தகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது!
வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது!
KAVIYAN FOUNDATION - வழங்கும்
"Lead India" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்
- ஒரு விரிவான பார்வை
தினகரன் ஜெய்
பொது நலத்தில் ஈடுபாடும் சமூக அக்கறையும் கொண்ட சிந்தனையாளர்களால் தான் சமூகத்தில் பல ஆக்கப்பூர்வமான நற்செயல்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. சமுதாயத்திற்குத் தன்னலமற்றச் சேவைகளைச் செய்யும் மனிதர்களால்தான் சமூகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதே வேளையில், 'எவர் ஒருவரும் தான் மேற்கொள்ள விரும்பும் சமூகக் கடமைகளை காலம் தாழ்த்தாமல் தொடங்கிவிட வேண்டும். அப்பொழுதுதான் இன்றைய நமது சமூகம் வெளிச்சத்தை நோக்கி வேகமாக முன்னேறும்'. அவ்வகையில், காலத்தின் தேவை கருதி களப்பணி கண்ட திட்டம் தான் காவியன் கன்ஸ்ட்ரக்சன் பிரைவெட் லிமிடெட் (KCPL) நிதி உதவியோடு காவியன் அறக்கட்டளை செயல்படுத்தும் - Lead India ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடுக்கு அருகில் சிறுமலை அடிவாரத்தில் அம்மையநாயக்கனூரில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது காவியன் பள்ளி. அந்தப் பள்ளி வளாகத்தின் விளம்பரப் பதாகையில் சிறுவன் ஒருவன் கைகளை மடக்கி வெற்றி முத்திரை காட்டி நிற்கிறான். அந்தப் பதாகையில், "நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளரும் தமிழ்ப் பிள்ளைகளைத் திறன்மிகு பண்பாளர்களாக்கி அரசு உயர் பணிகளில் அமர அடித்தளம் அமைப்பது" என்ற 'காவியன் அறக்கட்டளை'யின் சீரிய தொலைநோக்கு வாசகம் நம் கவனத்தைக் கவர்கிறது. இத்தகைய அறிவிப்புப் பலகை ஆங்காங்கே அழகழகாக வைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் குழுமியிருக்க அமைதியாக மாணவர்களின் வருகைப் பதிவு நடந்தது. காவியன் பள்ளியில் அந்தத் தேர்வு முகாம் நடத்தப்பட்ட நேர்த்தியும், நெறிகளும் புதிய நம்பிக்கைகளை நமக்குள் விதைக்கும் வண்ணம் அமைந்தன.
நமது சமூகத்தின் அடித்தட்டு மாணவ மாணவியரின் கனவுகளையும், குறிக்கோள்களையும் கவனத்தில் கொண்டு அவற்றைச் சாத்தியப்படுத்தும் தொலைநோக்குடன் அளிக்கப்பட இருக்கும் ஆளுமைப் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்ய விழைந்தது இந்தத் தேர்வு முகாம். மேலும் பெருவாரியாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் கிராமச் சூழலில் வாழுகின்ற மாணவ மாணவிகளே இந்த முகாமில் பங்கெடுத்துக் கொண்டது நெகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மண்டபத்தில் பெற்றோர்கள் காத்திருக்க 'Lead India' திட்டத்தின் தேர்வுக்குழு வல்லுநர்களான பணிநிறைவு பெற்ற I.A.S. அதிகாரி திரு.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் நிஜ நாடக இயக்கத் தலைவருமான டாக்டர் மு. ராமசாமி, டி.வி.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளித் துணை முதல்வர் திரு. ரவிஆனந்தன் ஆகியோர் காவியன் பள்ளி வளாகத்திற்கு வருகை புரிந்ததைத் தொடர்ந்து 29.9.2012 - 30.9.2012 ஆகிய இரண்டு நாட்கள் 'Lead India'வின் ஆக்கப்பூர்வமானத் தேர்வுப் பணிகள் வெகு சிறப்பாக நடந்தேறின.
பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரிடையே காவியன் பவுண்டேசனின் நிர்வாக அறங்காவலர் ஆசிரியர் அவர்கள் 'Lead India' திட்டம் குறித்து விளக்கியும், அனைவரையும் வரவேற்றும் உரை நிகழ்த்தினார். மேலும் தேர்வுக்குழு உறுப்பினர்
திரு.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்கள் தனது குடும்பச் சூழல் - கல்விச் சூழல் மற்றும் தான் வளர்ந்த விதம் குறித்தும், 38 ஆண்டு காலம் அரசு ஆட்சிப் பணியில் பணியாற்றியது குறித்தும் மாணவர்களிடையே பேசியது அவர்களுக்கு உரம் சேர்ப்பதுபோல் அமைந்தது. மேலும் IFS/IAS/IPS/Group1 தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விரிவாகப் பேசினார்.
செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடந்த இந்த முகாமில் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம் ஆகிய ஆறு தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து பதினோறாம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்தோடு வந்து பங்கேற்றனர்.
இந்தியாவின் IAS, IPS, உள்ளிட்ட பல்வேறு வகையான நிர்வாகப் பணிகளில் திறமையுள்ள ஏழை மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களும் எதிர்காலத்தில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தின் கிராமப்புற ஏழை எளிய, அதேவேளையில் திறன்மிக்க மாணவ மாணவியர்கள் இந்திய ஆட்சிப்பணிக்கானத் தேர்வுக்கு தன்னைத் தயார் செய்து கொள்ளும் அடிப்படையைத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். நமது சமூகத்தின் பொருளாதார, மற்றும் கலாசாரத் தளத்தின் பொது குணாம்சமும் அவ்வாறு தான் இருக்கிறது. மேலும் பெருநகரங்களில் வாழுகிற வசதிமிக்க குடும்பப் பின்னணியைப் பெற்றிருக்கிறவர்கள் மட்டும் தான் இத்தகைய தேர்வுகளுக்கான முயற்சியில் ஈடுபடுகிற சூழல் இருந்து வருகிறது. இதற்குப் பொருளாதாரமும் ஒரு காரணமாக இருந்தாலும், தமிழகத்தின் பெரும்பாலான கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு இதற்கான வழிமுறை மற்றும் நடைமுறைகள் தெரிவதில்லை என்பதே மேலும் ஒரு மிக வலுவான காரணமாகும். அதற்கான விழிப்புணர்வும் அவர்களிடம் இல்லை. இந்த விழிப்புணர்வற்றச் சூழலுக்கு முக்கியக் காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்து நிபுணர் குழுவின் உதவியோடு அதனைக் களைந்து மாணவர்களிடையே தன்னம்பிக்கையையும், ஆளுமைப் பண்பையும் வளர்க்கும் நோக்கோடு உருவாகி இருப்பது தான் காவியன் கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட்டின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் காவியன் அறக்கட்டளையின் 'Lead India' ஆளுமை வளர்ப்புத் திட்டம்.
இந்த 'Lead India' ஆளுமைத் திறன் வளர்ப்பு முகாமில் பங்கெடுத்துக் கொண்ட பெருவாரியான மாணவர்கள் கிராமச் சூழலில் வாழுகிற ஏழைகள் என்பதிலிருந்து இந்த திட்டத்தின் உயரிய நோக்கம் உன்னதம் பெறுகிறது. 5 பேர் கொண்ட நிபுணர்குழு தேர்வு செய்த முதற்கட்டத் தேர்வில் உற்சாகமாக மாணவர்கள் கலந்து கொண்டார்கள். முகாமில் பங்கெடுத்துக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்யும் முதற்கட்டப்பணியில் பாண்டிய பேரரசைச் சேர்ந்த 'அதிவீரராமபாண்டியன்' குறித்த கட்டுரை எழுதும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முதற்கட்டத் தேர்வில் நினைவாற்றல் திறன், குழு விவாதம், தமிழில் உரையாற்றுவது, குழு விளையாட்டு, ஆங்கில அறிவு, நேர்காணல், பொது அறிவுத்திறன், ஆளுமைப்பண்பு, உடற்தகுதி போன்றவை குறித்து மிகவும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து மாணவர்களோடு வந்திருந்த பெற்றோர்களுக்கு தேர்வு முடியும் வரை ஓய்வெடுப்பதற்கான இடமும், உணவும் அளிக்கப்பட்டிருந்தது பாராட்டத்தக்க அம்சமாகும். இந்தத் தேர்வில் மாணவர்களுடைய பின்புலம், அவர்களது வாழ்க்கை, அவர்களது சூழல், இவற்றைக் கவனத்தில் கொண்டு அவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் கணக்கில் கொண்டே மாணவர்களின் தேர்வு நடந்தது. மேலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆறு தென் மாவட்டங்களில் 450 பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கும் 'Lead India' திட்டத்தின் செயலாளர் திரு.சீனி கோபாலகிருஷ்ணன், வந்தடைந்த விருப்ப விண்ணப்பங்களில் இருந்து முதற்கட்டமாகப் பரிசீலித்து 80 மாணவ மாணவியரை மட்டுமே தேர்வு செய்ததாகவும் கூறினார்.
"தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை பொறுப்புள்ள, நேர்மையான, அரசு உயர் அதிகாரிகளாக உருவாக்கும் வரை காவியன் அறக்கட்டளை உறுதுணையாக இருக்க முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக காவியன் அறக்கட்டளை, மாணவர்களிடமிருந்து எவ்வகை கட்டணமும் பெறப்போவதில்லை. இதற்கான நிதி உதவிகள் அனைத்தையும் காவியன் கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் அளிக்கிறது." என்று காவியன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆசிரியர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பல பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சாதி, மதம், இனம் போன்ற எந்தவித பாகுபாடுகளையும் கணக்கில் கொள்ளாமல் தகுதிகளின் அடிப்படையில் மாணவ, மாணவியரைத் தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும், இந்தச் சமூகப் பணியை காவியன் அறக்கட்டளை செய்யவுள்ளது-.
மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைப் பண்பை அவர்களுக்கு உணரச்செய்து விழிப்புணர்வை தருகிற 'Lead India' என்கிற இந்தத் திட்டம் எதிர்கால இந்தியாவுக்கான பயனுள்ள திட்டம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
“பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்” - எனும்
பாரதியின் கனவு, இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் அமைந்த காவியன் பள்ளியில் ஒரு கவிதையைப் போல நனவாகிக் கொண்டிருக்கிறது.
நிழற் படங்கள் :
தேனி S. லோகேஷ்
நேர் காணல்கள்
திரு. கற்பூரசுந்தரபாண்டியன் புதிய தலைமுறையை நற்சிந்தனை மற்றும் செயலூக்கத்துடன் உருவாக்க முனைந்து செயலாற்றி வரும் காவியன் அறக்கட்டளையையும், அதன் நிர்வாக அறங்காவலர் ஆசிரியர் அவர்களையும் முதலில் மனதாரப் பாராட்டுகிறேன். நேர்மையான, நியாயமான, உண்மையான அதிகாரிகளை உருவாக்குவதும், சமுதாயத்தில் மிகவும் அடித்தட்டு நிலையில் உள்ள, நிர்வாக உயர் படிப்புகளைப் படிக்க வாய்ப்பு இல்லாத குடும்பங்களில் பிறந்த மாணவ மாணவியருக்கு முன்னுரிமை கொடுப்பதும், 'Lead India'வின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. இந்த 5 ஆண்டில் இவர்களது குணநலன்கள், ஆளுமை, ஏழைகள் மீது பரிவு, பாசம், நிர்வாகத்தில் திறமை மற்றும் நேர்மையான மனோபாவம் ஆகியவற்றை வளர்ப்பதன் வாயிலாக இம்மாணவர்கள் பண்பட்ட மனிதர்களாக உருவாகிப் பொறுப்புமிக்க பதவிகளை வகிக்கமுடியும். அப்பதவிகளின் சமூக நோக்கங்களை உணர்ந்து செயலாற்றவும் முடியும். 'Lead India' அதை வெற்றிகரமாக செய்யும் என நம்புகிறேன். |
டாக்டர் மு. ராமசாமி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பை, ஒரு வாசலைத் திறந்து விடும் இம்முயற்சியை நான் பெரிதும் வரவேற்கிறேன். 'Lead India'வின் வாயிலாகச் சமூகத்தைப் பற்றியதான விழிப்புணர்வு மற்றும் அறிவைப் பெறக்கூடிய வாய்ப்பு இந்த மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த முதற்கட்டத் தேர்வு முகாமில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலோர் கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள். பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் இவர்களுக்கு 'Lead India'வின் இந்த அரவணைப்பும் வாய்ப்பும் இல்லை என்கிற ஒரு சூழலைக் கற்பனை செய்து கொண்டால் இவர்களது நிலை என்னவாகும்? இந்தக் கேள்வியே 'Lead India'வின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையானதைக் கணக்கில் கொண்டு காவியன் பவுண்டேசன் பணியாற்றுகிறது. |
திரு சீனி. கோபாலகிருஷ்ணன் முதல் முகாமிற்கு வரப்போவது யார்?' என்பதற்கான தேர்வு தான் இப்போது நடந்திருக்கிறது. மிகவும் கவனமாக இவர்களை நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம். இங்கு வந்திருந்த பெரும்பாலான மாணவர்கள் தமிழில் கல்வி பயின்றவர்கள் என்பதால் அவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற பயிற்சிகளை அளித்து முழுமை செய்வோம். உடல் நலத்தையும் பேணிக் காத்து, தியானம் போன்றவற்றில் ஈடுபடவும் அவர்களுக்குப் பயிற்சி அளிப்போம். 3-ஆம் ஆண்டிலிருந்து முகாமில் ஆங்கிலத்தில் வகுப்புகள் நடைபெறும். இதன் வாயிலாக அனைத்து மாணவர்களும் 2 ஆண்டுகளுக்குள் ஆளுமைத் திறன்களில் சமநிலை எய்துவர். காவியனின் 'Lead India' திட்டம் எதிர்கால இந்தியாவிற்கான நம்பிக்கை. |
திருமதி ரேவதி இந்தத் தேர்வு முகாமிற்கு வந்திருக்கிற கிராமப்புற மாணவர்களுக்குப் பொருளாதாரம் மட்டும் தான் பிரச்சனையாக இருக்கிறது. திறமையோடு இங்கு வந்திருந்தவர்களில் மாணவிகள் தான் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் சோர்வற்ற மனநிலையோடும் மகிழ்ச்சியோடும் பங்கெடுத்துக் கொண்டதை என்னால் உணரமுடிந்தது. எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் 'Lead India' வாயிலாகப் பண்பட்டு, உருப்பெறும் போது திறமையான அதிகாரிகளாக வருவார்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். |
திரு. பொன்மாடன் நான் நாளிதழில் வெளியான விளம்பரத்தைப் பார்த்துத் தான் இந்த முகாமிற்கு வந்தேன். என் மகன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். நான் கூலி வேலை செய்யும் தொழிலாளி. என் போன்றவர்களின் பிள்ளைகளுக்கு இந்தப் பயிற்சிப் பெரிய வரப்பிரசாதம். எங்கள் ஊரில் யாருமே பட்டதாரி இல்லை. எங்கள் ஊரில் என் பையன் முதல் மாவட்ட ஆட்சியராக வர வேண்டும். அதற்கு இந்தப் பயிற்சி உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். |
எங்களைப் போன்றோரின் கனவு திருமதி. சந்திரா திண்டுக்கல் (பெற்றோர்) குரூப்-1 தேர்வு என்பது எங்களுக்கு வெறும் கனவாக மட்டுமே இருந்து வந்தது. காரணம் எங்களுடைய பொருளாதார மற்றும் வாழ்வியல் சூழல். விழிப்புணர்வற்ற கிராமச் சூழலும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த முகாம் அறியாமைகளை விலக்கிப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. நகரத்துப் பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற இம்மாதிரியான பயிற்சி வகுப்புகள் எங்களைப் போன்ற கிராமத்து மக்களின் பிள்ளைகளுக்கும் சாத்தியமாகப் போகிற நம்பிக்கையை இந்த 'Lead India' - ஆளுமை வளர்ப்புத் திட்டம் கொடுத்திருக்கிறது. ஒரு தாயாக மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன். |
தகுதிகளைப் பெறுவதற்குத் எஸ். மதுப்பிரியன் (மாணவர்) நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும். ஏனென்றால் நம் சமூகத்தில் பின்தங்கிய மற்றும் அனைத்து வகை மக்களும் முன்னேற வேண்டும். அதற்காக நான் சேவை செய்ய வேண்டும். எனது மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும். அதற்காகக் கடமையுணர்வோடு நான் பணியாற்றுவேன். எனக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள 'Lead India'வின் முகாமில் தொடர்ந்து பங்கேற்க விரும்புகிறேன். இம்முகாம் வழங்கிய அனைத்துப் பயிற்சிகளும் எனக்கு உதவியாக இருந்தன. அனைத்து அடிப்படைகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது. இன்னமும் தெரிந்து கொள்வேன். |
அறிவை விரிவாக்கும் பிரியா மானாமதுரை (மாணவி) எனது பள்ளியின் தலைமையாசிரியர் வாயிலாக இந்த முகாமிற்கு வந்தேன். முதல்கட்டத் தேர்வில் அதிவீரராமபாண்டியன் பற்றி கட்டுரை எழுத வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். பாண்டிய மன்னனான அதிவீரராமபாண்டியன் மற்ற மன்னர்களைப் போல் போரில் மட்டும் ஈடுபடாமல் கல்வி மற்றும் கலாசாரச் சூழலிலும் பங்கேற்று இருந்ததைக் கட்டுரை தயாரிக்கும்போது அறிந்து கொண்டேன். அதற்கு இந்த 'Lead India'விற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மேலும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் 'தன்னை எந்தெந்த வகையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என்ற வழிமுறைகளை இந்த முகாமில் தான் தெரிந்து கொண்டேன். |