c ரிக்க்ஷா
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ரிக்க்ஷா

அசோகமித்திரன்
அப்பா அப்பா ரிஷ்கா ரிஷ்கா என்று ரவி உள்ளே என்னிடம் ஓடி வந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்க்ஷா ஒன்று போய்க்கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை.
“ரிஷ்கா இல்லை. ரிக்க்ஷா”
ரவி அருகே வந்தான்.
“எங்கே சொல்லு - ரிக்க்ஷா”
“ரிஷ்கா”
“ரிக்-ஷா”
“ரிஷ்கா”
“ரிக்க்ஷா ”
“ரிஷ்கா”
“அப்படி இல்லை, இதோ பார், ரிக்,”
“ரிக்.”
“ஷா”
“ஷா”.
“ரிக்க்ஷா”
“ரிஷ்கா”
ஊம்கூம், மறுபடியும் சொல்லு,ரிக்.”
“ரிக்.”
“ரிக்.”
“ரிக்.”
“ஷா.”
“ஷா.”
“ஷா.”
“ஷா.”
“ரிக்க்ஷா ”
“ரிஷ்கா”
சிறிது நேரம் மௌனம் நிலவியது.
“பார் ரவி, என்னைப் பார்த்துச் சொல்லு. ரீ.”
“ரீ.”
“இக்.”
“இக்.”
“ஷா.”
“ஷா.”
“ரிக்க்ஷா .”
“ரிஷ்கா.”
“ரிக்க்ஷா.”
“ரிஷ்கா.”
உலகம் ஷணகலம் அசைவற்று இருந்தது.
“ரவி.”
“அப்பா.”
“சரியாச் சொல்லு. ரிக் ரிக் ரிக்.”
“ரிக் ரிக் ரிக் ரிக்”
“ரிக் ரிக் ரிக் ரிக்”
“ரிக் ரிக் ரிக் ரிக்”
“ஷா ஷா ஷா”
“ஷா ஷா ஷா”
“ஷா ஷா ஷா”
“ஷா ஷா ஷா”
“ரிக்க்ஷா,ரிக்க்ஷா”
“ரிஷ்கா,ரிஷ்கா”
“ரிக்க்ஷா ”
“ரிஷ்கா,ரிஷ்கா”
காய்கறி வாங்கப் போன மனைவி திரும்பி வந்துவிட்டாள். வந்த பிறகுதான் அவள் குடையை மறந்துவிட்டு வந்தது தெரிந்தது.
“ஐயோ அவ்வளவு தூரம் மறுபடியும் போக வேண்டுமே!” என்றாள்.
“ரிக்க்ஷாவில் போய்விட்டு வந்துவிடேன்” என்றேன்.
மனைவி என்னை ஏதோ மாதிரி பார்த்தாள்.
“என்ன?” என்றேன்.
“இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?”
“ரிக்க்ஷாவில் போய் விட்டுவா என்றேன்.”
“ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி காதில் விழுந்தது” என்றாள்.
நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருந்தான்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions