2016 ஜூலை மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கலியுகத்தில்... கல்மலை சிவன்மலை!

ஊருக்குள் உயிரோவியமாய்க் காட்சி தரும் சிறப்பு மலைகளுக்கு உண்டு. ஊர் வந்துவிட்டதே என்று தூரத்தில் வரும்போதே, அறிவிக்கும் வகையில் காட்சி தரும் மலைகள் பலவற்றைக் கண்டிருப்போம். மலைகளே அழகோவியமாய், இயற்கையின் கொடையாய், தலைசிறந்த ஓவியனின் ஓவியமாய்க் காட்சி தருவதைக் கண்μற்று வியப்பு மேலோங்கி மலைப்போம். அப்போது நம்மை அறியாது அனிச்சையாய் நம் கைகள் மலை மேலிருக்கும் இறைவனை வணங்கியபடி இருக்கும்.

இப்படிப் பல மலைகள் உண்டு. அவற்றுள் ஒன்று, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் கம்பீரமாய், பசுமைசூழ் இயற்கையாய், இறை ஓவியமாய்க் காட்சியளிக்கும் சிவன்மலை.

‘சிவன் மலை’ என்று அழைக்கப்படுகிற போதிலும், சிவ பெருமானுக்கும் இம்மலைக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் புராண ரீதியாக இல்லை. இங்கிருக்கும் இறைவன் முருகப் பெருமானே.

சிவ வாக்கியர் எனும் சித்தர் பெருமான் அமைத்த கோயில் என்பதால் சிவ மலை எனப் பெயர் பெற்றதாக ஐதீகம். சிவ மலையே பேச்சு வழக்கில் சிவன்மலை ஆகிவிட்டது.

சிவ வாக்கியம் என்ற சமய நூலை இயற்றியவர் சிவ வாக்கியர். நிறைந்த ஞானி. ஒப்பிலா சித்தர். முருகப் பெருமானிடம் அருளும் உபதேசமும் நேரிடையாகப் பெற்ற பேருடையவர். முருகனின் உபதேசம் பெற்று சிவவாக்கியர் இங்கு கோவில் அமைத்திருக்கிறார். இன்றும் நிஷ்ட நிலையில் கோயிலில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

புராணங்களில், அனைத்து மலைகளையும் இமயமலையுடன் தொடர்புப் படுத்திக் கூறுவது வழக்கம். சிவன்மலைக்கும் அந்த வகையான பழந்தொடர்பு உண்டு. திரிபுர சம்ஹாரத்தின்போது, சிவபெருமான் வாசுகியைக் கணையாக வைத்து மேருமலையை வில்லாக வளைத்தார். அப்போது மேருமலையின் சிகரங்களில் ஒன்று காங்கேய நாட்டில் விழுந்தது. அதுவே சிவமலை என்கிறது, சிவமலைக் குறவஞ்சி.

பார்வதி தேவியின் பாதங்களில் உள்ள அணிகலன் விழுந்து, அதிலிருந்து தெறித்தநவரத்தினங்கள் நவ கன்னியராகி, அவர் மூலம் நவ வீரர்கள் தோன்றி அவர்கள் இந்தமலைக் கோயிலில் பணிபுரிந்ததால் வீரமாபுரம் என்ற பெயருமுண்டு.

இப்பகுதி ‘ரத்தினம்’ விளைவுள்ள நாடு என்பது மிகவும் அரிய உண்மை. காங்கேயம் பகுதியில் சிவன்மலை சூழ்ந்த பகுதியில், படியூர் உள்ளிட்ட ஊர்களில் பல வண்ணக் கற்கள் பன்னெடுங்காலமாய்க் கிடைக்கின்றன. சங்ககாலத்தில், சேரர் ஆட்சிக் காலத்தில் அவை மணிகளாகச் செய்யப்பட்டும், பாசிகளாக உருவாக்கப்பட்டும் ரோம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ரோம் நாட்டுப் பெண்கள் இக்கற்களை விரும்பி அணிந்தனர் என்பது வரலாற்றுப் பதிவு.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கொடுமணல் அகழாய்வும், பதிற்றுப்பத்தும் இதனை உறுதிப்படுத்துகிறது.

சிவன்மலைக்குச் சிவாசலம், சிவராத்திரி போன்றபல பெயர்கள் உண்டு. பார்வதி தேவி எழுந்தருளிய காரணத்தால் சத்தி கிரி, சத்தி சிவகிரி என்றும் போற்றப்படுகிறது.

பன்னெடுங்காலமாய் மலை சார்ந்த குறிஞ்சியும், காடுகள் சார்ந்த முல்லையுமாய்க் காட்சி அளித்துக் கொண்டிருந்த சிவன்மலை இன்றும் அதுபோன்றே ஆனால், ஒரு குறைந்தபட்ச சாட்சியாக மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதுவே அதி அற்புதம் என்பதே சிவமலையின் சிறப்பு.

சிவன்மலைக்குப் போவோமா? இதோ, அழகான சிறு மலையாகக் காட்சியளிக்கும் சிவன்மலை கண்களையும், கருத்தையும் கவரும் வண்ணம் எதிரே நிற்கிறது. கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்திலிருக்கிறது. மலை உச்சியிலிருக்கும் சுப்பிரமணியரைத் தரிசிக்க, இரு வழிகள் இருக்கின்றன.

ஒன்று, 496 படிகள் கொண்ட படிவழிப்பாதை. இன்னொன்று 2 கி.மீ நீளம் உடைய மிக நேர்த்தியான மலைப்பாதை. மலைப்பாதையில் பயணித்தால் 10, 15 நிமிடங்களில் உச்சிக்குச் சென்றுவிடலாம். இடையில் காμம் காட்சிகள் மலை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அருகிலிருக்கும் கட்டடங்களும், இளம் பசுமை கொண்ட பரப்புகளும், தென்னந்தோப்புகளும், ஊர்களும் கவர்ந்திழுக்கும்.

இங்கு படிப் பயணமே சிறப்பாயுள்ளது. 20 நிமிடப் பயணத்தில் கோயிலுக்குச் சென்றுவிடலாம். 18-ஆம் படி சத்தியப்படி, புராணப்படி என்று அழைக்கப்படுகிறது. இங்கு வழக்குகளைப் பக்தர்கள் தீர்த்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இங்கு செய்யும் சத்தியம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 

மலைப்படிகள் வழியாகச் செல்லும் போது ஓய்வெடுக்கப் பல பழைய, புதிய மண்டபங்கள் உள்ளன. இப்பழைய மண்டபங்களைக் கொங்கு நாட்டு கல்வெட்டுகள் ‘கற்பந்தல்’ என்று சிறப்பிக்கிறது. முன்பெல்லாம் இம் மண்டபங்களில் ஓய்வெடுப்பதோடு, கையோடு எடுத்துச் செல்லும் கட்டுச் சாதத்தைக் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உண்டு செல்வது வழக்கமாய் இருந்திருக்கிறது.

மலை மீதுள்ள சுப்பிரமணியர் கோயிலில் கைலாசநாதர், ஞானாம்பிகை, வினாயகர், நவக்கிரகம், மயில்வாகனக் குறடு, வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அருள் சன்னதிகள் உள்ளன. கோயில்விருட்சமாய் தொரட்டி மரம் உள்ளது. இம்மரத்தில் தொட்டில் கட்டி மக்கட்பேறு வேண்டுகின்றனர் பக்தர்கள். கருவறையில் வள்ளியோடு சுப்பிரமணியர் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

 

பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் முதல் பூசை விநாயகருக்கே நடக்கும். சிவன்மலையில் முதல் பூசை முருகனுக்கே நடக்கிறது. விநாயகரே முருகனை வழிபடுவதாக ஐதீகம்.

வடக்கே தலையும் தெற்கே தோகையும் கொண்ட தேவமயில் இங்கு உள்ளது இன்னும் ஒரு சிறப்பு. சனி பகவான் கிழக்குப் பார்த்து இருப்பதும், நவக்கிரகங்களில் எட்டு கிரகங்களும் சூரியனையே பார்த்தபடி இருப்பதும் சிறப்பம்சம்.

இங்குள்ள ஜீரஹரேசுவரர் சன்னதியில் மிளகுரசம் வைத்துப் பூஜித்துக் கொண்டால் காய்ச்சல் நீங்கும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. வேறெந்த முருகன் கோயில்களிலும் இல்லாத வகையில் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு இங்கு வேட்டு வைத்து வழிபடுகின்றனர். இதற்கு ‘பொட்லி’ என்று பெயர். இதற்கான இடம் மலை மீது உள்ளது.

சிவன் மலை பக்தர்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பு கொண்டுள்ளது. அதனால் இப்பகுதியில் வாழும் அனைத்துச் சமுதாயத்தினரும் சிவ மலை எனப் பெயர் கொண்டுள்ளனர். சேமலை என்னும் சிவ மலையின் மருவிய பெயரும் பரவலாக வைக்கப்பட்டு உள்ளது.

புராணங்களில், இலக்கியங்களில், கல்வெட்டுகளில், ஓலைச்சுவடிகளில் சிறப்பாக இடம் பெற்றிருக்கும் சிவன் மலை அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களையும் கொண்டிருக்கிறது. அருகிருக்கும் நஞ்சுண்டேசுவரர் கோயிலில் உள்ள இசைத்தூண்கள் வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. ஒரு பெரிய தூணில் 9 சிறு தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒலியைத் தருகின்றது.

அருணகிரிநாதர் சிவன் மலை குறித்து 2 பாடல்கள் பாடியுள்ளார். இது திருப்புகழில் இடம் பெற்றுள்ளது. இதுதவிர, சிவமலைக் குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், மயில் விடு தூது உள்ளிட்ட 9 இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள பெருமை சிவன் மலைக்கு உண்டு. இதில் சிவமலைக் குறவஞ்சி மிகச் சிறந்தது. சேதுபதி அரசரால் பாரதி பட்டம் பெற்ற இலட்சுமணன் என்பவரால் இயற்றப்பட்டது. இப்புலவர், தம் பாடலால் பலருக்கு நோய் தீர்த்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.

அனைத்துக்கும் மேலாக சிவன் மலைக்கு மகத்தான, அதிசயமிக்க சிறப்பு ஒன்று உண்டு.

சிவன் மலை பக்தர்கள் கனவில்சிவன் மலைக் கடவுள் தோன்றி ஒருகுறிப்பிட்ட பொருளை திருக்கோயிலுக்குக் கொண்டு வரும்படி ஆணை பிறப்பிப்பார். அப்பொருள் குறித்து இறைவன்முன் பூக்கட்டிக் கோயில் அர்ச்சகர்கள் கேட்பார்கள். இறைவன் அனுமதி தரும்பட்சத்தில்அப்பொருள் கோயில் முன்புறமுள்ள உத்தரவுப்பெட்டகத்தில் வைக்கப்படும். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்கம்.

வைக்கப்பட்ட பொருள் தொடர்பான நிகழ்வுகள் உலகளவில் நடந்து வருகிறது என்பதே ஆச்சரியம். துப்பாக்கி வைத்தபோது சீன யுத்தம்வந்தது. தண்ணீர் வைத்தபோது சுனாமி வந்தது. மணலும், மண்μம், மஞ்சளும், தங்கமும் வைத்தபோது அதன் விலை உயர்ந்தது. வைக்கப்படும் பொருள் ஒன்று பெருகும். அல்லது குறையும், அல்லது பாதிப்பு ஏற்படுத்தும் என்பது அதன் வரலாறாக உள்ளது.

இப்போது வைக்கப்பட்டிருக்கும் பொருள் தண்ணீர். 17.5.2013 ஆம் நாள் ஞானாம்பாள் என்ற பக்தரின் கனவில் வந்து, கடவுள் முன் பூக்கட்டிக் கேட்டு ‘உத்தரவு கண்ணாடிப் பெட்டியில்’ வைக்கப்பட்டிருக்கிறது தண்ணீர். அதனால்தான் உத்தரகாண்டில் அவ்வளவு மழை... சீரழிவு என்கிறார்கள் பக்தர்கள்.

அடுத்து வேறொருவர் கனவில் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள், ஆண்டவன் அனுமதியோடு வைக்கப்படும் வரை, வைக்கப்பட்டப் பொருளே நீடித்திருக்கும்.

அருள் சிறப்பும், இலக்கியப் புராணப் பெருமைகளும், கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் எனத் தொன்மையான மதிப்பீடுகளும் கொண்ட சிவன்மலை, மலை அம்சம் கொண்ட இறை சுற்றுலாத்தலமாக மெருகேறி வருகிறது. ஆய்வுக்குரிய சங்கதிகள் நிறைந்தது.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions