c யுத்தம் மனித விரோதம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யுத்தம் மனித விரோதம்

யுத்தம் என்பது எப்போதும் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. உண்மையில் யுத்தம், அதை எந்த நாடு தன் எதிரி நாட்டின் மேல் திணித்ததோ, அந்த எதிரி நாட்டுக்கு மட்டுமல்ல, திணித்த நாட்டுக்குமே தீமையையே தருகிறது. யுத்தம், மானுடம் இதுவரை வளர்த்து வைத்திருக்கும் சகல மேதமைகளையும் சுவடு தெரியாமல் அழிக்கிறது. ஒரு தேசத்தின் பெருமை எனக் கருதத்தக்க சிற்பங்கள், கோயில்கள், வரலாற்றுப் பிரதேசங்கள், மகத்தான ஓவியங்கள், இலக்கியப் பிரதிகள்  ஆகிய அனைத்தும் அழிக்கப்படுகின்றன, யுத்தம் என்கிற அசுர சக்தியால்!
அண்மையில், கடந்து சென்ற இருபதாம் நூற்றாண்டின் நடுவில் நடந்தேறிய பேரழிவை, பேரழிவின் வடுவை உலகம் இன்னும் மறந்துவிடவில்லை. அதன் பெயர் இரண்டாம் உலக யுத்தம். 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலக யுத்தம், உலக வரலாற்றிலேயே நிகழ்ந்த பேரழிவு என்கிறது வரலாறு. இட்லரின் பாசிசமும் மற்றும் ஆதிக்கச் சக்திகளும் தொடங்கிவைத்த அந்த யுத்தம், உலகத்தின் 80 சதவிகித மக்களை, அவர்கள் அறியாமலேயே ஈடுபடுத்தியது. உலக வரைபடத்தில் சுமார் 40 நாடுகளைச் சம்பந்தப்படுத்திவிட்டது அந்த யுத்தம். இன்றைய ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் குடும்பத்தில் ஒருவராவது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தார்.
உலக யுத்தத்தில், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு மகாத்மா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். தனிக் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்னஞ்சிறு சண்டையில் கூட அவர்களோடு குழந்தைகள் பாதிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காந்தியின் அருள் உணர்வு, தேசத்தை நம் தேசம், எதிரி தேசம் என்று பிரித்துக் காட்டவில்லை. மாறாக, எந்த தேசத்துக் குடிமகனும் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் கூறினார். ஏனெனில், எந்த தேசத்து மனிதனும், மனிதனாக இருக்கிறார் என்பதால் தான்.
சிறு உதாரணம். கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் ஊடே அண்மையில் நிகழ்ந்த நீர்த் தகராறு, எவ்வளவு பெரிய நட்டத்தை இரண்டு மாநிலங்களுக்கும் ஏற்படுத்தியது? வண்டி வாகனங்கள் நிறுத்தப்பட, பண்டங்கள் பரிமாற்றம் நிறுத்தப்பட, எத்தனை பிரச்சனைகள், எவ்வளவு நட்டங்கள்?
பொதுவாக நாடுகளுக்குள் உருவாகும் எல்லைத் தகராறுகளே யுத்தங்களாக உருவெடுக்கின்றன. வரலாறு, நிகழ்காலம் எதையும் ஆராயாமல், ஒரு நாடு மாநிலத்தையோ, மண்ணில் ஒரு பகுதியையோ ஆக்கிரமிப்பதில் இந்த யுத்தம் ஆரம்பிக்கும். ஆக்கிரமிக்கப்பட்ட நாடு எதிர்க்கும். உடனே ஆக்கிரமிக்கும் நாட்டுக்கு ஆதரவாக ஒரு நாடு குரல் கொடுக்கும். ஆதரவு கொடுக்கும் நாட்டுக்கு நட்பு நாடு, ஆதரவில் தன்னை இணைத்துக்கொள்ளும். இதேபோல, ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாட்டுக்கு ஆதரவாகவும் குரல்கள் வந்து சேரும். இந்தச் சூழலின் ‘காரம்’ அதிகரிக்க அதிகரிக்க நிலைமை கெடும்.
யுத்தம் எப்போதும் ஆயுத வியாபாரிகளுக்கே மகிழ்ச்சி தரும். எப்போதும் குடிமக்களுக்கு நன்மை தராது. தந்ததாக வரலாறு இல்லை.
தம் அண்டை நாடுகளை, நட்பு நாடுகளாக மாற்றிக்கொள்வதே, ஒரு நாட்டின் முதல் கடமை.  ஜப்பானின் இரு பிரதேசங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டின் கதிர்வீச்சு இன்னமும் ஜீவனுடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். புல்லும் முளைக்காமல் செய்துகொண்டிருக்கின்றன அணுகுண்டுகள். கர்ப்பத்துக் குழந்தைகள் குறை உடம்போடு பிறந்தன என்ற செய்தியும் வந்து கொண்டிருக்கிறது.
ஒன்று மட்டும் உறுதி.
மூன்றாவது உலக யுத்தம் வருமேயானால், நாலாவது யுத்தம் நிகழ்த்த உலகம் இருக்காது. உலகம் அழிந்து போயிருக்கும்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions