c நாமிருக்கும் நாடு:21
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு:21


ஜீவா நீங்கள்தான் இந்தியாவின் சொத்து
சா.வைத்தியநாதன்
1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் தலைவர் ப.ஜீவானந்தம் மறைந்தபோது, தமிழகமே துயரில் ஆழ்ந்தது. இது வெற்று வார்த்தை இல்லை. உண்மை.
ஜீவா வாழ்ந்தது வெறும் 56 ஆண்டுகள்.
இதில் நாற்பது ஆண்டுகள், இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சுயமரியாதை பிரச்சாரத்திலும், தொழிலாளி வர்க்கம், பொதுவுடமை அரசியலிலும், இவைகளுக்கு நிகராக இலக்கியச் செயல்பாடுகளிலும் தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர் அவர். 56 ஆண்டு கால வாழ்க்கையில் 10 ஆண்டுகள் சிறை சென்ற தியாகி அவர். யாரையும் சுலபத்தில் பாராட்டாத பெரியார், “தூய்மையான பொதுவாழ்க்கையின் இலக்கணம் ஜீவா” என்றார்.
ஜீவாவின் புரட்சி வாழ்க்கை அவருடைய எட்டாம் வகுப்பிலிருந்து தொடங்கியது. தன்னோடு பயின்ற, மாணிக்கம் என்ற தலித் சிறுவனைச் சிவன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். தீண்டாமை உச்சத்தில் இருந்த காலத்தில் இது குற்றம் எனப்பட்டது. ‘மாணிக்கம் என் சகோதரன்’ என்றார் ஜீவா. அவர் தந்தை குட்டன்பிள்ளை கோயிலுக்கு அபராதம் கட்ட வேண்டியிருந்தது.
தேசிய வீரர் வ.வே.சு.ஐயர் நடத்தி வந்த சேரமாதேவி குருகுலத்தில் மிக இளம் வயதிலேயே ஆசிரியர் பணி ஏற்றார். ஐயரின் தீண்டாமைக் கொள்கை பிடிக்காமல் காரைக்குடிக்கு அருகில் இருந்த சிராவயல் கிராமத்தில் ஓர் ஆசிரமத்தை உருவாக்கி, அதிகமான தலித் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வந்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அப்போது காந்தி, ‘யங் இந்தியா’ என்ற பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை ஜீவா விசிமர்சித்து அவருக்குக் கடிதம் எழுதினார். காந்தி, தன் கட்டுரையில் சாதி எதிர்காலத்தில் ஒழியும். ஆனால் வருணாசிரம அமைப்பு மாறாது என்று எழுதியிருந்தார் ஜீவா, வருணாசிரம அமைப்பு இருக்கும்வரை, சாதி ஒழியாது என்றும், இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அடுத்த சில மாதங்களில் காந்தி கரைக்குடிக்கு வருகை புரிந்தார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அருகில் இருந்த ராஜாஜி முதலான தமிழகத் தலைவர்களிடம், ‘சிராவயலில் காந்தி ஆசிரமம் என்று ஒன்று இருக்கிறதே, அதை நடத்துகிறவரைப் பார்க்க வேண்டும்’ என்றார். புறப்பட்டும் விட்டார்.
ஆஸ்ரமத்தையும், அதை நடத்துகிற 19 வயது இளைஞன் ஜீவாவையும் கண்டு ஆச்சரியம் அடைந்தார். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார்.
“ஜீவா உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது” என்று கேட்டார் காந்தி.
“எனக்கு ஒரு சொத்தும் இல்லை. இந்தியாதான் என் சொத்து” என்றார் ஜீவா.
“இல்லை நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்றார் காந்தி.
காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டம், அந்நியத் துணி பகிஷ்காரம் முதலான பல காந்தியப் போராட்டத்தில் பங்கு பெற்றார் ஜீவா. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலத்தில், சிறையில், பகத்சிங் அவர் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற கடிதக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. அதைப் பெரியார் புத்தகமாக வெளியிட்டார். அதற்காக அதிகாரப் பூர்வான பதிப்பாளர் பெரியாரின் சகோதரரையும், சகோதரியையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. மொழிபெயர்த்த ஜீவாவும் சிறையிலடைக்கப்பட்டார்.
1932ல் ஜீவா ஒத்துழையாமைப் போருக்காகக் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, முன்னரே மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலரோடும் பரிச்சயம் அவருக்கு ஏற்பட்டது. சிறை நூலகத்திலிருந்த பல மார்க்சிய நூல்களைப் படித்தும், தோழர்களுடன் உரையாடியும் பெற்ற மார்க்சிய ஞானத்தோடு சிறையிலிருந்து வெளியே வந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், பின்னர் பம்பாயிலும் அவர் வாழ்க்கை போராட்டகரமாகவே இருந்தது. தலைமறைவு வாழ்க்கையிலும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதில் அவர் பணி சிறந்திருந்தது.
சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டமன்றம் சென்றார் ஜீவா. ஜீவாவின் தன்னிகரற்ற பேச்சாற்றலைச் சட்டமன்றம் கண்டது  தமிழ்நாடு பெயர் சூட்டலுக்கும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் அவர் பணி மிக முக்கியமானதாக அமைந்தது.
கம்பரையும், கம்பராமாயணத்தையும் இழிவு படுத்தியது ஒரு இயக்கம். அதற்கு எதிராகக் கம்பராமாயணத்தைக் கையில் எடுத்தார் ஜீவா. பிற்காலத்தில் கம்பன் கழகம் அமைய அவர் காரணமாகத் திகழ்ந்தார்.
பாரதியாரைத் தமிழ் நாட்டில் பரப்பிய பெரும் தலைவர் ஜீவா. 1948ல் மற்றும் 1949ஆம் ஆண்டில் பாரதி பாடல்களின் ஒலிபரப்பு உரிமை திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்தது. அச்சுரிமை பாரதியின் தம்பி சி.விசுவநாத ஐயரிடம் இருந்தது. இரண்டுக்கும் எதிராக பாரதியின் கவிதைகள் மக்கள் உரிமையாக, பொதுவுடமையாக வேண்டும் என்று அப்போது எழுந்த பெரும் கிளர்ச்சிக்குப் பெருந்துணை செய்தார் ஜீவா.
அரசியலுக்கு ‘ஜனசக்தி’, இலக்கியத்துக்குத் ‘தாமரை’ என்ற இரண்டு பத்திரிகைகளுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார் ஜீவா. மக்கள் சார்ந்த இலக்கியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லவும், புதிய படைப்புகளை உருவாக்கவும் ஜீவா தொடங்கியதுதான் கலை இலக்கியப் பெருமன்றம்.
ஜீவா ஒரு கவிஞராகவே தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பல பாடல்கள், டி.கே.சண்முகம் போன்ற பெரிய நாடகக் கலைஞர்களால் பாடப்பட்டு புகழ்பெற்றன.
‘‘காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா - என்தோழனே
பசையற்றுப் போனோமடா’’
என்று தொடங்கும் பாடல்.
‘‘பாலின்றிப் பிள்ளையழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாம் அழுவோம்
வீடு முச்சூடும் அழும்!
என்பது போன்ற மொத்தம் 122 பாடல்கள் மற்றும் கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார்.
காமராஜர் சொன்னார்:
‘‘எதையும் படித்தறிந்து சுயமாகச் சிந்தித்துக் கொள்ளும் மேதை. அறிவால், அனுபவத்தால், தேசத்தொண்டால் உயர்ந்தவர்.
சிவாஜி கணேசன்:
‘‘எல்லா அரசியல் கட்சித்தலைவர்களுடனும் நான் பழகி இருக்கிறேன். ஆனால் ஜீவா ஒருவர் தான் அரசியலை வியாபாரமாக்கவில்லை. அது மட்டுமின்றி தூய்மையின் சிகரமாகவும் அவர் திகழ்ந்தார்.’’


-போராட்டம் தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions