c மக்கள் கதைஞர்கள் சாமிகத
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மக்கள் கதைஞர்கள் சாமிகத

செங்கான் கார்முகில்
எப்பப் பாத்தாலும் கொறஞ்சது ரெண்டு பேரிடமாவது ஏதாவதொரு சாமியின் பொறப்பு, வளப்பு கதையைச் சொல்லிக்கொண்டிருப்பதே பொழப்பு ஆதிமூக்கனுக்கு. அதனாலேயே சாமிக்கெழவன்னு பேராவும் ஆகிருச்சு. அவர்சோட்டு ஆளுக ‘யென்னா சாமிகத, யென்னா வேலையாவுது’ என்பார்கள். இளவட்டங்கள் ‘சாமிப்பா’ என்பார்கள். சிறுசுகள் ‘சாமி தாத்தா’ ன்னுவார்கள். ‘சாமி’ங்கிறவர்களும் உண்டு.
ஐந்து தம்பிரான், பட்டாக்குறிச்சி பெரியசாமி, தேங்காய் மூட்டைமேல் வந்த மாரியம்மன், சங்கிலிக் கருப்பசாமி, ஊர் சுற்றியான், எல்லைமுத்துக் கருப்பசாமி, மதவடிக் கருப்பசாமி, தண்டலை முத்து அய்யனார், தண்டலைக் கருப்பசாமி, முத்துசாமி, ஆறுமுகச் சாமி, காமாட்சித் தாயி, அண்ணாமலையார், மல்லப் பிள்ளையார், காட்டு அயினா, அங்காயி, மதுரைவீரன், கரும்பாயிரம், ஆலடிக் கருப்பசாமி, மூப்பனாரய்யா, காரையிலிருந்து ஊட்டத்தூருக்குப் போன செல்லியம்மன் என ஊரிலுள்ள அனைத்து காவல் தேவாதிகளின் கதைகளும், அத்தேவாதிகள் நிகழ்த்திய அற்புதங்களும் இவருக்கு அத்தனை அத்துபடி.
பச்சக்குழந்தைகளின் எச்சிலாட்டம் குளுகுளுன்னு குளுந்த கருமேகங்களைக் கண்டதும், இரண்டு றெக்கைகளையும் விரித்து உலகத்தையே அணைக்கிறமாதிரி நிற்குமே காட்டு மயில்கள் அப்படி கைகளை விரித்து வைத்துக்கொண்டு, ‘ஏரி ரொம்பி வெள்ளம் தளும்பி சும்மா அப்படி நிக்கிது, சமுத்திரமாட்டம்’ என்றுதான் தொடங்குவார்.
அவர் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் தொடங்குவார். முன்னதுக்கும் பின்னதுக்குமான தொடர்புகளைப் போகிறபோக்கில் பாசிமணிபோல கோர்த்துவிடுவார். ஒரு சாமியின் கதையை ஒரு தடவை சொல்வதுபோல மறுதடவை சொல்லமாட்டார். சம்பவங்களைக் கலைத்துப்போட்டுச் சொல்வார். நடுவிலிருந்தும் சொல்வார். குடும்பக் கதைபோலவும் சொல்வார். சரித்திரக் கதைபோலவும் சொல்வார். ஒரே மாதிரி சொன்னால் அவரும் இத்தனை ஆண்டுகாலம் சலிக்காமல் சொல்லியிருக்க முடியாது. மந்திரத்துக்குக் கட்டுண்டவன் போல இத்தனை ஆண்டுகாலம் யாரும் கேட்டிருக்கவும் முடியாது.
“வெள்ளம் கரையை எத்திக்கிட்டு நிக்கிது. கரை ஒடஞ்சா ஊரு தாங்குமா. தாங்காதே. விறுவிறுன்னு காரியத்துல எறங்குனான். மொதக் காரியமா என்ன செஞ்சான், மதவுகளையெல்லாம் திறந்துவிட்டான். ஏரியின் தெற்கு எல்லை வெள்ளத்திறப்பையும் திறந்துவிட்டான். நடு மதகு, ஊமை மதகு, வடக்கு மதகு எல்லாத்தையும் ஒண்ணொன்னை தொறந்து உட்டுக்கிட்டே வந்தான். ரெட்டைப்புளி மதகுக்கிட்டெ வந்தான். மதகுக் கம்பியை மேலே தூக்கினான். வரவில்லை. தோள்ள முட்டுக்கொடுத்து சமுத்து கண்டமட்டும் தூக்கினான். பொட்டுகூட அசையல. ‘ஆடுமாடு மேக்கிற சிறுசுகுள் கல்லைக்கில்லைப் போட்டுருக்கும். அதான் அடிக்கட்டை கிட்டிச்சிக்கிச்சு’ ன்னு முனகிக்கிட்டான். பக்கத்து காடுகளில் ஆளுக எதும் தென்படுதான்னு பாத்தான். ஒருத்தனையும் கண்ணாப் பொறப்புல காணோம். ஊருக்குள் போய்ட்டு வரலாம்னா வெள்ளம் திமிறிடுமே. மனசு பதைபதைக்க, கோவணத்தை வரிஞ்சிக் கீப்பா கட்டினான். மழைக்குப் போட்டிருந்த கொடலைமட்டையையும், தலைப்பாவையும், கைத்தடியையும் கரைமேல வச்சிட்டு, ஆகாயத்தை நோக்கி கையெடுத்து கும்புட்டுட்டு மதகினுள் எறங்கினான். பாதி மதகுவரைக்கும் தண்ணி இருக்கு. தம்பிடித்துக் கொண்டு மதகுக் கம்பிய புடிச்சிக்கிட்டே முழுகினான். கையை விட்டு அரித்துப் பாத்தான். சின்ன காசிபானை சோட்டுக்கு ஒரு கால், மதகு கம்பியின் கட்டைமேல் குந்தியிருப்பது நெப்பம் பிடிபட்டது. குறும்புக்கார நாயிங்க கரைக்கங்குல இருந்த கல்லைப் போட்டுருக்குங்க என நெனச்சிக்கிட்டே மேலே வந்தான். மூச்சு வாங்கினான்.
மழை சோன்னு கூடிக்கிட்டே இருக்கு. இத தொறந்துட்டு கடக்கால் கிட்டெ போயி பாக்கணும். அங்கே எப்படி இருக்கோ தெரியிலயேன்னு நெனச்சான். மறுபடியும் முழுகினான்.
மதகுக் கட்டைக்கு ரெண்டு பக்கமும் கால்களை அகட்டி வச்சு கை ரெண்டையும் கிடுக்குல குடுத்து ஆட்டிப் பார்த்தான். தெற்கு வடக்குல நின்று அசக்கினான். வாட்டம் சரியா வரலை. கிழக்கு மேற்குல நின்னு அசக்கினான். இம்புட்டூன்டு அசங்குச்சு. இதாஞ் சரின்னு மேலே வந்தான். அத்தச்சோட்டு மூச்சை விட்டு, தஸ்சுபுஸ்சுன்னு இளைப்பாறினான். கண்ணுலாம் செவந்துபோச்சு.
காடுகளில் யாரேனும் இருக்கிறார்களா என்று மறுபடியும் நோட்டம்விட்டான். ஒருத்தரையும் காணம்.
யாரேனும் ஒருவர் இருந்தால் தனது இடுப்பில் ஒரு தண்ணீர் தாம்புக் கயிறைக் கட்டி அவரது கையில் கொடுத்துவிட்டு இறங்கலாம். உள்ளே ஏதேனும் சிக்கல் நேர்ந்தால் கயிற்றை ஆட்டி இழுக்கச் சொல்லலாம் என்பது அவன் ஓசனை. அவன் நேரம் ஒருத்தரையும் காணல.
ஏற்கனவே  கல் கொஞ்சம் அசைந்ததால் தண்ணியின்அளவு மதகின் முக்கால்வாசிக்கு ஏறியிருந்தது.
மீண்டும் இறங்கினான். எப்பாடு பட்டாவது கல்லோடு மேலே வந்துடணும் என்று ஒரு முடிவோடு, நெஞ்சையும் வயிற்றையும் விரிச்சி மூச்ச ரொப்பிக்கிட்டு முழுகினான்.
கல்லுக்கு இருபுறமும் கைகளைக் கொடுத்து நெஞ்சோடு அணைத்து ஒரே தூக்கு, போன வேகத்தில் தூக்கியே விட்டான். காலை உந்தி மேலே எகிறினான்.
அதுவரை அடைத்து நின்ற தண்ணி புதுக்கென்று மதவுல ரொம்பிடுச்சி. அது சுழல்மாதிரி சுற்றிச்சுற்றிச் சேறும் சகதியுமாக வந்ததால் கொஞ்சம் நிலை தடுமாறினான். மதகின் பெலத்துக்காக குறுக்கே போட்டிருப்பாங்களே பலகைக் கல்லு, அது மேல வச்சிட்டான், அந்தக் கல்லை. மதவும் நொப்பியது, மதவு கண்ணு வழியே பீச்சிக்கிட்டும் போவுது தண்ணி.
சுழல்ல மாட்டிக்கிட்டான் நம்மாளு. முட்டுறான், முண்டுறான். தண்ணி கீழே இழுக்க, இவம் மேலே இழுக்க எம்புட்டுநேரம் தம் புடிக்கும்.
ஒரு வெளியூரு ஆசாமி ஏதோ வேலையா போய்ட்டு இந்த வழியா மாட்டுவண்டியில வந்துருக்கான். கரையில நம்மாளு வச்ச துண்டும் கொங்கானியும் சரிஞ்சி அலங்கோலமா கெடந்ததைப் பாத்துட்டு, வண்டிய விட்டு எறங்கி நாலாப் பக்கமும் பாக்க ஒண்ணும் புடிபடல. கரைமேல ஏறி பாத்துருக்கான். காலடித் தட சேறுகள் மதகடியில் தென்பட, மதகை எட்டிப் பாத்தான். வேட்டி ஒண்ணு வட்டமடித்துக்கொண்டு இருக்கு. மளமளன்னு ஊருக்குள்ள போய் சொல்ல, ஆளுக தெரண்டு வந்து பாக்க, படாதபாடு பட்டு மேல தூக்கிட்டு வந்தாங்க அவனை.
வெள்ளாமையை காப்பாத்தறதுக்காக இப்படி உசுர உட்டதால மதவடியிலேயே அவனுக்கு ஒரு பதுவு (பதிவு) வச்சிட்டாங்க. மதவடிக் கருப்பசாமின்னு நிக்கிறார் இப்பவும். அதோட சரி அதுக்கப்புறம் இப்பவரைக்கிம் இந்த மதவுல எந்த அடப்பும் ஏற்பட்டதே இல்லை’’
என்று கதையை முடிப்பார். எவனோ ஒருவனின் கதைபோல சொல்லுவார். கடைசியில் மிகப்பெரிய தியாகங்கள் புரிந்த நம் மூதாதையரான தெய்வங்களின் கதையாக இருக்கும்.
ஒரு கோயிலுக்குப் பூசை போடுவது என்று முடிவெடுத்துவிட்டால் கிராமத்தில் முதலில் ஒரு வேலை செய்வார்கள்.
உடுக்கு பூசாரியை வைத்து மந்தையடித்து சாமியிடம் உத்தரவு கேட்பார்கள். அப்போது சாமியின் வரலாறை, பூர்வீகத்தை, அப் பூர்வீகத் தலத்திலுள்ள மரம், மட்டை, நீர்நிலை போன்ற அடையாளங்களை அவர் சொல்வார். சாமி பூசையை ஏற்கிறதென்றால் இதெல்லாம் சரமாரியாக வரும். இல்லையெனில் வராது. அடையாளத்தைச் சொல்லும் வரை பக்கத்தில் குந்திக்கொண்டு விடவே மாட்டார் நம்ம சாமிகத. உடுக்கு பூசாரி பொய் சொல்லவே முடியாது. பூர்வீகத் தலத்தில் எத்தனை சிலை இருக்கிறது, அதில் எத்தனை உடைந்திருக்கிறது என்பது கூட யாவுகமாகச் சொல்வார் சாமிகத.
தண்டலையார் இரவில் வேட்டைக்குப் போவது, காட்டு அயினா பிடித்துக் கொடுத்த திருடர்கள், பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் ஆண்டை மகளை நேசித்து கொலையுண்டு, அவளும் இறந்து ஐந்துதம்பிரானாய் நின்றது, ஊர் எல்லைக் கல்லில் நின்று எல்லைகருப்பு செய்த லீலைக, தன்னுடைய எல்லையில் இருந்த மரத்தை வெட்டியபோது தொடைசோட்டு சர்ப்பமாக வந்துநின்று மரத்தைக் காத்த ஊர்சுற்றியான் என சொல்லிக்கொண்டே போவார்.
விவரம் தெரிந்த நாள்தொட்டு இன்றுவரை இதே கதைகளை எத்தனையோ முறை, எத்தனையோ விதங்களில் சொல்லிவிட்டார். ஒரு நாளும் திகட்டியதேயில்லை அவருக்கும் கேட்போருக்கும்.
இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
மனுசனுக்கு இந்த வயதிலும் வாய் ஓயவே மாட்டேங்கிறது. புளியங்கொட்டைப் பருப்பாட்டம் பற்கள் பளிச்சிங்குது. மேலுதட்டைக் கவ்விய மீசையும், கடுக்கன் காதும், பின்புற கூந்தலால் அலங்கரித்துக்கொண்ட முன்வழுக்கையும், பொலிக்காளையின் கொட்டேரியாட்டம் தோளும், கருங்கல் பலகைமாதிரியான நெஞ்சுரமும், கணுக்கால் வரைக்கும் ஒண்ணு போத்திக்க ஒண்ணு என  எப்பவும் ரெண்டு வேட்டியும், குச்சி ஊனாத நடையுமா மனுஷன் என்னா போடு போடுறார். ஆறடி உயர தேகம்கூட இன்னும் கூனு விழுகாதது ஊருக்கே ஆச்சரியம்தான்.
அதானால்தான் ஒரு சிறிய கல்மேலோ, ஏதேனுமொரு மரத்தின் வேரிலோ அமர்ந்து, இடது கால்மேல் வலதுகாலை தொங்கவிட்டு ஆட்டிக்கொண்டே சொல்லிக்கொண்டிருக்கிறார், இன்றைய தலைமுறை அறியாத, என்றும் மறந்துவிடக்கூடாத முந்தைய தலைமுறையின் வாழ்வையும், தியாகங்களையும், மண்கவுச்சியையும், மகத்துவங்களையும்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions