நகரில் நடந்தவை
வாலி விருது 2016!
கவிஞர் வாலியின் ஆசியோடு தொடங்கப்பட்டது வாலி பதிப்பகம். கவிஞர் வாலியின் மறைவிற்குப்பின் வருடந்தோறும் கவிஞர் வாலி விருது என்ற பெயரில் இரண்டு விருதுகளை வழங்குகிறது. 2014-ஆம் ஆண்டு கவிஞர் நா.காமராசனுக்கும், எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும் வழங்கப்பட்ட இந்த விருது, 2015 -ஆம் ஆண்டு கவிஞர் மு.மேத்தாவிற்கும், எழுத்தாளர் வண்ணநிலவனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான (2016) விருதுகள், ‘பாசமலர்’, ‘வேட்டைக்காரன்’, ‘படித்தால் மட்டும் போதுமா?’ உள்பட கிட்டத்தட்ட 500 படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ஆரூர்தாஸ் அவர்களுக்கும், நாற்பது ஆண்டுகளாகக் கவிதை, கவிதை விமர்சனம், சிறுகதை எனத் தீவிரமாக இயங்கி வரும் கவிஞர் விக்ரமாதித்யனுக்கும் வழங்கப்பட்டது.
வாலியின் 85வது பிறந்த நாளில், சென்னை, தி.நகர்.ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் ரூபாய் 50,000 ரொக்கப் பரிசுடன், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது. இவ்விருதை திரைப்பட இயக்குநர் மகேந்திரன் அவர்கள் வழங்கினார்.
திரைப்பட ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் தொகுத்த ‘பல்லவி மன்னன் வாலி’ என்ற நூலை இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் வெளியிட கே.ஆர்.ரமேஷ் குழந்தைராஜ் பெற்றுக்கொண்டார். பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் பழனிபாரதி, சாமிநாதன், வெங்கடாச்சலம், மை.பா.நாராயணன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் விழாக் குழுவாக இருந்து விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா வரவேற்புரை நல்க, டாக்டர் சங்கர சரவணன், வழக்கறிஞர் சுமதி, பேராசிரியர் ஜி.ஆர்.மகாதேவன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். திருச்சி நகைச்சுவை மன்ற சிவகுருநாதன் நிகழ்வை அழகாக ஒருங்கிணைத்தார்.
-கருப்பையா