில் பிறந்ததாகவே கொள்ள வேண்டும். செவ்வழிப் பண் நெய்தல் நிலப் பண். இந்தளமும் நெய்தல் நிலப் பண். எனவே செவ்வழியே இந்தளத்தின் தாய்ப்பண். நாற்பெறும் பண் வரிசையில் நெய்தல் நிலத்திற்கு (விளரிப்பாலை என்ற தோடியைக் கூறாது) செவ்வழிப் பாலையே குறிப்பிடப்படுவதால் இம்முடிவு மேலும் அரண் பெறுகின்றது.
பெரியபுராணம் தடுத்தாட்கொண்ட புராணத்தின் 75ஆம் பாடலில், இந்தப் பண் வரும் முறையைச் சேக்கிழார் பதிவு செய்திருக்கிறார்.
முறையாய் வரு மதுரத்துடன் மொழி இந்தள முதலில்/குறையா நிலை மும்மைப்படி கூடுங் கிழமையினால் நிறைபாணியின் இசைகொள் புணர் நீடும் புகல் வகையாய் இறையான் மகிழ் இசைபாடினான் எல்லாம் நிகர்இல்லான்.
மும்மைப்படி கூடும் கிழமை என்பது கிளை முறை என்ற மத்திமபாவத்தில் இப்பண் வருமுறை கூறுவது. பாணி என்பதால் இது ஓர் ஐந்து சுரப்பண் என்பது அறியப்படுகிறது. பழங்காலத்தில், சேய்ப்பண் என்ற கிளைப்பண்கள் (சன்னியங்கள்) திறம் என்று அழைக்கப்பட்டுள்ளது. ஆனால் திறம் என்று சிறப்பாகக் கூறுமிடத்து அது 5 சுரப்பண். (பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்று ஏழு, ஆறு, ஐந்து, நான்கு) 5 சுரப் பண்கள் ‘குழல்’ என்றும் பெயர் பெற்றுள்ளது. ஆக ஔடவம் என்று இக்காலம் நாம் அழைக்கும் ஐந்து சுரப்பண்ணிற்கு நம்முன்னோர் திறம், பாணி, குழல் என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தளப் பண்ணில் அமைந்த பக்திப் பனுவல்கள்
1.காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகம் (11ஆம் திருமுறை)
2.சம்பந்தர் தேவாரம் - 1 முதல் 39 பதிகங்கள் (2ஆம் திருமுறை)
3.அப்பர் தேவாரம்-16 முதல் 18 பதிகங்கள் (4ஆம் திருமுறை)
4.சுந்தரர் தேவாரம் - 1 முதல் 12 பதிகங்கள் (7ஆம் திருமுறை)
மூத்த திருப்பதிகம் இந்தளப் பண்ணில் பாடிய மூத்த நாயன்மாரான காரைக்கால் அம்மையாரைப் போற்றி வணங்கும் முறைமையால் சுந்தரர் தம் தேவாரத்தை இந்தளப் பண்ணில் ‘பித்தா பிறைசூடி’ எனத் தொடங்குகிறார். சுந்தரர் இந்தளப் பண்ணில் தம் பக்திப் பனுவலைத் தொடங்கிய செய்தி மேற்கண்ட மாகதையில் சேக்கிழார் தெரிவிக்கின்றார்.
திருவாலி அமுதனாரின் திருவிசைப்பா, ‘அல்லாய்ப் பகலாய் அருவாய்’, பண் இந்தளத்தில் பாடப்படுகிறது.
இப்பண்ணில் அமைந்த நாலாயிரப் பாசுரங்கள்
நம்மாழ்வார் திருவாய்மொழி  
1:8 - ஒடும்புள்
2:8 -அணைவது
3:8 - முடியான
திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழி
1:1 - வாடினேன்
3:8 - நந்தா விளக்கு
6:10 - கிடந்த நம்பி
ஆகிய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் இந்தளப் பண்ணில் பாடப்படுகின்றன.
சம்பந்தரின் தேவாரத்தில் 39 பதிகங்களும், அப்பர் தேவாரத்தில் 3 பதிகங்களும், சுந்தரர் தேவாரத்தில் 12 பதிகங்களும் இந்தளப் பண்ணிற்குரியவை.
இன்றைய நாட்டார் நாடக, நாட்டிய அரங்கிசை, மெல்லிசை, திரைஇசை, பக்தி இசை என்ற அகன்ற பரப்பில் பாடப்படும் பண்ணமைந்த பாடல்களில் இந்தளப்பண் அமைந்த பாடல்களே அதிகமாக உள்ளன.
மென்மையான சுரங்களைக் கொண்ட அல்லது மென்மையான சுரங்களைப் பெரிதும் கொண்ட பண்கள் அவலச்சுவைப் பண்களாகின்றன. அவலச் சுவை (இரங்கற்சுவை) நெய்தல் நில உரிப்பொருள். எனவே விளரிப்பாலை (தோடிப்பண்), செவ்வழிப்பாலை (இருமத்திமத்தோடி), இந்தளம் ஆகியன அவலச்சுவைப் பண்கள். எனவே அவை நெய்தல்நிலப் பண்களாகின்றன. அத்துடன் அவை மாலைநேரத்திற்கு உரியவையாகின்றன.
ஐந்திசைப் பண்களில் தலையாய ஐந்திசைப் பண் முல்லைப்பாணி (மோகனம்) - மோகனத்தின் வன் கைக்கிளை (க2) சுரத்தின் பண் பெயர்ப்பால் (கிரக பேதம்) இந்தளம் கிடைக்கின்றது. எனவே இந்தளப் பண்ணிற்கு, கைக்கிளைப் பாணி என்று பெயர்.
இந்தளப்பண்ணின், மென் கைக்கிளை (க1) முதல் பண்பெயர்க்க முறையே சுத்த சாவேரி, சுத்ததன்யாசி, மோகனம், மத்யமாவதி என்று ஐந்திசைப் பண் ஐந்தில், ஏனைய நான்கு பண்களும் கிடைக்கின்றன. எனவே இந்தளம் ஓர் அனைத்துச் சுரப் பெயர்ப்புப் பண் (சர்வசுர மூர்ச்சனைக்கார ராகம்)
இந்துத்தானி இசையில் மால்கோஸ் (மால்கௌன்ஸ்) என்பது இந்தளப் பண்ணே. இப்பண் உலகெங்கும் வழங்கிவரும் பண். எனவே இந்தளப் பண், ஓர் அனைத்துலகப் பண்.
இப்பண்ணில் அமைந்த திரைப்பாடல்கள்  சில
மனமே முருகனின் மயில்வாகனம்  (மோட்டார் சுந்தரம் பிள்ளை), பூவரசம் பூ பூத்தாச்சு (கிழக்கே போகும் ரயில்), குமுதம் போல் வந்த குமரியே (மூவேந்தர்), நான் தேடும் செவ்வந்திப் பூவிது (தர்ம பத்தினி), ஸ்ரீதேவி என் வாழ்வில் (இளமைக் கோலம்), விழியில் விழுந்து இதயம் (அலைகள் ஓய்வதில்லை).


(முற்றும்)

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions