c புதுக்கவிதை:வேரும் விழுதும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை:வேரும் விழுதும்

தகிக்கும் காமம் செதுக்கிய கவிஞன்
கவிஞர் சிற்பி
பன்முகத் தன்மையும், பழந்தமிழரும், புதுமொழியும் இணைந்த நடையழகும், பரிசோதனைத் தீவிரமும் கொண்டவை
சி.மணியின் எழுத்துக்கள்.
“செய்நேர்த்தியும், எளிதில் எதிலும் சிக்கிக் கொண்டு விடாத ஜாக்கிரதையும், எள்ளலும், புராதனமும், நவீனமும், கலையும், விளையாட்டுத் தனமும் இவர் கவிதைகளில் கலந்து காணப்படுகின்றன.”
ஏறத்தாழ சி.மணியின் பெரும்பான்மை யான கவிதைகளை உள்ளடக்கிய ‘இதுவரை’ தொகுப்பில் க்ரியா செய்திருக்கும் அறிமுகம் இது.
ஆங்கிலப் பேராசிரியராக விளங்கிய        எஸ். பழனிசாமி  ‘எழுத்து’ இதழின் இரண்டாம் ஆண்டில் ‘குகை’ என்ற கவிதையுடன் அறிமுகமானவர் என்று வல்லிக்கண்ணன் குறிப்பிட்ட போதிலும், 1959 நவம்பர் முதல் சி.மணியின் கவிதைகளை ‘எழுத்து’ தரத் தொடங்கிவிட்டது.  முக்கோணம்’ தான் அவருடைய முதல் கவிதை. வியப்பூட்டும் ஒரு தொடக்கத்தை அந்தக் கவிதையிலேயே அடையாளம் காணமுடிகிறது.
காலம் பற்றிய குவிமுகப் பார்வை கொண்டது. ‘முக்கோணம்’. முக்காலம் மூன்றல்ல & ஒன்று & ஒரே முக்கோணம் என்ற பார்வை அபூர்வமானது.
“நினைவும் நம்பிக்கையும் உள்ள மட்டும் போவது எதுவுமில்லை, வருவது ஒன்றுமில்லை. எல்லாம் இருப்பதுவே, நடப்பதுவே.”
இது சி. மணி தருகிற நுண்ணிய தரிசனம். புதுக்கவிதையின் ஆழ்நிலைப் பரிமாணம் தொடக்க நாட்களிலேயே அமைந்து விட்டதன் அடையாளம் இது.
சி.மணி, வே.மாலி, ப.சாமி, செல்வம், ஓலூலு எனப் பல பெயர்களில் களம் கண்டவரென்றாலும் பரவலாக அறியப்பட்ட பெயர் சி.மணி. ‘வரும் போகும்’,  ‘ஒளிச் சேர்க்கை’, ‘இது வரை’, ‘மீட்சி விண்ணப்பம்’ என்பன அவருடைய கவிதைத் தொகுதிகள். மொழிபெயர்ப்பிலும், அகராதியியலிலும் குறிப்பிடத்தக்க பணிகள் செய்துள்ள அவர் சிலகாலம் கலை, இலக்கியம் சார்ந்த அரிய படைப்புகளை வெளியிட்ட ‘நடை’ என்ற இதழையும் நடத்தியவர்.
குமரன் ஆசான் நினைவுப்பரிசு, தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புப் பரிசு, சிற்பி இலக்கிய விருது எனப் பல விருது களைப் பெற்றுள்ள சி.மணி ஆங்கில இலக்கியப் பின்புலத்தோடும், பழந்தமிழ் இலக்கிய நெருக்கத்தோடும் கவிதைகள் படைத்திருப்பதால் கிழக்கும் மேற்கும் அவருடைய எழுத்துக்களில் கை குலுக்கிக் கொள்கின்றன.
தொடக்க நாட்களில் மரணம் அவரை அலைக்கழிக்கும் சக்தியாக இருந்திருக்கிறது. ‘கதவை மூடு’, ‘இறப்பு’ போன்ற கவிதைகளில் இது புலனாகிறது.
“சூடப் பறித்த மலரா
வாட எறிந்த பூவா
கிழியக் கழித்த உடையா
துவைக்கப் போட்ட துணியா
திரியெரிந்த விளக்கா...”

என்றெல்லாம் அலைபாய்ந்து கால் புள்ளியா? முற்றுப்புள்ளியா? என்று தவிக்கிறது மனம் இறப்பை எண்ணி.
கவிதையைக் காலம் புதுப்பித்துத் தருகிறது என்பதைத் தெளிந்தறிந்திருந்த காரணத்தால் ‘யாப்புடைத்தக் கவிதை அணையுடைத்த காவிரி’ என்று பேசுகின்றார்.
அன்று மணிக்கதவை
தாயர் அடைக்கவும்
மகளிர் திறக்கவும்
செய்தார் மாறி மாறி
என்றும்
புலவர் அடைப்ப
கவிஞர் திறப்பர்”

புலமை அடைத்த கவிதையை அசல் கவிஞன் திறந்துவிடுவான் என்பதை ஒரு பழங்கவிதையை முன்வைத்தே புலப் படுத்துகின்றார்.
சி.மணி ஒரு மாறுபட்ட பார்வை படைத்தவரென்பதால் கோடு வளைந்தால் அழகு, ஓசை மாறி ஒலித்தால் இன்பம், என்று ‘அலைவு’ கவிதையில் தெளிவு படுத்துவார்.
ஆங்கிலத்தில் கவிதை இலக்கியத்துக்குத் திசை திருப்பம் தந்த டி.எஸ். எலியட் ‘பாழ்நிலம்’ போன்ற நெடுங்கவிதை கள் பல தந்தவர். அந்தத் தாக்கத்தால் தமிழ்க் கவிதையில் ஒரு நவீனப் பக்கத்தைத் திறந்து வைத்தவர் சி.மணி.
‘வரும் போகும்’, ‘நரகம்’, ‘பச்சையம்’ ஆகியன மூன்றும் குறிப்பிடத் தக்க நெடுங்கவிதைகள். நரகம், மரினா கடற்கரையில், தெருவில், திரையரங்கில் வேட்டையாடும் காமத்தின் உதிர் பிம்பங் களால் செறிந்து கிடக்கிறது. எடுத்துரைப்பில் பழைய இலக்கிய வரிகளின் நடமாட்டம் கிளர்ச்சியூட்டுகிறது. எங்கும்,
கலைந்த மழையுள, மறைந்த பூவுள
தாங்கிய செங்கை தலைக்கண் மேலுள
ஒலித்த வளையுள, ஓய்ந்த விரலுள”

அங்கதன் விளைவால் காமம்& ‘குளிப்பினும் சுடுமே, குளிர் சாந்தம் தெளிப்பினும் சுடுமே’ என்ற அனுபவ மாகிறது.
‘வரும் போகும்’ & பஸ்கள் வந்து போகும் நகர நெரிசலில் மீண்டும் காமம் தன் கை வரிசையைக் காட்டிவிட்டுப் போகிறது.
“மனத்தை அனலாக்கும்
மையிருள் விழித்தீயெரிய
உடலுடன் ஒட்டவைத்த
இருமுள் முனைக் கச்சுடன்
ட்விங்ளிங் நைலான் சோளிமின்ன

காட்சிகள் வரும் போகும்.
‘பச்சையம்’ மீண்டும் பாலுணர்வுக் கொந்தளிப்பையே நியாயப்படுத்திப் பேசுகிறது.
“சொல்கிறார்கள்
எழுத்திலே கூடாதாம்
பாலுணர்ச்சி கூடினால்
பச்சையாம்”

என்று தொடங்கி, ‘முலைக் கோண வலைக் குமரி’களைச் சுற்றி அலைகிறது. பதின் வயது ஏக்கங்களைப் பதிவு செய்ய முனைகிறார் சி.மணி. இக்கவிதைகளை ‘உயிரியல் தேவை’ என்று கவிஞர் சொல்லுவது சிந்திக்கத்தக்கது.
இது சி.மணியின் கவிதைகளில் காணப் படும் ஒரு பரிமாணம்.
‘‘காதல் காதல் என்ப, காதல்
வெறியும் நோயும் அன்றே. நினைப்பின்
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்’’

என்பது அவருடைய கருத்துக்கோணம்.
சி.மணியின் கவிதைகளில் ‘அபத்தம்’ ஒரு  முக்கியக்கூறு என்று கூறலாம். ‘தீர்வு’ என்ற கவிதை இதற்கு எடுத்துக்காட்டு.
“என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றிருந் தால் பிரச்னை இல்லை
மற்ற நேரம் நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தொங்காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.”

சி.மணியைப் பின்பற்றி அபத்தக் கவிதை எழுதியவர்கள் பலர். ஆனால் அவரைப் போலச் சிந்திக்க வைத்தவர்கள் மிகக் குறைவு. ‘தோள் முனைத் தொங்கல்’ என்பதில் ஒரு காட்சிப் படிமம். ‘வடிவத் தொல்லை’ என்பதில் படைத்தவனையே வினாக் குறியாக்கும் பகடி ஆகியவற்றை எல்லாம் பார்க்கலாம்.
படிமமே கவிதை என்று பேசுகிற அளவுக்கு அந்நாட்களில் புதுக்கவிதை உருவாக்கம் நிகழ்ந்தது. சி.மணி அப்படி தன்னைக் குறுக்கி இறுக்கிக் கொள்கிறவர் அல்ல. ஆனாலும் மிக லாகவமாகப் படிமங்களை உருவாக்கும் கவிதைக் கலை அவரிடம் கைகட்டி நின்றது. காலைச் சூரியனைக் குறித்து ‘மீட்பு’ என்றொரு கவிதை.
“கம்பிகள் கூறு போட்ட
கீழ்வான ஆரஞ்சை
சன்னல் நெருங்கி மீட்டேன்”

கவிதையின் சாரம் ஒருபுறம்  இருக்க உள்ளுக்குள் ஓடிப்போய் உட்கார்ந்து கொள்கிறது ஆரஞ்சுப் படிமம்.
சி. மணியிடம் சொற்கள் மாயவித்தை செய்கின்றன. அந்த வார்த்தை அனுபவம் மட்டுமே கூட ஒரு வாசகனுக்குக் கிளர்ச்சியூட்டப் போதுமானதாகும்.
‘தேனிளமைக் காடு’, ‘ஆண்மையின் தோகை’, ‘தேன் நிலா சீழ் வடியும் தொழுநோய்க் கூனள்’, ‘தனிமை விழியில் விழுந்த இனிமை’ என்று சொற்களில் சதுரங்கமாடுகிறார் சி.மணி.
சொற்களின் வழியே சித்திரிக்கும் வாழ்க்கை சுரீலென்று அம்புபோல் வந்து தைக்கிறது.
தமிழகம் கீழுமல்ல
முழுவதும் மேலுமல்ல
உலையேற்றி விட்டுச்
சோறாக்க மறியல்
கிடைத்த பயன்,
பின்னாலும் போகவில்லை
முன்னாலும் நடக்கவில்லை
நடுக்கிணற்றில் நிகழ்காலம்”

நின்று நிதானிக்காமல் ‘நடுக்கிணற்றில் நிகழ்காலம்’ என்ற வரியைத் தாண்டிப் போக முடியாது.
மிகத் தீவிரமாகச் சமகால வாழ்வில் ஓங்கி முன் நிற்கும் காமம் என்ற உணர்வை எத்தனை வகையாகப் படைத்துக் காட்டுகிறார் என்று ஆச்சரியப்பட்டுப் போகிறோம்.
காமம்,
பலநோய் ஒருமொழி
புற்று சோகை ஈளை
இரத்த அழுத்தம் இன்னுமென்ன
உண்டோ அத்தனை அத்தனையும்
காமத்துள் அடக்கம்”

என்பது ஒரு விளக்கம். மீண்டும் மற்றோர் இடத்தில் சொல்கிறார்:
இதழ்தரும் சிரிப்பொலி
தெறித்து வளைந்து சுருண்டு
சுழன்று சுழியிட்டு வந்து
உந்திச் சுழிக்குத் தீயிட்டு
முதுகுத் தண்டை எரியவிட்டு
மூளை நெளிவை நேராக்கும்
சூளையாய்த் தகிக்கும் சூட்டால்.

காரணம் எதுவானால் என்ன? இன்றைய தலைமுறை காமம் என்னும் சூளை நெருப்பில் வெந்து தகிப்பதை யார்தான் மறுக்க முடியும்? அந்தத் தகிப்பைச் சொற்களில், கவிதையில் சுமந்த கலைஞன் சி. மணி.


- தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions