c காவிரி : திறக்காத மனமும் அமையாத ஆணையமும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

காவிரி : திறக்காத மனமும் அமையாத ஆணையமும்

காவிரிப் பிரச்சனை என்ற சொல் அடிக்கடி பேச்சிலும் எழுத்திலும் இப்பொழுதெல்லாம் வழங்கப்படுகிறது. காவிரி எப்போது பிரச்சனை ஆனது? மிகக் குறுகிய நோக்கம் கொண்ட அரசியலும், தேர்தலுமே நதி நீரைப் பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல கோடி மக்களுக்கு உண்ணும் நீராகவும், உண்ணும் சோற்றை விளைவிக்கும் உயிர்த்துணையாகவும் விளங்குவது காவிரி. ஒரு ஆறு என்பதைத் தாண்டி அதைத் தாய் என்று பேணி, ‘காவிரித் தாய்’ என்று வழங்கி அன்பு செலுத்தினார்கள் தமிழர்கள். ‘நடந்தாய் வாழி காவேரி’ என்றார் சிலம்பு தந்த இளங்கோவடிகள். சுமார் 800 கிலோமீட்டர் நடந்து, செல்லும் வழியெல்லாம் பல்லுயிர்களையும் வாழவைத்த நீர் ஆதாரம் அது.

கடந்த 50 ஆண்டுகளாகவே காவிரி பற்றிய வழக்குகளைச் சிறிய பெரிய உச்சநீதிமன்றங்கள் சந்தித்து வந்திருக்கின்றன. அந்த அந்தச் சந்தர்ப்பங்களுக்கு உகந்த தீர்ப்புகளை அவை வழங்கி வந்திருக்கின்றன.

எதுவும் நிரந்தரத் தீர்வை நல்கவில்லை. இது நீதிமன்றங்களின் தவறு இல்லை. குறிப்பிட்ட அளவு நீரை அடுத்த மாநிலத்திற்குத் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், மாநிலம் மறுக்கிற அத்துமீறல் நமக்கு வருத்தம் அளிக்கிறது.

காவிரி நதி நீர்ப் பகிர்வு, தமிழக -- கர்நாடகாவின் பிரச்சனை இல்லை. அது இந்தியப் பிரச்சனை. இதைச் சுமுகமாகத் தீர்த்து வைக்கும் வாய்ப்பு பிரதமருக்கு வாய்த்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்ததை நல்ல வாய்ப்பாக நாம் கருதினோம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நாடாளுமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்டது என்று அரசின் நிலைப்பாட்டை அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் சொல்ல, மேலாண்மை வாரியம் அமைக்கும் நல்ல வாய்ப்பு நழுவிப் போய்விட்டது.

ஆனால், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் ஒரு முக்கிய கருத்தை அறிவித்துள்ளது. மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க முடியும் என்கிறார்கள், அந்த மூத்த பொறியாளர்கள்.

தமிழர்களின் நீர் ஆதாரப் பிரச்சனையும், உயிர்ப் பிரச்சனையுமான காவிரிப் பங்கீடு விஷயத்திலும்கூட தமிழக அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை நிலவவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி ஆகும்.

தமிழக ஆளும் கட்சியின் மக்களவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் 47 பேர், பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு அது கிடைக்காமல், அவர்கள் பிரதமர் அலுவலக அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்து வந்ததாகச் செய்திகள் வருகின்றன. இதைத் தொடர்ந்து, தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்கிற அச்சம் தமிழர்களிடம் தோன்றி இருப்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

நாடாளுமன்ற மக்களவை மேலவை உறுப்பினர்கள் பிரதமரின் அலுவலகம் நோக்கி நடக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிக்காரர்களையும் இணைத்துக்கொண்டு அவர்கள் பேரணி நடத்தி இருந்தால், குறைந்தபட்ச கவனத்தையாவது பிரதமரிடமிருந்து ஈர்த்திருக்கலாம்.

பல மேலாண்மை வாரியங்கள், முன் பல நன்மைகளை இந்திய அளவில் சந்தித்து இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பக்ரா -- பியாஸ் மேலாண்மை வாரியத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இமாசலம் தொடங்கி டெல்லி, சண்டிகார், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் வரை நீரைப் பகிர்ந்தளிக்கிறது இந்த வாரியம். இது ஒரு வெற்றிகரமான முன் மாதிரியாகச் செயல்படுகிறது.

கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கு நீரைப் பகிர்ந்தளிக்கும் பெரும் பணியைக் காவிரி மேலாண்மை வாரியம் செய்யக்கூடும். அது எத்தனை விரைவில் சாத்தியமாகிறதோ, அத்தனைச் சீக்கிரமாக இந்த மூன்று மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மனப்பிணக்கு தீரும்.

நீர் என்ற உயிர் ஆதாரத்தை எந்த மாநிலமும் உருவாக்கவில்லை. ஆகவே, எந்த மாநிலமும் அதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது. மாநிலப் பிரிப்பு அரசுகள் செய்தது. இயற்கை செய்தது இல்லை. ஓடும் நதிக்கு இது தமிழ், இது கர்நாடகம் என்றெல்லாம் தெரியாது. அது ஓடும். மனித குலம் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், பணிவோடும், அன்போடும்.

கடை அடைப்பு, பஸ் எரிப்பு, மனிதர்கள் மேல் தாக்குதல் என்பதெல்லாம் நாகரிகச் சமுதாயம் சிந்திக்கக் கூடாத தீமைகள்.

உட்கார்ந்து மனம் திறந்து பேசி, பிரச்சனையை, சிக்கலைத் தீர்த்துக் கொள்வதே நாகரிகம் என்பதன் அடையாளம்.

காவிரியை முன் வைத்து வாக்கு அரசியல் செய்வது அநாகரிகம் மட்டுமல்ல, மனித விரோதப் போக்கும் கூட.

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions