c உலக சினிமா-3 - ஜப்பான்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உலக சினிமா-3 - ஜப்பான்

டெர்சு உஜாலா

பெரு நகரங்களின் காலை நேரப்  பூங்காக்களில் வேக வேகமாக தொப்பை குலுங்க நடக்கும் மனிதன் எதை தேடுகிறான், தொலைத்த இயற்கையைத் தான்.

இன்றைய யுகத்தின் அதிமுக்கிய பிரச்சனையே இதுதான்.

நவீன மனிதன் தொடக்கத்தில் இயற்கையை தன் எதிரியாக நினைத்தான். இயற்கையான காற்று, இயற்கையான நீர், இயற்கையான உணவு, எல்லாவற்றையும் வெறுத்து, செயற்கை எனும் மாயவலையை அவனே பின்னிக்கொண்டான்.

இல்லாத நோய்கள் அனைத்தும் அவனை சூழ்ந்துகொள்ள, இப்போது அந்த செயற்கை கூண்டிலிருந்து இயற்கையைத் தேடி வெளியேற முயற்சிக்கிறான். இதுதான் இன்றைய  மனிதனின் அதி முக்கியமான பிரச்சனை.

இந்த பிரச்சனையை 1975லேயே உலகுக்கு தன் அற்புதமான திரைப்படம் மூலம் உணர்த்தியவர் அகிராகுரசேவா.

டெர்சு உஜாலா. இதுதான் அவர் இயக்கிய அந்த அதிமுக்கியமான திரைப்படம். ரோஷமான், செவன் சாமுராய் போன்ற படங்களின் மூலம் உலகின் தலைசிறந்த இயக்குநர் என  பெருமதி பெற்றவர். ஜப்பானை சேர்ந்த அகிராகுரசேவா, கிழக்கு, மேற்கு என்ற இரு தத்துவங்களும் இணைந்து ஏற்றுகொண்ட பிதாமகன்.

1943ல் துவங்கி 1999வரை 57 வருடங்கள் கொண்ட அவருடைய  இடைவிடாத கலைப் பயணத்தில்  பல உச்சங்களை அவரால் அடைய  முடிந்தது.

அப்படிப்பட்டவருக்கும் ஒருமுறை தடுமாற்றம்.

1970ல் அவர் உருவாக்கிய டோடெஸ்     காடென் (Dodes Kaden) எனும் திரைப்படம்  வணிக ரீதியாக படு தோல்வியுற்றது. இந்த தோல்வி அவரை பாதிக்க, 30முறை தன் ரேசரால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ஜப்பானிய மரபில் தற்கொலை என்பது ஹரகிரி என்ற பெயரால் அங்கீகரிக்கப்பட்ட விஷயம். பிற்பாடு குணமாகி மீண்டு வந்தார். மீண்டும் கலையுடனான தன் சமரைத் துவக்க முடிவு செய்தார்.  இம்முறை அவர் இயக்க தேர்ந்தெடுத்த படம் தான் டெர்சு உஜாலா. ஒரு ரஷ்ய நிறுவனம் தானாக முன் வந்தது. ரஷ்யாவில் புகழ்பெற்ற ஒரு ராணுவ வீரனின் அனுபவத்தை மையமாகக்கொண்ட நாவலை படமாக்க முடிவு செய்து குரசேவாவை உதவியாளர்கள் மூலமாக அணுகியதன் காரணமாக   இப்படத்தை இயக்க ஒத்துக்கொண்டார்.

என்னதான் குரசேவா உலக சினிமா இயக்குநராக இருந்தாலும், அவர் தன் சொந்த மண்ணான ஜப்பானின் நிலப்பரப்பைவிட்டு வெளியே சென்றதேயில்லை. துவக்கத்தில் யோசித்த குரசேவா பிற்பாடு இப்படைப்பை இயக்க ஒத்துக்கொண்டு களமிறங்கினார்.

டெர்சு உஜாலா

கதை:

கேப்டன் ஆர்சினிவ் எனும் ராணுவ உயர் அதிகாரிக்கும், காட்டில் வசிக்கும் ஒரு நாடோடிக்குமான உறவுதான் கதை.

மூன்று வருடங்களுக்கு முன் இறந்த நண்பனின் உடல் எரிக்கப்பட்ட இடத்தை, சைபீரியக் காட்டில் கேப்டன் ஆர்சினிவ் தேடுவதிலிருந்து துவங்கும் கதை, அப்படியே ப்ளாஷ்பேக்கில் முதன்முறையாக அந்த நண்பனை சந்தித்த காலகட்டத்தினுள் விரிகிறது.

நகர நிர்மாணத்திற்காகக் காட்டை அழிக்கும் முனைப்பிலிருக்கும் அரசாங்கம், அதற்காக ராணுவ அதிகாரியான ஆர்சினிவ் உடன் ஒரு படையைக் காட்டுக்குள் அனுப்புகிறது. மர்மங்களும், புதிர்களும் நிறைந்த காட்டில் ராணுவ வீரர்கள் திக்கு தெரியாமல் சிக்கிக்கொண்டு பரிதவிக்கின்றனர். அச்சமயம் அந்த வழியாக வருபவன் காட்டுவாசியான டெர்சு உஜாலா.

வழி தவறி குழம்பிக் கிடந்த படையினருக்கு டெர்சு ஒரு வழிகாட்டியாக உதவி செய்கிறான். அவனுடைய அழுக்கான தோற்றம், கொச்சையான பேச்சு எதுவும் அந்தக் குழுவினருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை. துவக்கத்தில் கேப்டன் ஆர்சினிவுக்கும் டெர்சுவின் தோற்றமும், பேச்சும் அப்படியாகத்தானிருந்தது. ஆனால் காடு அவனுக்கு அத்துபடியாக இருந்தது. காட்டின் ஒவ்வொரு அசைவிலும் ஆயிரம் அர்த்தங்களை அவன் கண்டுபிடித்து வைத்திருந்தான். பறவைகளின் ஒலிக் குறிப்புகள், மிருகங்களின் காலடித் தடங்கள் இவற்றிற்கெல்லாம் வினோத சங்கேதங்களை அவன் அறிந்து வைத்திருந்தான். அவனது உள்ளுணர்வின் அதிசயத் தன்மை கண்டு படை வீரர்கள் பிரமிக்கின்றனர். வழியில் பாழ்பட்ட ஒரு குடிசையைச் சரிசெய்து அதில் உணவுக்கு தேவையான பொருட்களையும் வைத்துவிட்டுச் செல்கிறான். காரணம் தங்களுக்குப் பின்னால் காட்டில் வரும் வழிபோக்கர்கள் இளைப்பாறுவதற்கும், பசியாறுவதற்கும் அது உதவும் என அவன் கூறுமளவிற்கு அவனுடைய நுண்ணுணர்வும், மனிதநேயமும் இருப்பதைக்கண்டு வீரர்கள் பிரமிக்கின்றனர்.

ஒருமுறை கேப்டன் ஆர்சினிவ், டெர்சு உஜாலா இருவரும் ஆபத்தான பெரும் பனிப்புயலில் சிக்கிக்கொள்ள டெர்சு சடுதியில் கையில் கிடைத்த கோரைகளை வைத்து சிறு அரண் உருவாக்கிப் போராடுகிறான். புயலின் கடுமை ஒரு கட்டத்தில் உக்கிரமாக, கேப்டன் உறைகுளிரில் சாவை நெருங்கிச் செல்ல டெர்சு போராடி அவரைக் காப்பாற்றிவிடுகிறான். மறுநாள் அவர்களைத் தேடும் வீரர்கள், மயங்கிய நிலையில் இருக்கும் இருவரையும் காப்பாற்றி உயிர்ப் பிழைக்க வைக்கின்றனர். அதன்பிறகு ஒருநாள் பழங்குடி வீட்டில் தங்கித் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, இப்போது டெர்சு கேப்டனிடம், அடுத்து எந்த திசையில் நாம் பயணிக்கப் போகிறோம், எனக் கேட்க, மவுனமாக இருக்கும் கேப்டன் குரலில் உயிர் பயம் தொனிக்க, நகரத்திற்கு திரும்புகிறோம் எனக் கூறுகிறான்.

தன் உயிரைக் காப்பாற்றிய  டெர்சுவையும்  கேப்டன் தங்களுடன் வருமாறு நகரத்திற்கு அழைக்க, டெர்சு மறுக்கிறான். தன்னுடைய வழக்கமான பயணத்தைக் காட்டில் தொடரப் போவதாகக் கூறி, மறுநாள் ரயில்வே ட்ராக்கினூடே தனியாக காட்டுக்குள் மறைகிறான்.

இது நிகழ்ந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு, கேப்டன் ஆர்சினிவை, வேறு ஒரு திட்டக் களஆய்வுக்காக மீண்டும் காட்டிற்குப் படையினருடன் அனுப்பி வைக்கிறது அரசாங்கம். இது வேறு காட்டுப் பகுதியானாலும் கேப்டனுக்கு டெர்சுவின் ஞாபகம் வராமலில்லை. அந்த மனிதம் நிறைந்த நாடோடி காட்டுவாசி தன் கண்ணில் தென்படமாட்டானா என ஏக்கம் கொள்கிறார். ஒரு வீரன், தான் அப்படிப்பட்ட ஒருவரைப் பார்த்ததாகக் கூற கேப்டனுக்கு நம்பிக்கையில்லை. அவன் பார்த்ததாகச் சொன்ன இடத்துக்கு விரைந்து தேடலைத் துவக்குகிறார். சட்டென அவர் கண்ணில் டெர்சு. உணர்ச்சி வசப்பட்டவராய் அவனை அழைக்க, அவனும் திரும்ப, இருவரும் அன்பு மிகுதியால் கட்டிபிடித்து உணர்ச்சி வயப்படுகின்றனர்.

கேப்டனின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறையும் மீண்டும் டெர்சு அவர்களைக் காட்டில் வழி நடத்தும் பணியை ஏற்கிறான். ஒரு ஆற்றை கடக்கவேண்டிய சூழல் நிர்பந்திக்க, மற்றவர்களைக் குதிரையில் அனுப்பிவிட்டு சிறிதளவு வீரர்களை, சிறிய தெப்பத்தில் ஏற்றிக்கொண்டு டெர்சுவும் கேப்டனும் பயணிக்கின்றனர்.

திடுமென ஆற்றில் வெள்ளம் கரைபுரள, ஒரு பாறையில் மோதி தெப்பம் உடைய, சடுதியில் பெரும் அருவி வேறு சமீபிக்க, ஒருவர் மட்டுமே பிழைக்க முடிந்த நெருக்கடியில், மீண்டும் கேப்டனை காப்பற்றி ஆபத்தான சூழலில் தானும் பிழைத்துக் கொள்கிறார். தொடர்ந்த பயணத்தில் டெர்சுவின் வயதான தன்மை காரணமாக கண்பார்வை மங்கிவிட்டதை உணர்ந்த கேப்டன் இம்முறை பயணம் முடிந்ததும் வலுக்கட்டாயமாக தன்னோடு நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

டெர்சுவுக்கு அதில் இஷ்டமில்லை என்றாலும் கேப்டன் தன் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பு அவரை நெகிழ்த்துகிறது.

காட்டுச்செடியாக அழுக்கு உடையுடன் திரிந்த டெர்சுவால் கான்கிரீட் நகரத்துக்குள் வாழமுடியவில்லை. நகரத்தில் அவருடைய தோற்றம் வேடிக்கைப் பொருளாக, வாழத் தகுதியற்றதாகக் கருதப்படுகிறது. கேப்டனின் வீடு அவருக்குச் சிறையாக மாறுகிறது. காட்டில் தன்னிச்சையாக வளரும் மரத்தை போன்சாயாக வீட்டில் சுருக்கி வைத்திருக்கும் மனிதமனம் அவருக்குப் பதட்டத்தை உருவாக்கிவிடுகிறது. என்னதான் கேப்டன் தன்னோடு அன்பாகப் பழகினாலும் அவர் வீட்டாரால் டெர்சுவை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒருநாள் வீடு திரும்பும் கேப்டன், தன் அன்புக்குரிய காட்டுவாசி டெர்சுவைக் காணாமல் தேடுகிறார். நகரத்து மனிதர்களின் செயற்கையான வாழ்க்கை பிடிக்காமல், டெர்சு காட்டுக்கே திரும்பிவிட்டதை அறிகிறார்.

சிலகாலம் கழித்து காட்டில் கண்டெடுக்கப்பட்ட பனிச்சடலம்  பற்றிய தகவல் கேப்டனுக்கு  வருகிறது. சடலத்தில் கேப்டனின் அழைப்பு அட்டை அதில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கேப்டன் அங்கு வந்து பார்த்தபின்தான் அது கொலை என அறிகிறார். டெர்சுவை யாரோ தான் பரிசாக அவருக்கு வழங்கிய துப்பாக்கிக்காக, கொலை செய்திருக்கக்கூடும் என  தெரிகிறபோது அவரைக் கொன்றது தான் மட்டுமல்ல, செயற்கையான நகரமும்தான்  என்பதாக உணர்கிறார்.

1971ல் தயாரிப்பு வேலைகள் துவக்கப்பட்டு 1975வரை ஐந்து வருட தயாரிப்புக்குப் பின்னரே படம் வெளியானது. குரசேவாவின் தயாரிப்பில் அதிக நாளை எடுத்துக்கொண்ட படம் இது. படப்பிடிப்பில் ஒருகட்டத்தில் பனிக்காலம் காரணமாகத் தொடரமுடியாமல் போய் மீண்டும் வந்தபோது புற்கள் அவ்வளவாய் வளராமல் இருக்க, மீண்டும் ஆளுயரத்திற்கு கோரை புற்கள் வளர்வதற்காக ஒருவருடம் அவர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார். பலரும் அதைப்போல புற்கள் நன்கு வளர்ந்த வேறு இடத்தில் அல்லது செட் போட்டுப் படப்பிடிப்பை நடத்தலாம் எனக் கூற குரசேவா மறுத்துவிட்டார். ஒரு வருடத்திற்குப் பின் மீண்டும் அதேபோல புற்கள் வளர்ந்த பின்தான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.

1975ல் வெளியான இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான ஆஸ்காரை வென்றது.

தோல்வியிலிருந்து எப்படி மீள்வது என்பதற்கு அகிராவின் இந்த படம் ஒவ்வொரு இயக்குநருக்கும் பாடம்.

கலையின் மீதும், மனிதத்தின் மீதும் தீராத காதல் கொண்டவர்களை  காலம் மேலும் மேலுமான உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு, அகிராவின் வாழ்க்கையும் டெர்சு உஜாலாவும் சிறந்த பாடம்.

-அடுத்த இதழில்....
அகிராகுரசேவா

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions