c சிறுகதை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறுகதை

இருட்டில் இருந்தவள்
ஆர். சூடாமணி
வனஜாவும் வந்திருந்தாள்.
‘இந்தச் சோகத்திலும் இவள் என்ன அழகு!’ என்ற எண்ணம் தான் அவளை அடையாளம் கண்டு கொண்டதன் முதல் அறிகுறியாக எழுந்தது ஹேமாவின் மனத்தில், உடனேயே: ‘அம்மா பா£க்காமலிருக்க வேண்டுமே!’
அம்மா இங்கே ஹாலில் இல்லை. தனியாக நேற்றிரவு ஒருவேளை அப்பாவின் பக்கத்தில் அழுது புரண்டிருப்பாள். இப்போது குனிந்த தலையுடன் உள் அறையில் உட்கார்ந்திருப்பவள் யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று கவனித்துக்கூட இருக்கமாட்டாள். துக்கம் கேட்க வந்த மற்றவர்களைப் போல் வனஜா உள்ளே வந்து அம்மாவிடம் அநுதாபம் தெரிவிக்கத்தான் முடியுமா? அம்மாவின் கழுத்தில் தாலி இருக்கிறது, அகற்ற வனஜாவின் கழுத்தில் இல்லை. அந்த வேற்றுமையைத் தவிர இருவர் துக்கமும் ஒன்றுதான். யாருக்கு யார் அநுதாபம் தெரிவிப்பது? மேலும், வனஜா உள்ளே வருவதை யார் அநுமதிப்பார்கள் - இப்போது அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யத்துடன் அவளைப் பார்ப்பவர்கள் உட்பட?
இருவர் துக்கமும் ஒன்றுதானா என்ற கேள்வி ஹேமாவிடம் எழுந்தது. அங்கீகரிக்கப்பட்ட துக்கம் அம்மாவுடையது. இப்போது கூட அவள் ஹாலுக்கு வந்து கணவனின் சடலத்தின் மேல் விழுந்து கதறியழலாம். வந்திருக்கும் கூட்டம் ஆமோதிக்கும், அநுதாபம் காட்டும், தொட்டுத் தேற்றும். வனஜா அப்படிச் செய்ய முடியாது. அவளுக்கும் அப்பாவுக்குமிடையே இருந்த உறவு ஊரறிந்த ரகசியம்தான் என்றாலும், ஊரறிந்த ரகசியம் என்ற நிலைக்கு மேல் இம்மியளவும்கூட அது தாண்டி வரமுடியாது.
ஹேமாவுக்கு ஓடிச் சென்று அவளிடம் ஆறுதலாய் ஏதாவது சொல்லிவிட்டு வரவேண்டும் போல் இருந்தது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஹேமா பதினைந்து வயதுச் சிறுமியாக இருந்தபோது வனஜாவை இருமுறை சந்தித்திருக்கிறாள். பிறகு ஒருதரம் இருபதாம் வயதில், தன் திருமணத்தின்போது, இப்போது இந்த முப்பது வயதுக்காரியை வனஜாவுக்கு ஒருவேளை அடையாளம் தெரியாவிட்டாலும் ‘நான்தான் ஹேமா’ என்று சொல்லிக்கொள்ளத் தயங்க வேண்டியதில்லை. அவர்களுக்கு ஒருவரையொருவர் சட்டென்று பிடித்துப் போயிருந்தது அந்த சந்திப்புகளில். “உங்க மகள் உங்க மாதிரியே அழகு” என்று வனஜா அப்பாவிடம் பாராட்டினாள் முதல் சந்திப்பில். ஒரு நாள் மாலை ஹேமா ஒரு பள்ளித் தோழியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் எதிரே அப்பா அவளுக்குப் பரிச்சயமில்லாத ஒரு மங்கையுடன் நடந்து வந்தபோது தான் நிகழ்ந்திருந்தது அந்த முதல் சந்திப்பு. அப்பா “ஹாய் ஹேமா, என்ன, சிநேகிதி வீட்டுக்குப் போய்ட்டு வரியா?” என்று சகஜமாய் விசாரித்தபோது அந்தப் புதியவளின் முகம் கலவரமடைந்தது. ஆனால் அப்பாவோ தொடர்ந்து, “என்ன பயந்துட்டே வனஜா? இந்த ஹேமா என் மகள்தான், ரொம்ப முற்போக்கான மனம். உன்னை நிச்சயம் ஏத்துப்பா. ஹேமுக்குட்டி, திஸ் இஸ் வனஜா. என் சிநேகிதி” என்று சிரித்தார்.
அந்த மாலை நேரப் பொற் கதிரவனின் ஒரு ரேகை இறங்கி வந்து பெண்ணாய் நிற்பது போல் ஒளி மயமாகத் திகழ்ந்தவளை நோக்கி ஹேமா பெருமையில் மிதந்தாள். அழகுக்காகப் புகழப்படுவது - அதுவும் சினிமா நட்சத்திரம் போன்ற ஒரு பேரழகியால்! பதினைந்து வயதில் அது ஒரு போதையாய் இருந்தது. அப்பா ஹேமாவின் தோளை அணைத்து “மகள்னு சொல்றது கூடச் சரியில்லே. மகன். ஷி இஸ் மை ஸன்” என்று கூற, வனஜா “சரியான அப்பா செல்லம் போலிருக்கு!” என்று பூவாய்ச் சிரிக்க, ஹேமாவுக்கு அவ்விருவரையும் சேர்த்துத் தன்னுடன் அணைத்துக் கொள்ளத் தோன்றியது. அம்மாவும் அவளை ‘அப்பாச் செல்லம்‘ என்று சொல்வதுண்டு. ஆனால் புகழ்ச்சியாய் அல்ல. “அவர் செல்லம் கொடுத்து கொடுத்து நீ குட்டிச் சுவராய்ப் போய்க்கிட்டிருக்கே. வீட்டில் எதையும் கவனிக்கிறதில்லை. என் பேச்சைக் கேட்கிறதில்லை” என்று கடிந்து கூறுவாள். அது எங்கே, இந்தப் பெருமை எங்கே!
இரண்டாம் முறை அவள் வனஜாவைச் சந்தித்தது அப்பாவே ஏற்படுத்திய சந்தர்ப்பம். மகளை அழைத்துக்கொண்டு ஒரு நாலு நட்சத்திர ஓட்டலுக்கு அவர் சென்றபோது அங்கு வனஜா இவர்களுக்காகக் காத்திருப்பதை ஹேமா கண்டாள். அப்பா இருவரையும் ‘குடும்ப அறை’க்கு அழைத்துச் சென்றார். சுவையான பம்பாய் உணவு. அதற்கு மேல் சுவையான கலைப் பேச்சு. அப்பா ஒரு தனியார் நிறுவன உத்தியோகஸ்தர் என்பதைவிட ஓர் அமெச்சூர் ஓவியர் என்பதுதான் அவரைப் பொறுத்தவரை முக்கிய விஷயம். சில கண்காட்சிகள் நடத்தியிருந்தார். சென்னையின் சிறந்த கலைஞர்கள் பட்டியலில் மெள்ள மெள்ள இடம் பெற்றுக் கொண்டிருந்தார். வனஜா ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியை. ஒருகால் அவர்கள் அறிமுகம் அந்த வகையில் தொடங்கியிருக்கலாம் என்று பின்னால் ஹேமா நினைத்துக் கொண்டதுண்டு.
கண்களில் ஆர்வ ஒளி மின்ன அவ்விருவரும் இந்தியக் கலை, மேனாட்டுக் கலை, மரபு உத்திகள், தற்காலப் போக்குகள் என்று விதவிதமாய்க் கலையின் உயிர் நாடியை ஆராய்ந்து கொண்டிருந்ததை ஒரு பக்திப் பரவசத்துடன் மௌனமாய்ச் செவியுற்றவாறு அமர்ந்திருந்த ஹேமா, ‘அடடா, இப்படிப்பட்ட ஒருத்தியையல்லவா அப்பா மணந்திருக்க வேண்டும்!’ என்று எண்ணிக் கொண்டாள். ஒத்த ருசிகளில் மட்டுமல்ல, அழகில், அறிவில், அனைத்திலுமே இவர்கள்தான் பொருத்தமான ஜோடி. அம்மாவும் இருக்கிறாளே - மாநிறமாய், சாதாரணத் தோற்றமாய், சமையலறையைத் தவிர வேறொன்றும் தெரியாதவளாய்!... ‘வனஜா என் தாயாக இருந்தால்!’ என்ற ஏக்கம் அந்தப் பதினைந்தாம் வயதில் மிகத் தீவிரமாய் உறைத்தது.
ஒரு வேகத்தில் ஹாலை விட்டுச் சென்று வாசல் வெளிக் ‘கேட்’டிடை வனஜாவை எட்டினாள். எதிரே நின்றாள். பேச முடியவில்லை. பிறகு ஒரு பிரயாசையில், குரல் தாழ, “நான்... ஹேமா” என்றாள்.
மூன்றாம் முறை இவளைச் சந்தித்தது தன் கல்யாணத்தின்போது அவளை மணக்கோலத்தில் பார்க்க வனஜா விரும்பினாளாம். அந்தச் சந்தர்ப்பத்தில் தன் பெற்றோரிடையே நடந்த வாக்குவாதம் ஹேமாவுக்கு இன்னும் நினைவிருந்தது.
திருமண நாளன்று அம்மாவின் கண்கள் அழுது சிவந்திருந்தன. அது அவள் முகத்தை இன்னும் விகாரமாக்குவதாய்த் தோன்ற, ஹேமா கல்யாணக் கூட்டத்தில் தொலைவிலிருந்து தன்னைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பேரழகியைக் கண்டு பதிலுக்குப் புன்னகை செய்தாள்.
இப்போது வனஜாவிடம் புன்னகை இல்லை. அவள் கண்கள் அழுது சிவந்திருந்தன. ஆனால் அம்மாவைப் போலன்றி இந்தக் கண் சிவப்பும் இவளுக்கு அழகாகவே இருந்தது. இவளுக்கு ஏறத்தாழ அம்மாவின் வயது இருக்கும். ஆனால் அம்மா கிழவி போல ஆகிவிட்டிருக்க, இவளிடம் இளமை குறையவில்லை. பத்தாண்டுகளுக்கு முன் தன் திருமணத்தின் போது பார்த்திருந்த வடிவத்தில் அதிக மாற்றமில்லை.
“ஹேமா, எனக்குத் தெரியுமே! எப்படி இருக்கே?”
“நல்லாதானிருக்கேன்” பதிலுக்கு நீங்கள் நலமா என்று கேட்பதா? இந்தச் சந்தர்ப்பத்திலா?”
“இப்ப டில்லியிலிருக்கே இல்ல? குழந்தைக்கு ஆறு வயசு இருக்குமா? பையன்தானே?”
“ஆமாம்.”
எப்படித் தெரியும் என்று வியக்கத் தேவையில்லை. அப்பா சொல்லியிருப்பார்.
“எப்ப வந்தே?”
“முந்தாநாள் காலைல, அப்பாவுக்கு டயாபெடீஸ் ரொம்ப முத்திப் போய் கோமாவில் விழுந்ததுமே அம்மா தந்தி கொடுத்துட்டாங்க.”
வனஜா பேசவில்லை. தலை கவிழ்ந்து நின்றிருந்தாள். ஹேமா சங்கடப்பட்டாள். என்ன பேசுவது? என்னவென்று ஆறுதல் சொல்வது? இவளோடு பேச ஓடி வந்திருக்கவே வேண்டாம். அர்த்தமற்ற செயல், தன் துயரத்தோடு இவளைத் தனியே போக விட்டிருக்கலாம்.
வனஜா நிமிர்ந்தாள். அழுகையா புன்னகையா என்று புரியாத ஓர் உதட்டசைவோடு ஹேமாவைப் பார்த்துத் தலை அசைத்துவிட்டு விரைந்து நடந்து சென்றாள்.
வீட்டுக்குள் திரும்ப ஹேமா தலை திருப்பியபோது மாடி ஜன்னலில் அம்மாவின் முகம் தெரிந்தது. வனஜா வோடு தான் பேசிக் கொண்டிருந்ததை அவள் பார்த்திருக்க வேண்டும். வெறுமை நிறைந்த அம்முகம் உணர்ச்சிகளை மறைக்க நல்லதொரு திரை.
ஆண் வாரிசு இன்றி இறந்து போனவருக்கு ஒரு தாயாதிப் பையன் இறுதிச் சடங்குகள் நடத்த, அப்பாவின் காரியம் முடிந்தது.
வீட்டில் தங்கியிருந்த உறவினர்கள் அனைவரும் உறங்கிய பிறகும் இரவு ஹேமாவுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தவள் எழுந்து உட்கார்ந்தாள். அறைக்கு வெளியே இருட்டில் ‘பால்கனி’யில் சாய்வு நாற்காலியில் அம்மா உட்கார்ந்திருப்பது நிழலாய்த் தெரிந்தது. எழுந்து அங்கு சென்றாள்.
“படுத்துக்கலையாம்மா?”
“ஆகட்டும். படுக்கறேன்.”
ஜலதோஷம் பிடித்தாற்போல் கனத்து ஒலித்த குரலிலிருந்து அம்மா அழுதிருக்கிறாள் என்று தெரிந்தது. தொட்டுச் சமாதானப்படுத்தலாமா? ஆனால் அம்மாவிடம் அதுபோன்ற நெருக்கம் அவளுக்கு என்றுமே இருந்த தில்லை. கையைப் பிடித்துக் கொள்வது, முழங்கால் மேல் தலையைச் சாய்த்துக் கொள்வது, கொஞ்சுவது, எல்லாம் அப்பாவிடம்தான். அப்பா என்ற நினைப்பில் உள்ளே வெடித்த விம்மலை அடக்கிக் கொண்டாள்.
“இருட்டில் உட்கார்ந்திருக்கியேம்மா. விளக்குப் போடட்டா?”
“வேண்டாம்.”
தாயின் அருகில் தரையில் உட்கார்ந்தாள். சிறிது நேரம் கடந்தபின்,
“போய்ப் படுத்துக்க ஹேமா.”
“தூக்கம் வரல்லே.”
“உண்மைதான். அப்பாவும் நீயும் ரொம்ப நெருக்க மில்லையா? இந்தத் துக்கம் ஆற உனக்கு நாளாகும்.”
“உனக்கு மட்டும் என்னவாம்?”
“என் விஷயம் வேறு.”
“சும்மா சொல்லாதேம்மா. உன் குரலே காட்டிக் கொடுத்துடுத்து. நீ இங்கே இருட்டில் அழுதுக்கிட்டுத்தானே இருந்தே?”
அம்மா பேசவில்லை.
“நிஜத்தைச் சொல்லும்மா!”
“ஆமாம்.”
“பின்னே?”
“ஆனால், நான் உன் அப்பாவுக்காக அழல்லே.”
“என்னம்மா சொல்றே! இதை நான் நம்புவேன்னு நினைக்கிறாயா?”
“ஏன் அழணும், உன் அப்பாவுக்காக? அவருக்கு என்ன குறை? வாழ்ந்தவரையில் சந்தோஷமாய் வாழ்ந்தார். எல்லா ஆசைகளையும் நிறைவேத்திக்கிட்டார். யாருக்காகவும் எதையும் விடல்லே. நேரம் வந்தபோது போனார். அவருக்காக நான் துக்கப்பட என்ன இருக்கு?”
ஹேமா மௌனமானாள். தாயின் முகத்தை ஏறிட்டாள். விளக்கு ஏற்றாவிட்டாலும் நிலவொளி இருந்தது. அம்மாவின் சாதாரண முகத்தையும் அதில் படிந்து இறுகியிருந்த விரக்தியையும் தெளிவாய்க் காட்டியது.
இந்த அம்மா ஒரு மனைவி. கணவன் - மனைவி உறவு முறையானது, மரபு சார்ந்தது. எனவே அதில் கவர்ச்சி இல்லை. ‘ரொமான்ஸ்’ இல்லை. எப்போதுமே உலகின் கவனம் காதலியின் மீதுதான். அவளைக் கண்டனம் செய்யும்போதுகூட முக்கியத்துவம் அவளுக்குத்தான். காதலியின் அன்பு, அழகு, சமூக அங்கீகாரம் இன்றியே தன்னைத் தரும் செயலில் உலகம் காணும் தியாகம், சமுதாயத்தில் ஓரத்தில் ஒதுங்கி நிற்கும் அவள் தனிமை  இவைதானே பெரிதாய் வெளிச்சம் போட்டுக் காட்டப் படுபவை? இவைதானே காவியச் சரக்கு ஆகின்றவை?
தானும்தானே சிறுமிப் பருவத்தில் வனஜாவிடம் கிறக்கம் கொண்டு, அவளும் அப்பாவும் நல்ல ஜோடி என்று பாராட்டி, மரபு மீறலின் இந்தக் கவர்ச்சி, கிளர்ச்சி இவற்றின் மினுமினுப்பு ஏதுமின்றி மறைவினுள் புழுங்கும் ஒரு துரோகிக்கப்பட்ட உள்ளம் அதைப்பற்றிய பிரக்ஞையே அந்த முற்றாத கனவுலகப் பருவத்தில் அவளுக்கு வரவில்லை. பிறகு வந்தது  மெல்ல மெல்ல, வயதாக ஆக, கா£வியமில்லாத கண்ணீர் புரியப் புரிய.
டில்லியில் ஒரு சமயம் சிநேகிதி ஒருத்தி, “அடி ஹேமா, உன் வீட்டுக்காரரை நேத்து சாயங்காலம் ஒரு சினிமா தியேட்டர் வாசலில் வேறொரு பெண்ணோடு பார்த்தேன்” என்று சொல்ல, பின்னால் அவள் கணவன் தான் ஒரு நண்பனையும் அவன் மனைவியையும் தன் காரில் சினிமாவுக்கு அழைத்துப் போய் இறக்கிவிட்டதாகவும் நண்பன் டிக்கெட் வாங்கச் சென்றிருந்தபோது அவன் வரும்வரை அவன் மனைவிக்குத் துணையாய்ப் பேசிக் கொண்டு நின்றிருந்ததாகவும் விளக்கிக் கூறியதும் மனக்குமுறல் அடங்கி நிம்மதியுற்ற தினம், அம்மாவை நினைத்து அவள் வெகுநேரம் அழுதிருந்தாள்.
மறுபடியும் ஹேமா தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அது வேறு பக்கமாய்த் திரும்பியிருந்தது. அம்மா தனியாயிருக்க விரும்புகிறாளா? ‘நீ அப்பா பெண்தானே? என்னைப் பற்றி உனக்கென்ன வந்தது?’ என்கிறாளா?
ஹேமா மெல்ல எழுந்தாள். “அப்போ நான் போய்ப் படுக்கறேம்மா.” இரண்டடி எடுத்து வைத்தாள். தயங்கினாள். இருளில், தனிமையில், அமர்ந்திருந்த நிழலுருவை நோக்கினாள். மனசுக்குள் ஒரு கனம் அழுத்தியது. என்றுமில்லாத வழக்கமாய்க் கையை நீட்டி அந்த உருவத்தின் தோளை மென்மையாய்த் தொட்டாள்.
‘எனக்குப் புரிகிறது’ என்ற அந்த மௌனச் செய்தியில் ஒரு பாரத்தை உணர்ந்தவள் போல் அம்மா முகத்தைத் திருப்பாமலே, தன் தோளைத் தொட்ட கையைக் கணநேரம் தன் கையால் பற்றி மூடிக் கொண்டாள்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions