c சிறுகதை இழப்பு
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறுகதை இழப்பு

எம்.பாஸ்கர்
அது என் வீடுதான், எண்பதுகளில் நான் கட்டினது. வீடெங்கும் உறவுகள், நண்பர்கள். ஒரே ஊதுபத்திப் புகைமண்டலம். ஆனால் வாசனையை உணர முடியவில்லை. வீட்டின் மையப் பகுதியில் தெற்கு திசை நோக்கி என்னை கிடத்தி வைத்திருக்கிறார்கள். தலைமாட்டில் என் மனைவி கண்ணீருடன். மற்ற சுற்றமனைத்தும் என்னைச் சுற்றி, அதாவது எனது உடலைச்சுற்றி. ஆம் நான் செத்துவிட்டேன், நேற்றிரவு ஏதோ ஒரு மணித்துளியில், 69-ஆம் வயதில் நான் என் உடலை விட்டுப் பிரிந்துவிட்டேன். இறந்து பல மணி நேரங்களுக்குப் பிறகு இப்போதுதான் எனக்கு நினைவு தெரிகிறது. இடைப்பட்ட நேரத்தில் நடந்தவை ஞாபத்தில் இல்லை. மூர் மார்க்கெட்டில் நான் வாங்கிய பெண்டுலம் பொருந்திய பெரிய சுவர்க் கடிகாரம், என் மகன் வாங்கிய இருட்டிலும் ஒளிரக்கூடிய குவார்ட்ஸ் கடிகாரம் இரண்டுமே நின்று போயிருந்தது அல்லது நிறுத்தப்பட்டிருந்தது.
கூடியிருந்தவர்கள், குடும்பத்தினர் மட்டுமல்ல, அவர்களோடு சேர்ந்து அந்த வீடே அழுவதுபோல ஒருவித உணர்வு. ஒவ்வொரு சுவரும் எனைத் தேடுவதாகவும், தேம்புவதாகவும் தோன்றுகிறது. நான் இறந்துவிட்டபோதிலும் பாதி உயிர்தான் இங்கே பேசுகிறேன். மீதி உயிர் என்னுடைய இரண்டு பேரன் மற்றும் ஒரு பேத்தியிடம்தான் இருக்கவேண்டும். அத்தனைப் பாசம் அவர்களின்பால் எனக்கு. அவர்களைத்தான் அங்குமிங்கும் தேடுகிறேன். காணோம். ஒவ்வொரு அறையாக ஒவ்வொரு இடமாக  அவர்களை நான் தேடுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களால் என்னைக் காணமுடியவில்லை. இப்போது நான் இன்விசிபில் (வீஸீஸ்வீsவீதீறீமீ). மொட்டைமாடி, என் பராமரிப்பில் இருந்த சின்ன தோட்டம் எங்குமே காணக் கிடைக்கவில்லை அக்குழந்தைகள். என் கோபமும் பதட்டமும் அதிகரிக்கிறது. இறந்தும் இறக்கவில்லை இந்த ரத்த அழுத்தம். எங்கே அவர்கள்?
சின்னச்சின்ன இடைவெளி விட்டு தலையிலும் மார்பிலும் அடித்து அலறி அழுதுகொண்டு இருக்கிறது சுற்றம். என் மீது இவர்களுக்கு இத்தனைப் பிரியங்களா? இவர்கள் எப்போது சாதாரண மனநிலைக்குத் திரும்புவர்? நானில்லாமல் இவர்கள், குறிப்பாக என் மனைவி, மக்கள் தாக்குப் பிடிப்பது சாத்தியமின்றிப் போய்விடுமோ என நினைக்கிற அளவுக்கு அவர்களின் துக்கம் தூக்கலாயிருக்கிறது. அதையெல்லாம் தாண்டியும் அந்தக் குழந்தைகளின் முகத்தைக் காண்பதற்காக இல்லாத எனது இரு கண்களும் துடிக்கின்றன. என்ன செய்ய? மெதுவாய் வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட்டேன். பக்கத்தில் இருக்கும் சுசீலா வீட்டுக்கு என் குடும்பத்தினர் சிலர் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். அப்போதுதான் திடீரென்று ஒரு யோசனை. ஒருவேளை குழந்தைகள் பயப்படக் கூடாது என்பதற்காக சுசீலா விட்டில் விட்டிருக்கக்கூடும். தாமதிக்காமல் உடனே வேகமாக வீட்டினுள் நுழைந்தேன். மூட்டுவலி எனக்கிருந்ததை நானே மறந்து போயிருக்கிறேன்.
எதிர்பார்த்தபடியே சுசீலாவின் வீட்டு ஹாலில், அகலமான சோபாவில் ஒன்றன்மீது ஒன்றாக ஒரு குவியல்போல தூங்கிக்கொண்டு இருக்கின்றன அந்த மூன்று குழந்தைகள். இவ்வளவு நேரம் என் ஆவி (நானே ஆவிதான்) யாருக்காக துடித்ததோ அதே குழந்தைகள். அருகில் செல்கிறேன், எழுப்ப முயல்கிறேன். உடல் ரீதியாக எனது ஸ்பரிசம் சாத்தியப்படவில்லை. தூக்கத்தில் இருக்கும் குழந்தைகளானாலும் எழுப்பி பாசத்தைக் காண்பிக்கும் அந்த கெட்டபழக்கம் இப்பவும் மாறிவிடவில்லை. மூன்று பேரின் நெற்றியில் முத்தமிட்டு, திரும்பவும் என் வீட்டுக்கே  வருகிறேன். என் உடலைக் குளிரூட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணாடிப் பெட்டிக்கு அருகில் நானும் அமர்ந்து கொண்டேன். களைப்பு இல்லை. காப்பியோ, தண்ணியோ தேவைப்படாத மனநிலை. இதுவும் கூட  நன்றாகத்தான் இருக்கிறது.
அங்கே நடக்கிற நிகழ்வுகள் ரொம்பவே கலங்கச் செய்கின்றன. ஒரு மனுஷன் என்றேனும் ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும். இதற்கு ஏன் இப்படிக் கதறுது இந்த சுற்றம்? என் மகனும், மகளும், மருமகளும் நிலைகுலைந்த நிலையிலேயே இருக்கிறார்கள். எதுவுமே சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. சின்ன வயது, சமாளிக்க முடிகிறது. என் மனைவியின் நிலைதான் மோசம், படுமோசம். அழுது அழுது வீங்கியே போனது முகம். ஒரு கட்டத்தில் மயங்கிய நிலைக்கும் போய்விட்டாள். அவளை எப்படித்தான் தேற்றுவது எனத் தெரியாமல் செத்தும் சாகிறேன் நான். “அம்மாவை ஆசுவாசப்படுத்துங்க’’ என்று சொன்னால் அது யாருக்கும் கேட்கவில்லை. ஆறுதல் சொல்லும் உறுதியுடன் அவர்களும் இல்லை. மரணித்த எனக்கு மனதளவில் ஒரு பயம். இவர்களே இப்படியெனில் என் பேரக் குழந்தைகள் என் இழப்பை எப்படி எதிர்கொள்ளும்? தாங்கிக்கொள்ளும் சக்தி எப்படி கிடைக்கும்? அவர்களின் நாட்கள் விடிவதும், முடிவதும் நேற்றுவரை என்னோடுதான். “தாத்தா... தாத்தா’’ வென அவர்களின் உலகம், மகிழ்ச்சி எல்லாமே நானாகவே இருந்தேன். கார்ட்டூனையும், போகோவையும்கூட தாத்தாவுக்காக தாழடைக்கும் அசாதாரணமான அன்புச் சிகரங்கள் அவர்களின் தூய மனம். அவர்களின் அன்பு கலந்த அடுக்கடுக்கான நினைவுகளில் நீந்திக் கொண்டிருக்கிறேன், கால்கள் இல்லாமல்.
அப்போதுதான் வேகமாக வந்தாள் சுசீலா. “பசங்க முழிச்சிட்டாங்க. இங்க வர்றாங்களாம், ஒரே அடம். என்ன பண்ண? கூட்டிட்டு வந்திடட்டுமா?’’ என முணுமுணுத்தாள் சொந்தங்களின் காதில். சரியென்பதற்கான தலையசைப்பைத் தொடர்ந்து, ஐந்து நிமிடத்தில் என் பேரக் குழந்தைகளை அழைத்து வருகிறாள் சுசீலா.
என்ன ஒரு ஆச்சர்யம்! அதிர்ந்தே போகிறேன். குழந்தைகளின் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக்கூட கண்ணீர் வரவில்லை. ‘ஓ...’ வென கத்தியும் கதறவில்லை. ‘அய்யோ தாத்தா...’ என அலப்பறைகள் சிறிதும் இல்லை. தூக்கக் கலக்கத்தில் சின்னதாக ஒரு சோகத்தோடு என் உடலை வெகு அமைதியாக ஒரு பார்வை பார்த்தனர், அவ்வளவே. பேரக் குழந்தைகளைக் கண்டதும் என் மனைவிக்கு ஆத்திரம் அதிகரித்திருக்க வேண்டும், அழுகையின் வீரியம் அதிகரிக்கவே, “ரூமுக்குப் போய்ட்டு அமைதியா விளையாடுங்க.  இறந்துட்டதால நம்ம வீட்ல துக்கம்,  டி..வி போடக்கூடாது, சரியா?’’ என்றவாறே கைகளைப் பிடித்து ஓர் அறைக்குள் விட்டுவிட்டு வந்தான் என் மகன். அந்த அறைக்குச் செல்கிறேன். அவர்களைத் தொடாமல் தொடுகிறேன், முத்தமிடுகிறேன், கட்டி அணைக்கிறேன். எதையும் உணர முடியவில்லை அவர்களால். தாத்தா இல்லையே என்கிற சோகம் சிறிதும் இல்லை அப்பொடிசுகளுக்கு.
பின்னர் மீண்டும் என் உடலருகில் வந்தேன். நேரம் செல்லச் செல்ல உறவினர் ஒவ்வொருவரும் வந்து ஒப்பாரி வைக்கிறார்கள், குறிப்பாகப் பெண்கள். அவர்களில் ஒருசிலருக்கு அழுகையே வரவில்லை, வெறும் குரலால் அழுது, வராத சளியை வந்தது போல மூக்கைத் துடைத்துக் கொள்கிறார்கள் முந்தானையால். அதனைத் தொடர்ந்து நிறைய சம்பிரதாயங்கள், சாங்கியங்கள் செய்து என் உடலைச் சுற்றி வந்தார்கள் அக்குழந்தைகள் உள்பட. அப்பவும்கூட அழுகையோ, மிகப்பெரிய சோகமோ, வருத்தமோ இருப்பதாகத் தெரியவில்லை. இடுகாட்டுக்கான இறுதி ஊர்வலம் கிளம்பிய தருணத்தில் நடப்பவை உணர்ச்சிப் பூர்வமாக இருக்கிறது. எல்லோரும் எனக்காகத்தான் அழுகிறார்கள், நான்அவர்களுக்கு அருகில் இருப்பதை அறிந்திடாமல். என்ன செய்வது அவர்கள் உயிரோடிருக்கிறார்களே! நான் இல்லாமல் எப்படித்தான் இருக்கப்போகிறதோ இந்த உறவுகள்.
எல்லாமே முடிந்தது. எல்லா சொந்தங்களும் சென்றுவிட்டனர். மயானத்தில் இப்போது உயிரற்ற நானும், உயிருள்ள வெட்டியானும், அவனோடு சேர்ந்து மது குடிக்கும் இரண்டு நபர்கள் மட்டுமே.
நாட்கள் நகர்ந்தன. சின்னச் சின்னதாய் எனை மறந்து அவ்வப்போது விட்டுவிட்டு சுயநினைவுக்கு வந்துகொண்டிருக்கிறேன். அது ஏனென்று தெரியவில்லை. இரண்டு மூன்றுமுறை வீட்டுக்குப் போனேன். பெரிதாய் எதுவும் ஈர்ப்பு இல்லாததால் அடிக்கடி செல்லவில்லை. இன்று மீண்டும் வீட்டுக்குப் போகவேண்டும் என ஒரு உள்ளுணர்வு, தூண்டுதல். நினைத்த கனத்தில் ஒரு மாமரக் கிளையில் இருந்த நான் அடுத்த வினாடி என் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டேன். வீட்டுக்குள்ளே பயங்கர இரைச்சல். அந்த மனித இரைச்சல், என்னை தொந்தரவு செய்வதாக இருக்கிறது. மெதுவாக உள் நுழைகிறேன். வீட்டில் எல்லா உறவுகளும் எதிர்பார்த்திடாத அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த நிலையில், அப்போது தான் துவங்குகிறது என் வீட்டு பேரக் குழந்தைகளின் பாச உணர்வுகள். அதனை வார்த்தையில் வார்க்க முடியவில்லை. இரும்பை உருக்கும் ஆற்றல்கொண்ட அன்புடன், பேரன்புடன்  “தாத்தா எப்போ வருவார்?  தாத்தா வேணும்’’ என்கிற கோரிக்கையை முன்வைத்து அந்தச் சின்னஞ்சிறுசுகள் பெரிய கலகம் ஏற்படுத்தி கலக்கம் தந்துகொண்டிருக்கின்றன. என்னால் இந்த கணத்தில் எதுவும் செய்ய இயலவில்லை, அழவும் முடியவில்லை, ஆனாலும் அழுகிறேன், கண்ணீரே வராமல். சரியாக சாப்பிட்டே இரண்டு நாளாகிறது. சாப்பிட, பள்ளிக்குச் செல்ல, எதற்குமே ஒத்துழைக்காத அந்த பிள்ளைகளின் ஒட்டுமொத்த கோரிக்கை ‘தாத்தா’. இறந்து போன என்பால் இருந்த அன்பின் வெளிப்பாடாக இப்பத்தான் பெரிதாக வெடித்திருக்கிறது இந்த பெரும்போர்.
பெரியவர்களின் துக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. டி.வி., கடிகாரம் எல்லாம் இயங்குகிறது. இனி இவர்கள் என்ன ஆவார்கள் என்று நான் யாரை எல்லாம் நினைத்தேனோ, அவர்கள் எல்லாம் அமைதி ஆகிவிட்டார்கள்.
இருந்தபோதும், இறந்துவிட்டபோதும் ஒருவரின் ‘மிஸ்ஸிங்’ என்பதை எப்படியெல்லாம் அனுபவித்து, அந்த வேதனையை, வலியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது இந்தச் சின்னஞ்சிறு உள்ளங்கள். எல்லோரும் துடிக்கையில், என்னவென்கிற புரிதல் இல்லாமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் குழந்தைகள், எல்லோரும் மறந்த நிலையில் மரணித்தவரின் மீதான மாறாத அன்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் எப்படியெல்லாம் தவிக்குது! இவர்களின் ஒப்பனையற்ற உலகத்தில் சம்பிரதாய ஒப்பாரிகளுக்கு ஒருநாளும் வேலையிருப்பதில்லை.
பார்வைக்குத் தெரியாத என் இரு கைகளாலும் அந்த பேசும் தங்கங்களைக் கட்டி அணைக்கிறேன். உள்ளடக்க நினைக்கிறேன். உருகுகிறேன்.
ஏதோ ஒன்று என்னை எட்டுத் துண்டுகளாகப் பிரிக்கிறது. எனது ஜீவன் மேலும் தக்கையாகிறது எட்டுதுண்டுகளாக. அடுத்த கனமே எட்டு எண்பதாகிறது. பிறகு எட்டாயிரமாகிறது. மெதுவாக  என்னுலகம் இருட்டாகிறது. நான் கரைகிறேன், மறைகிறேன், ஒரு கட்டத்தில் எதுவுமே இல்லாமல் ஆகிறேன். காற்றாகிவிட்டேன் போல! அப்பவும் அந்தக் குழந்தைகளைத்தான்...

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions