c யாவரும் கேளிர் -7
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யாவரும் கேளிர் -7

மரபின் மீது மரியாதை நவீனத்தின் மீது நம்பிக்கை
பதினைந்து வருடங்கள் இருக்கும். கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா நிகழ்ச்சி என ஞாபகம். சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர் என அவரது பெயரை அறிவிக்கிறார்கள். மலேசியர்களுக்கே உரித்தான  பெரிய பெரிய பூக்கள் அச்சிடப்பட்ட, முழுக்கை ஸ்லாக் சட்டை அணிந்த அவர் மேடையேறுகிறார்.
பரிசு பெறுபவர் முப்பத்தி ஐந்து அல்லது நாற்பது வயதுக்காரராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மேடையேறியவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். காதோரம் வெள்ளி முளைத்திருந்தது. ஆனால் அவர் பரிசைப் பெற்றுக்கொண்டு அரங்கத்தைப் பார்த்து முகம் மலரச் சிரித்தது வசீகரமாக இருந்தது.
மேடையிலிருந்து இறங்கி வந்தவரின் கையைப் பற்றி இழுத்துக் குலுக்கினேன். என் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட மலர்ச்சியோடு ‘மாலனா?’ என்றொரு வியப்பும் அவர் முகத்தில் ஏறிக் கலந்து கொண்டது.
அது முதல் சந்திப்பு. அப்போதே நான் அவரது வானத்துவேலிகளைப் படித்திருந்தேன். ஆனால் அப்போது விரிவாகப் பேசும் சூழல் இல்லை. அவரைப் பலரும் சூழ்ந்து நின்று வாழ்த்த காத்திருக்கும் நேரத்தில் விரிவாக நூல் விமர்சனம் செய்வது நாகரிகம் இல்லை எனத் தோன்றியது. நகர்ந்துவிட்டேன்.
பின்னர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். சிலாகித்து எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் என்றதை சொல்ல முடியாது. விமர்சன வரிகளும் இருந்தன. பரிசு பெற்ற ‘ஊசி இலை மரம்’ என்ற சிறுகதையின் பொருளும், மொழியும், அமைப்பும் வானத்துவேலிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பதைச் சுட்டிய அந்த அஞ்சல், அதற்குப்பின் வருடங்கள்  மட்டுமல்ல, வாசிப்பும் இருக்கிறது என்று குறிப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.
பிறகு கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். அந்தக் கடிதங்கள் எனக்கு மலேசிய இலக்கியங்களின் அறிமுகமாக அமைந்தன. சண்முக சிவா, சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான் போன்றவர்களது எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் ரெ.கார்த்திகேசுதான்.
மலேசிய இலக்கிய வரலாற்றை எழுதும் வாய்ப்பைப் பல தருணங்களில் பெற்றவர் ரெ.கார்த்திகேசு. சிங்கப்பூரில் நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, கோவையில் நடந்த தாயகம் கடந்த தமிழ் மாநாடு, சாகித்ய அகாதெமி வெளியிட்ட இலக்கிய வரலாறு நூலில் மலேசிய இலக்கிய வரலாற்றுப் பகுதி, இவை தவிர மலேசிய இலக்கியம் குறித்து மலேசியாவில் வெளியான பல நூல்கள், கருத்தரங்கக் கட்டுரைகள் எனப் பலமுறை அவர் மலேசிய இலக்கிய வரலாறு பற்றி எழுத அழைக்கப்பட்டிருக்கிறார்.  
இதுபோன்ற வாய்ப்புப் பெற்றவர்கள் செய்யும் பாரபட்சமான செயல்கள் இலக்கிய வரலாறு நெடுக இறைந்து கிடக்கின்றன. புதுமைப்பித்தனைக் கொண்டாடுபவர்கள் கல்கியை இருட்டடிப்புச் செய்வார்கள். க.நா.சு வெளியிடும் பட்டியலில் பெரும்பாலும் இடதுசாரி எழுத்தாளர்கள் இடம் பெற மாட்டார்கள். சுந்தர ராமசாமி குழுவினர் வைரமுத்துவையோ, கண்ணதாசனையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கசடதபற மரபில் வந்தவர்கள் வானம்பாடிகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வைரமுத்து ஒருமுறை சொன்னதுபோல, என் ரசிகர்கள் என் இருமலைக் கூட சங்கீதம் என்பார்கள். என் விமர்சகர்கள் என் சங்கீதத்தைக் கூட இருமல் என்பார்கள். இது இலக்கிய உலகில் நெடுநாளாக இருந்து வரும் வியாதி. தமிழகம் அளவிற்கு இல்லை என்றாலும் மலேசியாவிலும் பல இலக்கியக் குழுக்கள் உண்டு. எழுத்தாளர்களிடையே மனவேறுபாடுகள் உண்டு. ஒருவர் புகழ் பெற்றவராக இருப்பது ஒன்று மட்டும் போதுமே மாச்சரியம் ஏற்படுவதற்கு. அதுவும் ரெ.கா. மலேசியாவிற்கு அப்பாலும் அறியப்பட்ட எழுத்தாளர். சில எழுத்தாளர்களுக்கு அவர் மீதும், எல்லா எழுத்தாளர்களைப் போலவே அவருக்கும் சில மலேசிய எழுத்தாளர்களோடு முரண்பாடுகள் இருந்ததுண்டு. ஆனால் அவர் வரலாறு எழுத வாய்ப்புக் கிடைத்த தருணங்களில், குறிப்பாக அயலகத்தில் மலேசிய இலக்கியத்தை அறிமுகப்படுத்தக் கிடைத்த வாய்ப்புகளில் அவர் யாரையும் இருட்டடிப்புச் செய்ததில்லை. ஒதுக்கி வைத்ததில்லை. ஓரங்கட்டியது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட்டுக்கொடுக்காமல் கூடப் பேசுவார். இதற்கு ஒரு விசால மனம் வேண்டும்.
நானும் அவரும் சில போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்து படைப்புக்களைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். புதிதாக எழுதுகிறவர்கள், குறிப்பாக இளைஞர்கள் மீது அவருக்கு தனிப் பரிவு உண்டு. மலேசிய இலக்கியம் புதிய பொருளில், புதிய நடையில் புதிய வடிவில் எழுதப்பட வேண்டும் என்ற பார்வை அவருக்கு இருந்தது. அந்த உந்தல்தான் பாலமுருகன் என்ற இளம் எழுத்தாளர் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ என்ற நாவலை அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசுக்குரியதாகத் தேர்வுசெய்ய அடிப் படையானது.
மலேசிய இலக்கியம் புதிய பரிமாணங்களைப் பெறவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அவர் மலேசிய தமிழ் எழுத்தின் யதார்த்தங்களையும் அறிந்திருந்தார். தமிழக எழுத்துக்களின் தாக்கத்தில்தான் மலேசிய இலக்கியம் எழுந்தது. மு.வ. அகிலன் எழுத்துக்கள்தான் ஆரம்ப கால எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தன. இன்று அந்த ஆதர்சம் வேறு சில எழுத்தாளர்களாக இருக்கலாம். மலேசிய இலக்கியத்தின் டி.என்.ஏ (ஞிழிகி) தமிழக எழுத்துலகிலிருந்துதான் பெறப்பட்டது என்ற தெளிவையும் அவர் பெற்றிருந்தார்.
மரபின்மீது மரியாதையும் நவீனத்தின்மீது நம்பிக்கையும் கொண்டிருந்த அவரது மனதை அவரது கதைகளில் மட்டுமல்ல செயல்களிலும் பார்க்கலாம். கணினியில் தமிழ் மின்னஞ்சல் வாய்ப்பு களையும், இணையத்தில் தமிழ் புழங்கும் வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த நாடு மலேசியா. ஆனால் மலேசியர்களில் பலர் மின்னஞ்சல், இணைய இதழ்கள், வலைப்பூக்களுக்கு வரக் காலம் பிடித்தது. அதிலும் கார்த்திகேசு தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இப்போதும் மின்னஞ்சல் எழுதுவதையே ஒரு சாதனையாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள். ஆனால் கார்த்திகேசு தனது நூல்களை மின்னூலாக வெளியிடும் நவீனத் தொழில் நுட்பம்வரை ஆர்வம் காட்டினார்.
அவரது ‘நாளைக்கு’ என்ற சிறுகதைத் தொகுதியை  என்னுடைய திசைகள் (ஷ்ஷ்ஷ்.tலீவீsணீவீரீணீறீ.வீஸீ) மின்னூலாக வெளியிட்டது. அதன்  முன்னுரையில் அவர் எழுதுகிறார்; ‘மாலனும் நானும்கூட பழைய தலைமுறைக்காரர்கள் தான். அச்சிட்ட நூல்களின் மேல் பாசம் மிக்கவர்கள். அவற்றை அணைத்தும் முகர்ந்தும், நுகர்ந்தும் வளர்ந்தவர்கள். அவற்றை உயிராய் மதித்தவர்கள். அவற்றை நிராகரிக்க இன்றும் மனம் இல்லாதவர்கள். இருந்தும் என்ன? காலவெள்ளமும் உண்மையான நீர்வெள்ளமும் நம் காலம் முடிந்து புதிய காலம் பிறக்கிறது என்பதை உணர்த்தியவாறே இருக்கின்றன. நாம் தலை வணங்காமல் இருக்க முடியுமா? ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டெழுதிய பெரும் புலவர்களும், அவர்களுடைய மாணவர்களும் அச்சின் தொடக்கத்தில் இப்படித்தான் கவலைப்பட்டிருப்பார்கள். ஆனால் காலம் அதனை இயல்புப் படுத்திவிடவில்லையா?
நற்பேறாக நானும் கையெழுத்திலிருந்து கணினி எழுத்துக்கு உரிய காலத்தில் மாறினேன். முதலில் நன்றி சொல்ல வேண்டியது கணினிக் கலைஞர்  முத்துநெடுமாறனுக்குத்தான். நான் அவருடைய முரசு அஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்திய முதல் தனியார் வாடிக்கையாளன் என்று அவர் எனக்கு மேடையில் பரிசு வழங்கினார் (2015). பெருமையாகவும் இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. அவர் எனக்குக் கணினி எழுத்தறிவித்தவர். நானல்லவா அவருக்கு ‘குரு தட்சணை’ வழங்கியிருக்க வேண்டும்? அவர் முந்திக் கொண்டார்.
இப்போது மாலன் என்னுடைய சிறுகதைகளை மின்னூலாகப் பதிப்பிக்கிறார். இதுவும் ஒரு புதிய தொடக்கமே. ஒரு காசும் செலவில்லை. (மறைமுகச் செலவுகள் இருக்கும், மறுக்கவில்லை). எளிய முறையில் காரியம் நடக்கிறது. தூரம் ஒரு பொருட்டல்ல. இந்தியாவின் சென்னையில் உள்ள அவரை மலேசியாவின் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள நான் சென்று பார்க்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை. என் வீட்டில் அமர்ந்தவாறே மின்னஞ்சலில் தொகுத்து அனுப்புகிறேன். அவர் கணினியின் முன்னமர்ந்தவாறே தொழில் நுணுக்கத் தேவைகளைக் கவனிப்பார். எல்லாம் முடிந்தவுடன் ‘பதிப்பி’ என்று கணினிக்குக் கட்டளை அனுப்புவார். அது பதிப்பிக்கும். உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் உடனே அதனைப் பெற்றுப் பார்க்கலாம். என்ன ஓர் அதிசய உலகம்? இப்போது நம் கையில் இருப்பது அதிசய விளக்கு. கணினியின் முன் நாம் எல்லாருமே அலாவுதீன்கள்.
மலேசிய எழுத்தாளர் சங்கம் ரெ.கார்த்திகேசுவின் பெயரில் இந்தாண்டு முதல் நிறுவியுள்ள சிறுகதைப் பரிசை நடுவராகக் கடமையாற்றித்  தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அதன் பொருட்டும், நாவல் பயிலரங்கு நடத்தவும், நான் செப்டம்பர் மாத இறுதியில் மலேசியா சென்றிருந்தேன்.
அப்போது அவர் உடல் நலம் குன்றியிருப்பதாக செய்தி அறிந்து அவரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். அவர் சொன்னார்; ‘தெளிவாகப் புரிகிறது மாலன்.  உடல், மனம், ஆத்மா என்ற வேறுபாடுகள் புரிகின்றன. உடலுக்குத்தான் வலி. ஆனால் மனம் நிறைவாக இருக்கிறது. என் மகிழ்ச்சிக்கு குடும்பம், நான் பார்த்த பணிகள், என் எழுத்து, உங்களைப் போன்ற நண்பர்கள் எல்லோரும் காரணமாக இருந்திருக்கிறீர்கள். வாழ்க்கை எனக்கு நல்ல பரிசுகளையே அளித்து வந்திருக்கிறது’
அவர் வீட்டை விட்டு வெளியேறி வந்தபோது என் மனதில் ஒரு வரி ஓடி மறைந்தது. மனதால் வாழ்தலன்றோ வாழ்க்கை.

ரெ.கார்த்திகேசு

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions