c கற்பதும் கற்றுக் கொடுப்பதுமே
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கற்பதும் கற்றுக் கொடுப்பதுமே

ஆசிரியரின் வேலை!
தமிழ்நாடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. கல்வி, கல்விக் கொள்கை, கற்றல், மாணவர்கள் மனநிலை, பாடத் திட்டங்கள், பாடச்சுமை, பள்ளிகளின் அமைவிடம் ஆகியன தொடர்பாக தன் குரலை அக்கறையாகப் பதிவு செய்யும் கல்விச் சிந்தனையாளர். தற்போது வந்துள்ள மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சேலத்தில் நடந்த சிறப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு அடர்த்தியான உரையை நிகழ்த்தினார். அது பெரும் விவாதங்களைக் கிளப்பிய சூழலில் பல்சுவை காவியத்திற்காக அவருடன் உரையாடினோம்.
- பிரின்ஸ் கஜேந்திர பாபு
தங்கள் எழுத்துப் பணி, எழுதிய நூல்கள் மற்றும் ஆய்வுகள் பற்றிச் சொல்லுங்கள்?
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்கிற அமைப்பின் செயலாளராக இருக்கிறேன். கல்வி மற்றும் பாடத்திட்டத்தில் பொதுப்பள்ளி முறைமையை நடைமுறைப் படுத்துவதற்கான, சாத்தியத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதன் மூலம் மேற்கொள்கிறோம்.
கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பில் (ணீவீயீக்ஷீtமீ)  செயற்குழு உறுப்பினராகவும் உள்ளேன். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலந்து கொண்டு கற்றல்முறை குறித்து உரை நிகழ்த்துவதோடு, ஆய்வறிக்கைகளையும் எழுதுகிறேன்.
நமது கல்விமுறையின் அடிப்படைச் சிக்கல் என்ன?
கல்விமுறைச் சிக்கல் என்று பேசினாலே இது மெக்காலே சிஸ்டம் என்கிற ஒற்றை வார்த்தையில் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மெக்காலேமீது சுமத்திவிடுகிறோம்.  மெக்காலே கல்விமுறை அறிமுகமாவதற்கு முன்பே இங்கு கல்விமுறை இருந்தது. அது குருகுலக் கல்விமுறை. அது எப்படிப்பட்ட கல்விமுறை? பரசுராமர் பிராமணர்களுக்கு மட்டும் பாடம் நடத்துகிறவர். கர்ணன் சத்திரியன் என்று தெரிந்ததும் தான் கற்றுக் கொடுத்தவை அத்தனையையும் மறந்து போகும்படி சாபம் விடுகிறார். துரோணாச்சாரி தன்னிடம் பயிலாத ஏகலைவனின் கட்டை விரலை வெட்டச் சொல்கிறார்.
குருகுலக் கல்வி எப்படிப்பட்டது என்பதற்கு புராணங்களின் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் சைவ, வைணவ பிராமணர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டது. தூரமாக நின்று தனக்கும் கல்வி கிடைக்காதா என ஏங்கிய மற்ற சமூகத்தினரின் ஏக்கம் வரலாற்றில் நிறையவே இருக்கிறது. நாரண துரைக்கண்ணன் வரலாற்றைப் படித்துப் பார்த்தாலே அந்தச் சிக்கலை நாம் புரிந்துகொள்ள முடியும்.
குருகுலக் கல்விமுறையைப் பொறுத்தவரை குருவிடமிருந்து தெளிவு பெறலாமே தவிர முரண்பட முடியாது. இராமானுஜர் தனது குருவிடம் முரண்பட்ட காரணத்தால் வெளியேற்றப்படுகிறார். இப்படியாக இருந்த நிலை சமண மற்றும் புத்தத் துறவிகளால் மாற்றம் கொள்கிறது. பள்ளிக்கூடம் என்கிற வார்த்தையே அவர்களால்தான் உருவானது.
இந்து ஆதிக்கத்தால் சமணத் துறவிகளும், புத்தத் துறவிகளும் அழிக்கப்பட்டார்கள். அதனால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அத்துறவிகள் தங்களது படுக்கையறையில் (பள்ளியறை) மாணவர்களுக்கு கற்பித்தனர். ஆகவே கற்றலுக்கான இடம் பள்ளிக்கூடம் என்றானது.
அதன்பின் கிறித்துவ, இசுலாமிய மத அமைப்புகள் கல்வியை முன்னெடுக்கின்றன. இப்படியாக இந்தியாவில் உருவாக்கப்பட்டது மெக்காலே கல்விமுறை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆட்சிப் பணியாளர்களை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் மெக்காலே கல்விமுறை என்று சொல்லப்பட்டாலும், நாடு சுதந்திரம் அடைந்து, கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் தான் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, இன்னமும் நாம் மெக்காலேவை குறை கூறிக்கொண்டிருக்க முடியாது.
அந்நிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை அடைந்து மக்களாட்சியைக் கொண்டுள்ள நாட்டில் நிச்சயம் கல்வி பரவலாக்கப்பட்டிருக்கும். பேகங்கள் ஆட்சிக்காலத்தில் பீகார் மற்றும் வங்காளத்தில் கட்டணமில்லா கல்வி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 1920களில் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் 5வகுப்புவரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருந்தது. 6ஆம் வகுப்புக்குமேல் ஆங்கிலம் விருப்பப் பாடமாக இருந்ததே தவிர கட்டாயப் பாடமாக இருக்கவில்லை. இன்றைக்கும் கிறித்துவ மத அமைப்புகளின் பள்ளிகளில் தமிழ்வழிப் பயிற்றுவித்தல் முறை இருக்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகள் ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் மாதாப்பட்டணத்தில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில மீடியமே கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழ்தான் பயிற்றுமொழியாக இருக்கிறது. அப்பள்ளியில்தான் அரசுப் பள்ளியைவிட மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கட்டணமில்லாக் கட்டாயக் கல்வி கொடுக்க முடியாது என்று இந்திய அரசு சொன்னபோது முதன்முதலாக கட்டணமில்லாக் கல்வியைக் கொண்டு வருகிறார் காமராஜர். அவர் காலத்தில் பல மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. கேரளாவில் பல எதிர்ப்புகளைத் தாண்டியும் கொண்டு வரப்பட்ட கல்வி மசோதா, பின்னாளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. கல்விமுறையில் சிக்கல் இருக்கிறதா என்பதைவிட கல்வி வழங்கலில் உள்ள சிக்கலைத்தான் நாம் பிரதானமாகப் பார்க்கவேண்டும்.
கற்றல் வாய்ப்பை எல்லோருக்கும் சமமாக அளிக்காத மத்திய, மாநில அரசுகள்மீது நாம் கேள்வியெழுப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளில் சீரான கற்றல் வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். தாய்மொழியில் கற்பித்தல் வேண்டும். மேலும் கல்வி வணிகமயமாக்கப்படுவதைத் தடுக்கவேண்டும்.
கல்வி, தொழிலாக நடத்தப்பட்டால் கற்றல் செயல்பாடு நிகழாது என்பதே உண்மை. முன்பு பொறியியல் படித்துவிட்டுப் பொறியாளர்களாக வெளியே வந்தார்கள். இப்போது பொறியியல் பட்டதாரிகளாக மட்டும்தான் வெளியே வருகிறார்கள். மெக்காலே கல்விமுறையின் மீது எத்தனை விமர்சனங்களை முன்வைத்தாலும் மெக்காலே காலத்தில் பிரிட்டிஷ் அரசு கட்டணமில்லாக் கல்வியைத்தான் கொடுத்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசின் முதலீட்டில்தான் மெட்ராஸ் பல்கலைக்கழகம் உருவானது. ஆனால் பிரதமர் மோடி இதற்கு அந்நிய முதலீடு வேண்டும் என்கிறார்.
இந்தி கற்பது அவசியம் என்கிற கருத்து தமிழர்களிடமும் பரவியிருக்கிறதே?
இந்தியாவில் இந்தி பயிலாமல் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் பலரை நாம் உதாரணம் காட்ட முடியும். இந்தி தெரிந்தவர்கள்தான் இந்தியாவில் வாழமுடியும் என்பதெல்லாம் தவறான கூற்று. நமது தாய்மொழி எதுவோ அந்த மொழியில் கல்வி என்பதுதான் கற்றல் செயல்பாட்டுக்கு உகந்தது. எந்த ஒரு மொழியையும் அறிவுக்கான மொழி என்று அடையாளப்படுத்த முடியாது. ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடிகள் எந்த மாநிலத்துக்குச் செல்கிறார்களோ அந்த மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்.
மொழியைக் கற்றுக்கொண்டே வருவதில்லை. இந்தி எப்படியோ அதுபோல்தான் ஆங்கிலமும். அதனை கட்டாயப்படுத்துதலை ஏற்றுக்கொள்ள முடியாது. சீன அதிபரும், ரஷ்ய அதிபரும் சந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஆங்கிலத்திலா பேசிக்கொள்கிறார்கள்? ஆக தாய்மொழியில் கல்வியை வளப்படுத்த வேண்டும் என்கிற குரல்தான் நமக்குத் தேவையானதே தவிர, பிற மொழியை அல்ல.  
நமக்கு எப்படிப்பட்ட கல்விமுறை தேவை?
அனைத்துத் தரப்பினருக்கும் சரிசமமான வாய்ப்புக் கொடுக்கிற கல்விமுறைதான் நமது தேவை. பள்ளிக்கூடம் என்றால் அதில் ஓர் நூலகம் இருக்கவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என இருவருக்குமான நூல்களும் அதில் இருக்கவேண்டும். தினசரிகள், வார இதழ்கள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தாண்டியும் பலவற்றைப் படிப்பதற்கான சூழலை உருவாக்கவேண்டும். விளையாட்டு என்பது பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும்.
யோகாசனப் பயிற்சிக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கபடி, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வுக் கூடங்கள் மிக அவசியமானதாகிறது. கணக்கு, அறிவியல் மற்றும் மொழி ஆகியவற்றுக்கான ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். கலை, இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு அதில் எழுத்தாளர்கள், கலைஞர்களின் உரை நிகழ்த்துதலை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் படைப்புத்திறனை ஊக்குவிக்க வேண்டும். ஓவியம், இசை ஆகியவற்றிலும் அவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த ஓவிய ஆசிரியர்களையும், இசை ஆசிரியர்களையும் ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்க வேண்டும். இப்படியாக எல்லாமுமானதுதான் கற்றல் செயல்பாடு. அரசால் மட்டும்தான் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு இப்படியானதொரு கல்வி அமைப்பை உருவாக்க முடியுமோ தவிர, தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்காது. அவர்களின் இலாப நோக்கம் மற்றும் கருத்தியல் இவற்றுக்கு எதிராக இருக்கிறது.
கல்வி சமூக சமத்துவத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டாலும் கல்விக் கூடங்களிலேயே தீண்டாமை அதிக அளவில் இருக்கிறது. இந்திய அளவில் இதற்கு நாம் பல உதாரணங்களைக் காட்ட முடியும். இந்நிலை ஏன்?
கல்விக்கூடங்கள் தீண்டாமையின் கொடூர வடிவங்களாக மாறிவிட்டன. அனைவரும் சீருடை அணிந்து, ஒரே மாதிரியான தட்டில் உணவருந்தினால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்காது என காமராஜர் நினைத்தார். ஆனால் குழந்தைகள் சாதிய அடையாளங்களுடன்தான் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவனைக் கண்டித்ததற்காக அம்மாணவனின் உறவினர்களால் ஆசிரியர் தாக்கப்பட்டதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் ரோகித் வெமுலா ஆகியோரின் மரணம் எதைக் கூறுகிறது? சாதியம் கல்விக்கூடங்களிலும் தனது ஆளுகையைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கல்வியில் நாம் கோரும் மாற்றம் என்பது அனைவருக்குமான சமத்துவம்தான்.
ஒவ்வொரு பாடத்தையும் மற்றொரு பாடத்தோடு இணைத்துப் பார்க்கும் அறிவை வளர்க்கவேண்டும். அறிவியல் பாடத்தில் படித்ததை, சமூக அறிவியல் பாடத்தில் பொருத்திப் பார்க்கவேண்டும். மொழிக்கும், அறிவியலுக்கும் உள்ள பொருத்தத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இடம், பொருள், காலம் ஆகியவற்றைப் பற்றி நியூட்டன் பேசினார். அதற்குப் பின் வந்த ஐன்ஸ்டின் இடம், பொருள், காலம் ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்தவை என்கிற சார்பியல் கோட்பாட்டைக் கூறுகிறார். இப்படியாக ஒவ்வொன்றின் இணைப்பைப் பற்றி பேசக்கூடிய இடமாக நமது வகுப்பறைகள் இருக்கவேண்டும். கேள்வி கேட்கும்போதுதான் சிந்தனை வளர்கிறது. சிந்தனை வளரும்போதுதான் கற்றல் செயல்பாடு நிகழ்கிறது. ஆகவேதான் ஒரு நாளைக்கு ஒரு கேள்வியையாவது கேட்கவிடுங்கள் என அம்பேத்கர் சொன்னார்.
புத்தரின் கல்விமுறையே கேள்வி எழுப்பும் கல்விமுறைதான். இந்த உலகத்தில் எழக்கூடிய சிக்கல்களுக்கு இந்த உலகத்தில்தான் தீர்வு கிடைக்கும். 20ஆம் நூற்றாண்டில் பவ்லோ ஃப்ராய்ரே என்கிற கல்வியியலாளர், ‘இன்றைய கல்விமுறை வங்கிமுறையாக இருக்கிறது. ஆசிரியர் தான் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை மாணவர்களுக்குக் கடத்துகிறார். இந்த முறையால் எந்தப் பயனும் இல்லை. உரையாடல் கல்விமுறையால்தான் நாம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ என்கிறார்.
மாணவர்கள் எழுப்பும் எந்தக் கேள்வியாயினும் அதற்கு ஆசிரியர் பதிலளிக்க வேண்டும் அல்லது பதிலைத் தேடித் தரவேண்டும். கற்றல் என்பது இருவழிப் பாதை. ஆசிரியர் என்பவர் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் மாணவர்தான். கற்றல், கற்பித்தல் ஆகியவற்றைச் செய்வது மட்டுமே ஆசிரியரின் பணியாக இருக்கவேண்டும். அதற்கு மட்டுமே ஆசிரியர்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்னும் பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இவ்வளவு இடர்பாடுகள் இருக்கின்றன. கற்றலுக்கான சூழலை உருவாக்குங்கள். முழுமையான கற்றலை அனுமதிக்காமல் தேவையான அளவு மட்டும் கற்கும் சந்தை நடைமுறையை அரசு ஏற்றுக்கொள்கிறது.
இன்றைக்கு இருக்கும் சூழலைவிட மோசமான சூழலுக்குத்தான் இது வழிவகுக்கும். தீண்டாமைக்கு சமூகக் காரணிகள் பல இருந்தாலும் கல்விமுறை ஒழுங்குபடுத்தப்படுவதும் முக்கியம்.
புதிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக விமர்சித்தவர்களில் நீங்களும் ஒருவர். அக்கொள்கையின் சாதக பாதகங்களைப் பற்றித் தெளிவாக விளக்க முடியுமா?
நான் மட்டும் விமர்சிக்கவில்லை. இந்தியக் கல்வித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரே அது ஒரு கல்விக் கொள்கை அல்ல என்றுதான் கூறியிருக்கிறார். இது கொள்கையோ, அதற்கான வரைவோ கிடையாது. விவாதத்துக்காக சில உள்ளீடுகளைச் சேர்த்திருப்பதாகத்தான் கூறுகிறார்.
தேசியக் கல்விக் கொள்கைக்காக கொடுக்கப்பட்ட இந்த உள்ளீடுகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வலுத்தன. கல்விக் கொள்கையின் உள்ளீடுகளைக் கண்டிப்பவர்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் எனும் கூத்தும் நிகழ்ந்தன. கண்டிப்பவர்களை எதிர்த்தார்களே தவிர அதனை ஆதரித்துக் கூட்டம் நடத்தவில்லை. ஏனென்றால் அதில் ஆதரிப்பதற்கான அம்சங்கள் எதுவுமில்லை என்பதுதான் உண்மை. 86ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை, உலக வங்கியிடம் இந்தியா கடன் வாங்கியதன் விளைவாக, தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றைக் கொண்டு வந்ததால் 92ஆம் ஆண்டு அக்கொள்கை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி குத்தகைக்கு விடப்பட்டது. தற்போதைய இந்த உள்ளீடுகள் மொத்தமாக கல்வியைத் தனியாருக்கு விற்றுவிட்டதற்கானதுதான்.
ஆர்டிகிள் 14 குறித்து?
ஆர்டிகள் 41 கட்டாயக் கல்வி உரிமையைப் பேசுகிறது. ஆர்டிகிள் 14 கல்வியில் எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பை வழங்கவேண்டும் என்கிறது. ஒரு மாணவனுக்கு சமமான வாய்ப்பை வழங்கியிருக்கிறார்களா? பொருளாதார நிலை வளர வளர கல்வியின் தரம் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது கட்டணமில்லாக் கல்வி சாத்தியமில்லை என்கிறாரே மோடி. மக்களிடம் கருத்துக் கேட்டுத்தான் இதனை உருவாக்கினோம் என்று பொய்யுரைக்கிறார். எந்த மக்கள் இதனை ஒப்புக்கொண்டனர்?
கல்வியில் பலவீனமானவர்களைத் தொழிற்பயிற்சிக்கு அனுப்புகிறோம் என்கிறார்கள். கல்வியில் ஒரு மாணவன் பலவீனமாக இருப்பது எதனால்? கற்பித்தலில் உள்ள குறைபாட்டால்தானே.   அந்தக் குறைபாட்டைக் களைந்து அம்மாணவனுக்கு உதவ வேண்டாமா? விரும்பக்கூடிய தொழிலுக்கு பயிற்சி கொடுக்கிறோம் என்பதுதான் ஒரு அரசின் செயல்பாடா?
பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், திருநங்கைகள் பற்றி இவ்வறிக்கை சொல்வதென்ன?
இந்த அறிக்கை அவர்களை மனிதர்களாகவே பொருட்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இக்கட்டான சூழலில் வாழ்கிறவர்களுக்கு மாற்றுப்பள்ளியில் கல்வித் தலையீடு ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கெல்லாம் கல்வி கிடையாது என்பதை வேறொரு வார்த்தைகளால் கூறுகிறது, அவ்வளவுதான். தொடக்கப் பள்ளியில் மாணவர்களை வடிகட்டும் வேலையைச் செய்வதுதான் இந்த அறிக்கையின் சாரம்.
புதிய கல்விக் கொள்கையில் எத்தகைய மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
இது கல்விக் கொள்கையே கிடையாது என்பதை அரசே கூறிவிட்டதே. இன்னும் ஏன் நாம் அதனை அப்படியாக அழைக்கவேண்டும்.

நேர்காணல் : அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions