c செங்கான் கார்முகில்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

செங்கான் கார்முகில்

மண்ணும் மக்களும்
வருஷத்துக்கு ஒருதரம் வருவார்கள் மலையாளத்துக் காரர்கள். ஊருக்கு ஒரு மாசம் என்று ஊர் ஊராய்ப் போய்க்கொண்டே இருப்பதுதான் பொழப்பு. கொஞ்சம் பெரிய ஊரென்றால் இரண்டு அல்லது மூன்று மாதங்களென ‘டேரா’ அடித்துவிடுவார்கள். எந்த ஊருக்குப் போனாலும் பள்ளிக்கூடத்துத் திண்ணைகளிலோ, புளியமரத்தடிகளிலோதான் தங்குவதெல்லாம். சுதந்திரமென்றாலும் சுதந்திரம் அப்படியொரு சுதந்திரமாக இருப்பார்கள். அதிலும் ராத்திரியானால் போதும், நிலா வெளிச்சத்தில் ஹோ...வெனக் கிடக்கும் திறந்தவெளியில் படுத்துக்கொண்டு பத்து வீட்டுத் தூக்கத்தைக் கெடுக்கிறமாதிரி ஏதேனுமொரு பாட்டைக் கத்திக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் சொல்லும் கதைகளுக்காகவே,  தூக்கத்தால் தானாய்த் தலை கவிழும்வரை ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். கதை சொல்லும் பாவனையோ படு ரசனையானது. பெரும்பாலும் பேய் பிசாசுகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட கதைகள்தான்.
சரி! வருசத்துக்கு ஒரு தடவை எதுக்கு வருகிறார்களாம்? வசூலுக்குத்தான். தானிய தவசங்கள், காசு, பணம்தான் வசூல். ஊர்க்காரங்களும் தாராளமாகக் கொடுப்பார்கள். கொடுக்காமல் வேறென்ன வேலை வேண்டிக் கிடக்காம். ஊருக்கும் சரி, இங்குள்ளவர்களுக்கும் சரி நல்லது கெட்டது, ராவு காலம், எமகண்டம், தனவரவு, புத்தி வரவு, பிராணி வளர்ப்பு என சகலத்தையும் சொல்கிறார்களல்லவா.
இந்த மலையாளிகளுக்கும், ஊர் சனங்களுக்கும் உள்ள உறவு அபூர்வமானது.
புருஷனுக்கொரு தெரு, பொண்டாட்டிக்கொரு தெரு, மகன்களுக்கு, மருமகள்களுக்குன்னு ஊரிலுள்ள ஒவ்வொரு தெருவையும் பிரித்துக்கொள்வார்கள், ஜோசியம் சொல்லத்தான். மலையாள ஜோசியம் என்றால் கிராமப்புறங்களில் எப்போதும் அதற்கு ஒரு தனி மவுசுதான்.
பொழுது மொளக்யவே அவரவர் தெருவுக்குப் போய்விடுவார்கள். அப்போது அவர்களின்  கோலத்தைப் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும். கணுக்கால் வரையான வேட்டிக் கட்டு, கத்திரிப்பூ, செவ்வந்திப்பூ, வாடாமல்லி மாதிரி பூப்போட்ட சட்டை, காதோடு சேர்த்து போர்த்தின மாதிரி குல்லா போட்டது போன்ற ஒரு தலைப்பா, வரும்படிகளை வாங்கிக்கொள்ள குழந்தை கிடக்கும் தொட்டில் மாதிரி இரண்டு தோள்களிலும் பைகள், துக்குணியூண்டு உடுக்கு மாதிரி கையிலொரு குடுகுடுப்பை மேளம், நெற்றி நிறைய விபூதிப் பட்டை, நடுவில்  குங்கும நாமம், வாய் மணக்க செக்கச்செவேல் வெற்றிலை குதப்பல்.
நமக்குப் புரிகிறதோ இல்லையோ, ‘கேட்டுக் கேள்வியில்லாமல்’ அவம்பாட்டுக்கு வந்து சலுவை யாக திண்ணையில் உட்கார்ந்து ஜோசியம் சொல்லத் தொடங்கிவிடுவான். விருப்பமிருந்தால் கேட்டுக்கொள் ளலாம், இல்லாவிட்டால் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் போய்விடுவான். யாரும் தானியமோ, தவசமோ அல்லது அதற்குப் பொறுமானமுள்ள பணமோ எதுவும் இல்லையென்று சொல்லவும் வாய் வராது. அப்படியே இல்லையென்று ஒண்ணு ரெண்டு ரூபாயைக் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
இவர்களிடமுள்ள படு சுவாரசியமான விஷயம், ராத்திரியில் ‘குறி’ சொல்லப் போவதுதான்.
மேலே சொன்ன கோலத்துடன் நடுச்சாமத்தில்தான் கிளம்புவான் குறி சொல்லப் போகிறவன். முதலில் குலதெய்வத்தை வருந்தி துணைக்கு அழைத்துக்கொள்வான். அப்புறம் ஊரில் இருக்கிற அத்தனை காவல் தெய்வங்களின் கோயில்களுக்கும் போய் வேண்டிக்கொண்டு புறப்பட்டான் என்றால் நடுச்சாமம் ஆகிவிடும். ஊரே அரவமடங்கிப் போய் கப்புசிப்பென்று தூங்கிக்கிடக்கும். கிழங்கட்டைகள் மட்டும் காற்றோட்டமாக வீதியில் குறட்டையடிக்கும்.  
அந்நேரத்தில் குடுகுடுப்பையை ஆட்டிக்கிட்டே ஒத்தையாளாகப் போவான். தன் குலதெய்வத்தின் மேல் அப்புடி ஒரு பக்தியாக பாடல் பாடிக்கிட்டே போவான். அந்தப் பாட்டில்தான் எம்புட்டு உருக்கம். இந்தா வந்துட்டன்... இந்தா வந்துட்டன் என்று தானாக இறங்கி ஓடிவரணும் எப்பேர்ப்பட்ட தெய்வமும். சரி, இப்படி இவன் போறான் போறான்னா எங்க போறான், சுடுகாட்டுக்குத்தான்.
போயி,
“முட்டி போட்டு ஒக்காந்துக்குவானாம். ‘சுடுகாட்டு முண்டை’ங்கிற (அங்காள பரமேஸ்வரியாக இருக்கலாம்) தெய்வத்தை வேண்டுவானாம். அது சுடுகாட்டுத் தெய்வமாம். தன்னோட நாக்கில் வந்தமர்ந்து குறி சொல்ல அடியெடுத்து (சொல்லெடுத்து) கொடுக்கவேண்டுமென வருந்தியழைப்பானாம். அப்பத்தான் ‘குறி குறுமானம்’ கச்சிதமாக இருக்குமாம். நாலு நாழி நேரமாக குந்தினகுந்து எந்திரிக்காமல், அந்த சுடுகாட்டு முண்டையோட உத்தரவு கிடைச்சதும்தான் எந்திரிப்பானாம். அதற்கப்புறம் அவனுடைய நடை, கால் தரையில் பாவுவது அவனுக்கே தெரியாதாம். எங்கெங்கு போகவேண்டுமோ அங்கெல்லாம் அதுதான் தள்ளிக்கொண்டு போவுமாம்.”
நேரில் பாத்தமாதிரியே நம்ம பெருசுகள் சொன்ன கதைகள் இவை. பார்த்திருக்க முடியாது. அரையும் குறையுமாகக் கேட்டறிந்ததாக இருக்கலாம். அவனும் குறி சொல்லும் ரகசியத்தை முழுவதுமாக எப்போதும் சொன்னதில்லை.
இப்போ சுடுகாட்டுத் தெய்வத்தோட அருள் கிடைச்சிப் போச்சி. அந்த அருளோடவே வரான் ஊரிலுள்ள எல்லா முக்கட்டிகளுக்கும் (முச்சந்தி). ஒவ்வொரு முக்கட்டியிலும் நின்று அதற்கென்று இருக்கிற பாடலைப் படிப்பான். முக்கட்டிகளில் இருக்கிற ஆவிகளையும் துணைக்கு அழைக்கத்தான் இப்படியாம்.
இப்படி, சகல ஆவி, தெய்வ, தேவாதிகளோட சக்திகளையும் அருளையும் பெற்றபிறகே குறிசொல்ல ஊருக்குள் பிரவேசிப்பான். ஒரு நாளைக்கு ஒரு தெருதான்.
‘கொள்ளை போறாப்ல’ கொலைக்கும் நாய்களை வைத்தே மலையாளத்தான் வருகிறானென்று தெரிந்துகொள்ளும் ஊர். கதவைச் சாத்திக்கொண்டு அவன் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக கதவில் காதை வைத்திருப்பார்கள். விளக்கைக்கூட அணைத்து விடுவார்கள்.
ஏனென்றால் அவன் வரும்போது வெளியில் நின்றாலோ, விழித்துக்கொண்டு இருப்பது அவனுக்குத் தெரிந்தாலோ, என்னான்னுதான் பா£த்துவிடுவமே என்று அவனைப் பின் தொடர்ந்தாலோ, அவனோடு வரும் ஆவிகளும், தேவாதிகளும் நம்மைப் பார்க்குமாம். நம்மால் அதை எதிர்கொள்ள முடியாதாம். அதனால்தான் வீட்டுக்குள் இப்படி ஒளிந்துகொள்கிறார்கள்.
ஊருக்குள் நுழைந்ததும் நேராக பொது மைதானத்திற்குப் போவான். கிராமத்துக்கென பொதுப்படையான குறிகளைச் சொல்வான். அதாவது ‘சனி மூலை பாட்டையில இருக்கிற இந்த ஒரு தெருவுக்கு, இந்த வருசம் அம்புட்டு செண்டுப்பு இருக்காது. இதச் செய்வமா, அதச் செய்வமாங்கிற ஏட்டா போட்டியிலேயே ஓடும். ஒண்ணும் கைகூடாது. கறுப்பு ராசி பெருவாது. வெள்ளராசி கைதூக்கும். (பன்றி, ஆடு, எருமை, வரகு, மக்காச்சோளம், காக்கா சோளம் போன்றவை கறுப்பு ராசி. பசு, காளமாடு, குறும்பாடு, வெஞ்சாமறை, நெல் இதுவெல்லாம் வெள்ளைராசி). பஞ்சாயத்து களார்ட்டு இருக்காது’ என்று குறி சொல்வான். இப்படி நேரப்போகிறது என்பதையும் சொல்லி, ‘காவல் தெய்வத்திற்கு திருநாள் போட்டால் சரியாப் போவும், மாரிக்குப் பொங்க வச்சா சரியாப் போவும்’ என்று பரிகாரத்தையும் சொல்வான். ஒவ்வொரு வரி சொல்லி முடிக்கும்போதும் குடுகுடுப்பையை ஒரு குலுக்கு குலுக்குவான். அப்புறம் அடுத்த வரி. கூடவே குரைக்கும் நாய்கள்.
கிராமத்துப் பொதுச்செய்தி சொல்லி முடித்ததும் வீதி வீதியாக வருவான். வீதியில் சும்மாவா போவான்.
குடுகுடு மலையாளம்,
அரியலூரு ஒப்பலாயி,
மலையாள ஜக்கம்மா
சுடுகாட்டு முண்டே...
என்று தன்னோடு வரும் தேவாதிகளைப் பெயர் சொல்லிக் கூட்டிக்கொண்டே போவான். வீதிக்குச் சொல்லிக்கொண்டே வந்து வீடு வந்ததும் இப்படிச் சொல்வான்.
கெழமேற்கு வீதி
சனிமூல பாட்டை
கெழக்கு பாத்த இந்த மனைக்கி...
என்பான். அந்த வீட்டார் உசார்.
பட்டவங்க தொனயிருக்கு
வெள்ளராசி பெருவும்
காசு பணம் பொழங்கும்
மாங்கல்ய காரியங் கைகூடும்
குலதெய்வங் காவலிருக்கு
என்று சொல்வான்.
வீட்டுக்குச் செத்தநேரந்தான். சோளப் பொறியாட்டம் படபடவென பொறிந்து தள்ளிவிட்டு அடுத்த வீட்டுக்குப் போவான். குடுகுடுப்பை பனைமட்டையில் பேஞ்ச மழையாட்டம் பொடபொடத்துக்கிட்டே இருக்கும்.
பத்து நிமிடத்தில் குடும்பத்திலுள்ளவர்களின் எண்ணிக்கை, சகோதரர்கள், பட்டவர்கள், ஆடுகள், மாடுகள், நிலபுலன் சொத்து, சுகம் சகலத்தையும் அக்குவேறு ஆணிவேறாய் புட்டுப் புட்டு வைப்பான்.
சிலது தப்பாகிவிடும். சிலது அச்சுப்புள்ளி அடையா ளமாக அப்படியே இருக்கும். அந்த ஆச்சர்யத்தால்தானே இவர்கள் பாடு ஓடுகிறது.
அன்னிக்கும் இப்படித்தான். கிராமத்துக்குப் ‘பொதுக் குறி’ சொல்லி, வீடு வீடாக குறி சொல்லி கடைசியாக கொடியக்காய் மூலை தொங்கலில் இருக்கிற வீட்டுக்கு வந்தான். அது காத்தியோட வீடு.
காத்தி அப்படியொரு அழகானவள். தாயி, தவப்பன், அண்ணன் தம்பி எல்லாம்  இருக்கு. நிறைந்த குணமான வளும் கூட. ஒருத்தர்கிட்ட அதிர்ந்து பேசமாட்டாள். திட்டுத் திடுக்குன்னு யாரையும் எடுத்தெறிந்துப் பேசத் தெரியாது. கொலுசு அதிராமல் நடப்பாள். காத்தீ...ன்னா போதும் ‘என்ன மாமா, என்னா அத்தை, அண்ணே’ன்னு அப்படிவொரு பணிவாக முறை சொல்லி கேட்டுக்கொண்டே கிட்டெ வருவாள். யாரு எவரென்று தெரியாதவர்கள் ரோட்டில் மூட்டை முடிச்சி தூக்கிக்கிட்டு, தெணறிக்கிட்டு வந்தால் காட்டுக்குப் போய்விட்டு வரும் இவள் சும்மா வருவாளா? மாத்தி தூக்கியாந்து ஒத்தாசை செய்வாள். வாரிசு இல்லாத கெழங்கட்டைகள்  வேலை சொன்னால் தட்டாமல் செய்வாள். தண்ணி எடுத்துவந்து தருவாள். விறகு தூக்கிவந்து போடுவாள். ஆடுமாடுகளைத் தன்னோட ஆடுங்களோடு சேத்து ஓட்டிக்கிட்டுப் போவாள்.
ஊரில் நிறைய மீசைங்களுக்கு அவள் அழகில் ஒரு இது. முப்பதைத் தாண்டியும் அப்படி எதுவும் இன்னிக்கு வரைக்கும் இல்லை. இதனால் ‘விடியாமூஞ்சி’, ‘விளங்காதவள்’ என்றும் ஊர் சொல்வது அவளைப் பொறுத்தவரை பெரிய சோகம்தான்.
அவள் வீட்டிற்கு முன்னாடி வர்றான் நம்ப குடுகுடுப்பு. வீட்டிற்குள் ஆடாமல் அசையாமல் நிக்கிது ஆணுபொண்ணு அத்தனையும்.
அவனும் சொன்னான்.
ஆட்டுக்கு, மாட்டுக்கு, காட்டுக்கு... எல்லாத்துக்கும்  சொன்னான். கடைசியாக ஒண்ணு சொன்னான்.
‘இந்தவொரு மனையில, கூடிய சீக்கிரமே... கண்ணான கன்னிக்கி... மங்கலகாரியம் நடக்கப் போவுது’  என்றான்.
மங்கலகாரியம் என்றால். கல்யாணம், வயசுக்கு வருதல், பிள்ளை பெறுதல், திரட்டி சுற்றுதல், காது குத்தல் இவைதான். அப்படிப் பார்த்தால் காத்திக்கு இப்போ கல்யாணம்தான் நடக்க வேண்டும். அந்த வீட்டிலிருந்த கன்னியும் காத்தி ஒருத்திதான்.
இவர்களுக்கு ஒரு பழக்கமிருக்கிறது. ராத்தியில் குறிசொல்லிட்டு காலையில் அதே தெருவிற்கு வந்து வீடுவீடாக கைரேகையும் பாத்துச் சொல்லிட்டு ‘வரும்படி’ வாங்கிக்கொள்வார்கள். அதே மாதிரி காத்தி வீட்டுக்கும் வந்தான். சொன்னான். வரும்படிகளும் ஏகபலம்.
அந்த வருசத்து முறையும் முடிந்து, போய்விட்டு ஆறாவது வருசத்திற்கும் வந்துவிட்டான். இன்னும் காத்திக்குக் கண்ணாலம் கிண்ணாலம் ஒண்ணும் நடக்க வில்லை.
எப்படி நடக்கும்?
அவள்தான் இன்னும் வயசுக்கே வரலியே.


-மண் மணக்கும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions