c நாமிருக்கும் நாடு : 33
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு : 33

வீரத் திருமகள்  வேலுநாச்சியார்
இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து, முதல் ராணுவ நடவடிக்கையை எடுத்த பெருமை தமிழகத்துக்கே  உரியது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த முதல் குரல் மாவீரன் புலித்தேவனுடையதே ஆகும். இது 1755ஆம் ஆண்டு தொடர்ந்து முத்துவடுகநாதத் தேவர் (1772), தொடர்ந்து வீரமங்கை வேலுநாச்சியார் (1772),  வீரபாண்டிய கட்டபொம்மன் (1793), ஊமைத்துரை (1801), மருதுபாண்டியர் (1801) என்பதே உண்மை வரலாறு.
இதன் பிறகே வேலூர் புரட்சி 1806லும், சிப்பாய்க் கலகம் 1857ஆம் ஆண்டிலும் நடைபெற்றது. வரலாறு இப்படி  இருக்கையில், 3ஆம் மைய அரசு 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகத்தையே சுதந்திரப்போரின் தொடக்கம் என்று இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இது பற்றிய கவலையும்,  அக்கறையும் மைய அரசில் பங்குகொண்டு ஆட்சி செய்த தலைவர்கள் எவருக்கும் இல்லை.
அதுமட்டும் அல்ல, இந்திய அரசியல் வீராங்கனை என்றால், தமிழர்களுக்கே கூட ஜான்சிராணிதான் நினைவுக்கு வருகிறது. இது நம் தலைமுறையின் அவலம். ஜான்சிராணிக்கு முன், பல பத்தாண்டுகள் முன் பிறந்து, மிகப் பெரும் வீரச் செயல்கள் செய்து, ஆங்கிலேயர்க்கும், ஆங்கிலேயர்களுக்குத் தன்னையே விற்றுக்கொண்ட ஆற்காடு நவாப்புக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து பலமுறை அவர்களை வென்று தன் வீரத்தை நிலைநாட்டி இருக்கிறார் மாவீராங்கனை வேலுநாச்சியார்.
யார் இந்த வேலுநாச்சியார்?
இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கும் முத்தாத்தாள் நாச்சியாருக்கும் 1730ஆம் ஆண்டு வேலுநாச்சியார் பிறந்தார். சேதுபதி மன்னர், தன் பெண்ணை அரசிக்கு வேண்டிய வாள் பயிற்சி, வேல் பயிற்சி முதலான அனைத்துப் போர்க் கலைகளையும் கற்றுக்கொடுத்து, ஒரு போர்க்களத்தை நிர்வகிக்கும் கலையையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
சிவகங்கைச் சீமையின் இரண்டாம் மன்னர் முத்துவடுகநாத தேவருக்கு வேலுநாச்சியார், 1746ஆம் ஆண்டு மணம் செய்து கொடுக்கப்பட்டார்.
முத்துவடுகநாதர், சுயமரியாதை உள்ள  ஆட்சியாளராக இருந்தார். ஆதிக்கச் சக்திகளான ஆங்கிலேயர்க்கும் நவாப்புக்கும் கப்பம் கட்ட மறுத்தார். இதன் காரணமாகக் காளையார் கோயிலில் தங்கி இருந்த முத்துவடுகநாதர் மேல் படை எடுத்தார்கள் ஆங்கிலேயரும், ஆற்காடு நவாப்பும். 25.6.1772 அன்று நள்ளிரவில்,  காளையார்கோயிலில்  இறைவனைத் தொழத் தன் இளைய மனைவியுடன் சென்றிருந்த முத்துவடுகநாதரை வஞ்சகமாகக் கொன்றது ஆங்கிலப் படை.
அப்போது கொல்லங்குடியில் தங்கி இருந்த வேலுநாச்சியார், தன் கணவனின் உடலோடு உடன்கட்டை ஏறி மரணம் அடைய விரும்பிப் புறப்பட்டார்.
குழந்தையாக இருந்த வேலுநாச்சியின் மகள் வெள்ளச்சியின் எதிர்கால வாழ்க்கை, அடிமைப்பட்ட சிவகங்கை அரசை மீட்டு உருவாக்குதல் முதலான தாய்மை மற்றும் அரசியல் கடமைகளை முன்வைத்து, வாழ்ந்து போராடுவது என்ற முடிவுக்கு வந்தார் வேலுநாச்சியார்.
தம்மைப் போலவே, ஆங்கிலேயர்களுக்கு எதிரான விருப்பாச்சி ஜமீனின் தலைவர் கோபால் நாயக்கரின் அழைப்பை ஏற்று விருப்பாச்சியில் முதலில் தங்கினார்.
வேலு நாச்சியார் அமைதியாகவே இல்லை.
பிரதானி தாண்டவராயப் பிள்ளை, பாதுகாப்பாளராக இருந்த மருது சகோதரர்கள் ஆகியோரைக் கலந்து பல திட்டங்கள் தீட்டிக்கொண்டே இருந்தார்.
அதில் முக்கியமானது மைசூர் மன்னர் ஹைதர்அலியைச் சந்தித்ததாகும். தன் அரசாட்சியை மீட்க, ஐந்தாயிரம் குதிரையையும், ஐந்தாயிரம் வீரர்களையும் கொடுத்து உதவக் கேட்டார். வேலு நாச்சியாரின் வீரத்திலும், நாட்டுப் பற்றிலும் மகிழ்ந்த ஹைதர்அலி, தான் உதவுவதாக வாக்களித்தார்.
ஹைதர் அலியின் ஆதரவுடனும் பாதுகாப்பிலும், எட்டு ஆண்டுகள் விருப்பாச்சியில் தங்கி, காலம் கனியக் காத்துக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.
காலம் கனிந்தது.
ஹைதர்அலி உதவினார். குதிரை களையும், வீரர்களையும் திண்டுக்கல் கோட்டையிலிருந்து பெற்றுக்கொண்ட வேலுநாச்சியார் படையெடுப்பு வியூகங்கள் அமைத்தார். மூன்று பிரிவுகளாகப் படைகளைப் பிரித்தார்.
மூன்று படைப் பிரிவுகளும் சேர்ந்து தொடுத்த தாக்குதலில் ஆங்கில, நவாப் படைகளை வெற்றி கொண்ட நாச்சியார், சிவகங்கை அரியணையைக் கைப்பற்றினார்.
நல்ல நாளில் தன் மகள் வெள்ளச்சியை சிவகங்கையின் அரசியாக்கி, தான் அவள் பிரதிநிதி அரசியானார். 1780ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த விழாவில், பெரியமருது படைத் தலைவராகவும், சின்னமருது பிரதானியாகவும் நியமிக்கப்பட்டார்.
மகள் வெள்ளச்சியை சக்கந்தி வெய்டன் பெரிய உடையார் தேவருக்கு மணமுடித்து வைத்தார்.
அடுத்த பத்தாண்டுகள் நாச்சியாரின் ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அரண்மனைச் சதிகள், பகைகள் அனைத்தையும் எதிர்கொண்டு தன் அறிவு, சாமர்த்தியம், வீரத்தால் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தார்.
தன் ஆட்சிக்குட்பட்ட ஊர்களில் சாலைகளை ஒழுங்குபடுத்தினார். அன்னச் சத்திரங்கள் கட்டினார். ஏழை இளைஞர்களுக்குத் திருமணம் செய்து வைத்து வாழவும் வகை செய்தார். சாலையோரங்களில் நிழல் மரம் நட்டார்.
வேலுநாச்சியாரின் மத நல்லிணக்கம் மிக முக்கியமானதாக கருதப்பட்டது.
காளையார்கோயிலுக்கு அவர் செய்த இறைப்பணி போல சருகணியில் மசூதி ஒன்றையும்,பக்கத்திலேயே மாதா கோயில் ஒன்றையும் கட்டினார்.
தன் 66ஆம் வயதில் 25.12.1796 இல் சிவகங்கையில் காலமானார் வேலு நாச்சியார்.
இந்திய அளவில், பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராகச் சளைக்காமல் போர் செய்து, தன் மண்ணை மீட்ட முதல் வீராங்கனை வேலுநாச்சியார் என்ற வரலாறு எந்நாளும் அழியாது, வரலாற்றில் நிலைபெறும்.

- சா.வைத்தியநாதன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions