காவியன் பள்ளி 8ஆம் ஆண்டு விழா
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அம்மையநாயக்கனூரில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள காவியன் பள்ளியின் எட்டாம் ஆண்டு விழா 05.11.2016 அன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் காவியன் பள்ளி ஒருங்கிணைப்பாளர் வாஞ்சையுடன் வரவேற்க, பள்ளியின் 2015-2016 ஆம் கல்வி ஆண்டின் நிகழ்வுகளைத் தொகுத்து ஆண்டறிக்கையாக ஆங்கிலத்தில் வழங்கினார் பள்ளி முதல்வர். அதைத் தொடர்ந்து அவ்வறிக்கை தமிழிலும் வாசிக்கப்பட்டது.
பிறகு மாணவர்களையும், பெற்றோர்களையும், பொதுமக்களையும் வரவேற்கும் விதமாக மகிழ்வான வரவேற்பு நடனம் (மூன்று மாநில நடன அசைவுகளுடன்) அற்புதமாக நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டுப்புறத்து நடனத்தை ஆடி அனைவரது கவனத்தையும், கைத்தட்டுகளையும் பெற்றார்கள் நமது மாணாக்கர்கள். மருத்துவமனையில் அரங்கேறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நம் மழலையர்கள் அரங்கேற்றிய ஆங்கில நாடகம் பார்வையாளர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியது. அதற்கடுத்து எழுபதுகளின் நடனங்களை நம் கண்முன் கொண்டுவந்து (hippies hop) மகிழ்வித்தார்கள் மாணவர்கள்.
இதனையடுத்து மேற்கத்திய பாடல்களை இசையோடு ராகம், தாளம் மாறாமல் (karaoke) ஆசிரிய, ஆசிரியைகளுடன் மாணவர்களும் சேர்ந்து பாடி இசைச்சாரலைப் பார்வையாளர்கள் மேல் தெளித்தார்கள். இறுதியாக கோபியர்கள் புடைசூழ கண்ணன் - ராதை நடனத்தை நிகழ்த்தி கோகுலத்தை கண்முன் கொண்டு வந்தார்கள்.
ஒவ்வொரு கலைநிகழ்ச்சிக்குப் பிறகான இடைவெளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், நூறு சதவிகித வருகைப் பதிவு எடுத்தவர்கள், விளையாட்டுப் போட்டிகள், அரங்கப் போட்டிகள், ஓவியப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், மாணாக்கர்கள் அனைவருக்கும் காவியன் பள்ளி தமிழாசிரியை நன்றி நவிழ, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.