c உலகச் சிறுகதை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உலகச் சிறுகதை

காஸாவில் அனுபவித்த பல்வலி
அதே பொறுக்கமுடியாத பல்வலியால் நான் விழித்தெழுந்தேன். இனி வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. பல் மருத்துவரைப் பார்த்துவிட வேண்டியது தான். அதை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது மிகவும் தாமதமாகிவிட்டது. பல் மருத்துவரிடம் முன்பதிவு செய்து தருவது அப்பாவின் பொறுப்பில் விடப்பட்டது. பார்க்க மூன்று நாட்கள் நான் காத்திருக்க வேண்டும் என்ற நிலை. அதுவரை தாக்குப் பிடிக்க முடியாது என்று தோன்றியது.
பல் வலியையும், தலைவலியையும் போல் எரிச்சலூட்டக் கூடிய வேறு எதுவும் உலகத்தில் உண்டா என்று தெரியவில்லை. தாங்க முடியவில்லை. இந்த வலியை விளக்க அதைத் தவிர வேறு சொற்களில்லை. வேதனையில் நான் முனகிக் கொண்டிருப்பதைக் கேட்ட அப்பாவின் குரல் எங்கோ தூரத்தில் இருந்து ஒலித்தது. “உன்னால் வலியைச் சமாளிக்க முடியவில்லை என்றால், வேறு வழியில்லை. நாம் அங்கேதான் போயாக வேண்டும்”
ஒன்று, அவர் சொன்னது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. அல்லது அவர் என்னிடம் விளையாடுகிறார். இப்படித்தான் நான் நினைத்தேன். நேரே அவர் முன் சென்று “எங்கே போக வேண்டும்” என்று கேட்டேன். தொண்டையைச் செருமி குரலைச் சரி செய்த பிறகு நடுக்கமூட்டும் அந்த வார்த்தை இப்பொழுது தெளிவாக அவர் வாயிலிருந்து தெறித்தது. பாலஸ்தீனியத்துக்கான ஐ.நா. நிவாரணப் பணி முகமையகத்தின் சுகாதார நலவாழ்வு மையம்.
என் இதயம் ஒரு கணம்  துடிக்க மறந்தது. அந்த இடத்தின் காட்சிதான் என் மனதை உடனடியாக ஆக்கிரமித்தது. அன்றாடம் நான் பள்ளி செல்லும் வழியில் ஐ.நா.நிவாரணப் பணி முகமையகத்தின் இரண்டு கட்டடங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஒன்று சுகாதார நலவாழ்வு மையம். மற்றொன்று ஐ.நா. நிவாரணப் பணி முகமையகத்தின் மையத்துறை. சென்றமுறை காஸா பகுதி இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானபோது இந்த மையமும் குறி வைத்துத் தாக்கப்பட்டது. அங்கே என் கவனத்தை ஈர்த்த வெண்ணிறமும் ஊதா நிறமும் கலந்து வர்ணம் பூசப்பட்டிருந்த, ஐ.நா. நிவாரணப் பணி முகமையகத்தின் கொடி உச்சியில் பறக்கும் கட்டடங்கள் இல்லை. மாறாக, அங்கே இருக்கும் வேலியிட்ட சாளரத்தை அண்ட வரிசையில் நிற்கும் அல்லது வரிசையில் சேர முண்டியடிக்கும் மக்கள் கூட்டமும், பெயர்களையோ அல்லது எண்களையோ ஒலிபெருக்கி மூலம் அழைத்தவாறிருக்கும் குரலும்தான். வேனிற்காலத்தின் மிக வெப்பமான நாளில் சுட்டெரிக்கும் சூரியனுக்குக் கீழோ, குளிரான நாட்களில் பொழியும் அடைமழையின் அடியிலோ அங்கே காத்திருக்க நேரும் மக்களுக்காகத் துயரப்பட, ஒருபொழுதும் நான் தவறியதில்லை. ஆனால் எந்தவொரு காரணத்துக்காகவும் நானே அந்த வரிசையில் நிற்கும்  நிலை வரும் என்று கற்பனை செய்ததுகூட இல்லை. கால் கடுக்கக் காத்திருந்து அந்த வேலியிட்ட சாளரத்தை அடையப் போராடி, எப்படியாவது தன் பெயர் அழைக்கப்படும் என்று வீணில் காத்திருக்கும் எண்ணற்றவர்களுள் நானும் ஒரு நபராக நிற்பேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை.
அப்பா சொன்னதைக் கேட்டவுடன் மனம் அனுபவித்த உளப் போராட்டம் ஓய சற்று நிதானிக்க வேண்டி இருந்தது. ஆனால், நான் விரும்புகிறேனோ இல்லையோ, அந்த சுகாதார நலவாழ்வு மையத்துக்குச் செல்வது கட்டாயமாகிவிட்டது. என்ன இருந்தாலும் எல்லாவிதமான வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இதர மக்களோடு ஒன்றாக வரிசையில் நிற்பது எவ்வளவு கடினமான காரியமாக இருக்கும்.
தூக்கமின்றி அன்றிரவு கழிந்தது. காலையில் அப்பாவிடம் சென்று நிற்கும்போது நான் ஒரு வார்த்தையும் பேசத் தேவை இருக்கவில்லை. என் மனதில் இருந்த கலவரத்தை அவருடைய கனிந்த பார்வை சாந்தப்படுத்தியது. கூட்டம் அலைமோதுவதற்கு முன்பாகவே சுகாதார மையத்துக்குச் சென்று எனக்கு வரிசையில் இடம் பிடித்து வைத்துவிடுவதாக அவர் சொன்னார். காலை ஏழு மணிக்கெல்லாம் எப்படி ஒரு இடத்தில் கூட்டம் குழுமி விடும்? உண்மையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அப்பாவிடம் எந்த அளவுக்கு அலட்சியமாக நடந்து கொண்டிருந்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு வந்ததில் அந்த மையத்தை அடையும் முன்பாக குற்றவுணர்வில் என் வேதனை மிகவும் கூடிப்போயிருந்தது. இதேமாதிரி சங்கடத்தில் அவர் மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ சிக்கிக்கொள்கிறார். ஐ.நா. நிவாரணப் பணி முகமையகத்தின் வழங்கு பொருள்களைப் பெற்றுக்கொள்ள அவர் அடிக்கொருதரம் அங்கு சென்று வரிசையில் நிற்க வேண்டி வரும். ஏனென்றால் ஐ.நா. நிவாரணப் பணி முகமையகம் வழங்கிய அட்டையின் அனுகூலங்களை அனுபவிக்கும் நல்வாய்ப்புப் பெற்ற பாலஸ்தீனியர்களுள் நாங்களும் அடக்கம். என் அன்னை ஓர் அகதி என்று முத்திரை குத்தப்பட்டவர். ஐ.நா. நிவாரணப் பணி முகமையகத்தால் வாங்கப்பட்ட அட்டையை ஒரு சிலர் ஏன் பிரத்யேக சலுகையாகப் பார்க்கிறார்கள் என்று எனக்கு விளங்கியதில்லை. அதைவிடவும் மேலும் ஒரு சிலர் அந்த அட்டையை ஏன் பெருமிதத்தோடு சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்பதும் எனக்குப் புரிந்ததில்லை. அவர்கள் இழந்துவிட்டிருப்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அட்டையின் மூலமாக அவர்கள் பெறுவது அற்பமே எனும் உண்மை இந்தப் பெருமித உணர்வுக்கு முரண்பட்டதாக எனக்குத் தோன்றும்.
ஒரு காலத்தில் அவர்களுக்குச் சொந்தமாயிருந்த நிலத்துக்கு ஒரு மூட்டை கோதுமை ஈடாகிவிட முடியுமா? தங்களுடைய இனிய இல்லங்களைப் பறிகொடுத்துவிட்டு முகாம்களில் வசிக்கும் கசப்பான அவலத்தை அவர்கள் உணரும்பொழுது ஒரு மூட்டை சர்க்கரையால் அதை நேர் செய்துவிட முடியுமா? தங்களைப் போலவே வேரோடு சாய்க்கப்பட்ட அவர்களுடைய தேவதார மரங்களுக்கு இரண்டு புட்டி எண்ணெய் பிராயச்சித்தமாகி விட முடியுமா? ஒரு வேளை இந்த அட்டை கையில் இருக்கும் வரை, ‘நாங்கள் தற்காலிகமாகவே அகதிகளாக இருக்கிறோம். எங்களுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. என்றைக்கிருந்தாலும் அங்கு நாங்கள் மீள்வோம்” என்று அவர்கள் பறைசாற்றிக் கொள்வதற்கு வழி இருக்குமோ?
நான் மையத்தை அடைந்தபொழுது கட்டடத்துக்கு வெளியே யாரும் வரிசை கட்டி நிற்கவில்லை. பல் மருத்துவர்களைப் பற்றிய அர்த்தமற்ற பயம்தான் என்னைக் கலவரப் படுத்திக்கொண்டிருந்தது. அந்த வெண்ணிற, ஊதா நிற வண்ணம் பூசிய கட்டடம் நிச்சயமாக அழகான அமைதியான இடமாகவே தோன்றியது. எனக்கு மிகவும் விருப்பமான வர்ணங்கள் என்னைச் சற்றே மன அமைதிகொள்ள வைத்தன. ஆனால் இந்த உணர்வு வெகு நேரம் நீடிக்கவில்லை. நான் மருத்துவ மையத்துக்குள் நுழைந்த மறுநொடியில் மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. தலைநிமிர்த்தி அந்தச் சிறிய மருத்துவமனையைப் பார்த்தேன். சிரிப்பூட்டும் அளவுக்குச் சிறியதாக அது இருந்தது. சரியாகச் சொல்வதென்றால் அங்கே சின்னச் சின்ன அறைகளே இருந்தன. ஒவ்வொரு அறையின் வாயிற்கதவின் மேலும் அந்த மருத்துவ மையத்தின் வெவ்வேறு சிகிச்சைப் பிரிவுகளின் பெயரட்டைகள் ஒட்டப்பட்டிருந்தன. பொது மருத்துவம், கண் மருத்துவர், பல் மருத்துவர். அந்த மையத்தின் பெரும் பகுதி உட்சிகிச்சைப் பிரிவுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது.
இங்கு அளிக்கப்படும் சிகிச்சையால் உங்களுக்குப் பலனில்லை எனில் வேறு மருத்துவமனையை நீங்கள் நாடிச் செல்ல வேண்டியதுதான். தீவிரமான சிகிச்சை தேவைப்படும் நோயறிகுறி எதுவும் உங்களுக்கு இல்லாமலிருக்கும் என்று நம்புவோம். ஏனென்றால் அந்த மாதிரியான தீவிரவகை நோய்களைக் குணப்படுத்தும் சேவையை ஐ.நா. நிவாரணப் பணி முகமையகத்தால் வழங்க முடியாது. அது மட்டுமல்ல, உங்கள் நோய்க்கு வேண்டிய  மருந்துகள் சிலவற்றை காஸா பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. ஒரு சில வேதியியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வகை மருந்துகள் காஸாவுக்குள் வருவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
நல்லவேளை, எனக்கு வெறும் பல்வலி தான். அதற்காக இறைவனுக்கு நன்றி கூறினேன்.
கூட்டத்தில் முண்டியடித்து அப்பா என்னைத் தேடி வந்தார்
“ஏன் இவ்வளவு தாமதமாக வந்து நிற்கிறாய்? உனக்கென்று நான் ஒரு எண்ணை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால் அந்த எண் பறிபோயிருக்கும்’’ என்றார்.
“இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு அந்த எண்ணை நான் பறி கொடுத்து விடுவதாவது’’ என்று எண்ணிக்கொண்டேன். ஒருசில தருணங்களில் நீங்கள் ஒரு மனிதப் பிறவி என்பதை மறந்து ஒரு எண் எனும் நிலைக்குச்  சரணடைந்து விட வேண்டியதுதான் இருக்கிறது. இப்பொழுது நான் நானில்லை, நான் ஏழு எனும் எண். இந்த நொடியில் நான் கேட்க விரும்பியதும் ஏழு என்பதை மட்டும்தான்.
அப்பா எனக்காகப் பிடித்து வைத்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டேன். நான் இருந்த நிலையைப் பார்த்து தங்களுடைய எண்ணுக்காகக் காத்திருக்கும் ஏனையோரைப் போலவே அப்பாவும் நின்றுகொண்டிருப்பதே மேல் என்று முடிவெடுத்திருந்தார். அப்பாவுக்கும் அவர்களுக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருந்தது. ஏனையோர் யாரும் அவர்களாக விரும்பித் தேர்ந்து நிற்கவில்லை. அங்கே குழுமி நின்றுகொண்டிருந்த ஆண், பெண், குழந்தைகள் கூட்டத்துக்கு அந்த அறையில் போடப்பட்டிருந்த ஐந்தே ஐந்து நீள் இருக்கைகள் எந்த விதத்திலும் போதாது. என் அருகே அமர்ந்திருந்த பெண்ணை மெல்ல நோட்டம் விட்டேன். அவர்களுடைய கையில் வைத்திருந்த அட்டையின் எண்ணைக் கவனித்தேன். பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏழாம் எண்ணுள்ள அட்டையைக் கையில் வைத்திருக்கும் நானே இன்னமும் அழைக்கப்படவில்லை. அப்படியிருக்க முப்பத்தி ஆறாம் எண் அட்டையை வைத்திருக்கும் இந்தப் பெண் எவ்வளவு நேரத்துக்குக் காத்திருக்க வேண்டுமோ! அதிக நேரத்துக்குக் காத்திருக்க வேண்டியிருக்காது என்று விரைவிலேயே புரிந்துபோனது.
“எண் ஆறு, எண் ஆறு!’’
தொடக்கப்பள்ளிச் சீருடையில் இருந்த ஒரு சிறுமி எழுந்து நின்றாள். யாருடைய துணையுமின்றித் தனியாக அவள் அந்த அறைக்குள் நுழைந்தாள்.
எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
தன்னுடைய அப்பாவை உடன் அழைத்து வருமளவுக்கு அந்தச் சிறுமி கோழையாக இருக்கவில்லை. உள்ளே செல்லும்போது தன்னுடைய புத்தகப் பையை அவள் பற்றிக்கொண்டு சென்றாள். அப்படியென்றால், அவளுடைய பல் பிடுங்கப்பட்ட பிறகு அவள் நேராகப் பள்ளிக்கூடம்தான் செல்லப் போகிறாள்.
இரண்டு நிமிடங்களில் கதவு மீண்டும் திறந்தது. “ஒரு வழியாக உன்னை என் வாய்க்குள்ளிருந்து வெளியேற்றிவிட்டேன், முட்டாள் பயலே’’ என்று கூறுவதைப் போல் முன்பு அவள் முகத்தில் தென்பட்ட அதே கீழ்ப்படியா உணர்வோடு அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வாய்க்குள் பஞ்சை அடைத்துக் கொண்டிருந்ததால் அவள் முகம் வீங்கியதுபோல் தோன்றியது. ஆனால் என்னைக் கவலைகொள்ள வைத்தது அந்தக் கோலமல்ல. அந்தச் சிறுமி அந்த அறைக்குள் செலவழித்திருந்த குறுகிய கால அவகாசம்தான். இரண்டே நிமிடங்கள், எந்தவிதமான மயக்க மருந்தும் கொடுக்கக் கூடப் போதாத கால அவகாசம். என்ன ஒரு நிம்மதி!
ஒரு நொடி ஓடிப் போய்விடலாமா என்று தோன்றியது. ஏழாம் எண் அழைக்கப்பட்டவுடன் அப்பா என்னைத் தள்ளிச் செல்லாத குறையாக அந்த அறைக்குள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்.
அங்கே இருந்த மூன்று மருத்துவர்களுமே மிக நல்ல மாதிரியாகத் தெரிந்தார்கள். குறைந்த பட்சம் என் பெயரையாவது அவர்கள் கேட்டார்கள். அங்கே இருந்த ஒரு சாய்விருக்கையில் நான் படுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என்னைத் துன்புறுத்தும் பல்லை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்ற முடியும் என்று ஒரே நிமிட பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர் அறிவித்தார். இவ்வகை சிகிச்சையளிக்க அந்த மையத்தில் வசதி இல்லை. இது எனக்கு ஒன்றும் ஆச்சரியமான விஷயமாகப் படவில்லை. எனக்கு இருந்த வலியைக் கொஞ்ச நேரத்துக்கு நான் மறந்திருந்தேன். நோய்க் கிருமிகளிடமிருந்து சுத்திகரிப்புச் செய்யப்பட்டிருந்த அந்த அறையை விட்டு உடனடியாக வெளியேறத் துடித்தேன். வெளியே வந்தவுடன்தான் என்னால் இயல்பாக மூச்சுவிட முடிந்தது.
அந்தக் கட்டடத்தை விட்டு வெளியே செல்லும் வாயிற்புறத்துக்கு வந்தவுடன் அந்தச் சிறுமியிடம் தென்பட்ட அதே புன்னகையோடு அப்பாவை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னேன், “பார்த்தீர்களா, இந்த அளவுக்கெல்லாம் அவர்களால் முடியாது. நான் அப்பொழுதே சொன்னேனே!’’ என்றேன். அச்சத்தில் வெளிறிப் போயிருந்த என் முகம் முன்பிருந்த மலர்ச்சிக்கு மாறியிருந்ததைக் கண்டு அப்பாவுக்குச் சிரிப்பு வந்தது.
மருத்துவர் கொடுத்திருந்த ஒரு சிறு மருந்துப் பொட்டலத்தைக் காட்டி, “ஏதோ, நமக்குக் கொஞ்சம் வலி நிவாரணியாவது கிடைத்ததே!’’என்றார்.
“ஆம். வலி நிவாரணிகள்’’ என்று யோசனையோடு புன்னகைத்தேன்.

நன்றி: அடவி
பாலஸ்தீனம் ஸமீஹா எல்வான்
தமிழில்: எத்திராஜ் அகிலன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions